Tuesday, February 1, 2011

திருவாசகம்- நீத்தல் விண்ணப்பம்- மூன்று



கட்டளைக் கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது 

பாடல்: 5

செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில்மொழியாரில் பல்நாள்
விழுகின்ற  என்னை விடுதி கண்டாய் வெறிவாய் அறுகால் 
உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கரசே 
வழிநின்று(*) நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே 

விளக்கம்:
 ஈக்கள் உழுகின்ற பூக்களைத் தரித்த சடைமுடியுள்ள உத்தரகோச மங்கைக்கு அரசே! செழிந்து எரிகின்ற தீயில் புகும் ஒரு விட்டில் பூச்சியைப் போல மாதர்களின் வீடுகளின் நான் விழுந்து கிடக்கின்றேன்! என்னை கைவிட்டுவிடாதே! 
என் வழி நின்று உன் அருள் அமுதை நீ எனக்கு ஊட்டினாய்! அதை மறுத்தேனே! நான் எவ்வளவு பெரிய பாவி! என மாணிக்கவாசகர் புலம்புகிறார்! 

சில்மொழியார்+ இல் = சில்லென்று அல்லது சிறிதாக பேசும் பெண்டிரின் வீடு (இல்= வீடு) 

வெறிவாய் அறுகால்= பூவிலுள்ள தேனை மோகித்து வரும் ஆறு கால்களை உடைய ஈக்கள்.
  
(நண்பர்களே! வெறிவாய் அறுகால் என்ற உவமை மிகப் பிரமாதம்!)
(*) மாணிக்கவாசகருக்கு அவரது  பயணத்தின் நடுவில் சிவபெருமான் காட்சி அளித்ததாக ஒரு நம்பிக்கை உண்டு.  

பாடல்: 6
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே 
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி 
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கரசே 
பொறுப்பார் அன்றே  பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே  


விளக்கம்:


அறியாமையால் உன் அருளை நான் மறுத்துவிட்டேன்! என் மணியே! என்னை வெறுத்து, கைவிட்டுவிடாதே! என் வினைகளை மொத்தமாக (வினையின் தொகுதி) களைந்து என்னை ஆண்டு கொள்வாயாக! 
உத்தரகோசமங்கைக்கரசே! 
சிறுநாய்களின்  பொய்களை பெரியோர் பொறுத்துக்கொள்வார்கள் அல்லவே! அவ்வாறு என்னையும் பொறுத்து கொள்க!  

பாடல் : 7


பொய்யவனேனைப்  பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று 
மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே 
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே 

விளக்கம்: 


ஆலகாலம் என்ற நஞ்சை உண்டதால் மை போன்ற கருநிறமான கழுத்தை  கொண்ட உத்தரகோசமங்கைக்கரசே! எல்லா வினைகளையும் செய்யக்கூடிய செய்யவனே! சிவனே! இந்த சிறியவனின் பாவங்களை தீர்ப்பவனே! 

பொய்யனான என்னையும் ஒரு பொருள் எனக் கருதி உன்னிடம் பொத்தி வைத்துக்கொண்ட மெய்யானவனே! என்னை விட்டிடுதி!   

பாடல்: 8 


தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீர்அருள் என்கொல் என்று 
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கரசே 
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே

விளக்கம்: 

உன்னை எதிர்த்தோர் அஞ்சி நடுங்குமாறு ஆர்த்துக் கொண்டிருக்கின்ற மணிகளை அணிந்துள்ள எருதினை வாகனமாகக் கொண்ட  உத்தரகோசமங்கைக்கரசே!  என்னை ஐம்புலன்கள் ஒரு பக்கம் ஈர்க்கிறது! அது தவறு என நான் அஞ்சவும் செய்கிறேன்! இவ்வாறு இருதலையாக நான் தவிக்கிறேன்! 
 உன் அருள் இருந்தாலும் கூட அது என் பிழைகளை தீர்க்கும் வழி யாது எனக் கலங்குகின்ற (கலங்கும் வகையில் பிழை புரிந்துள்ள)  என்னை விட்டிடுதி! 


ஈர்க்கின்ற அஞ்சு= ஐம்புலன்கள்
தார் விடை= மாலையை அணிந்துள்ள எருது 

No comments:

Post a Comment