Thursday, February 24, 2011

அரசியல் மாற்றங்கள்: அரசு மற்றும் அரசியல்

என்னடா இது 30 வருஷம் ஆண்டதுகே ஹோஸ்னி முபாரக்க இந்த பாடு படுத்தறானுங்களே, பக்கத்துலயே 42 வருஷமா நம்ம கடாபி இருக்காரே! ஒரு சத்தத்தையும் காணோமேன்னு பாத்தேன்!






வந்துருச்சு! லிபியாவுல எல்லாருக்கும் சொரண வந்துருச்சு. அப்பிடியே ஜிம்பாப்வே-லயும் சொரண வந்துட்டா பரவால்ல. ROBERT MUGABE ரொம்ப நாளா நானும் ரவுடிதான்! நானும் ரவுடிதான்னு வருஷக்கணக்கில ஆண்டுகிட்டிருக்காரு! எல்லாரும் முயற்சி பண்ணிட்டாங்க! எதிர்கட்சித் தலைவர் MORGAN TSIVENGIRAI புலம்பு புலம்புன்னு புலம்பிட்டாரு! ஒண்ணும் நடக்கல! 



இப்போ என்னடான்னா நம்ம ஆனந்தவிகடனே Mohammad Kataafi -க்கு எதிரா வசனம் பேசற அளவுக்கு இது வளந்துருச்சி! என்னா கொடும சாமி! ஆனந்த விகடன் கூடவே ஒரு கோரிக்கை வேற வைக்கறான்! அது இன்னான்னா, இருபது வருஷமா இங்க ஒரு கொடுங்கோலன் ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்காரே, அந்தாள எப்போ தூக்கப் போறீங்கன்னு மக்கள்கிட்டே கேள்வி கேக்கறான்! 

விபச்சாரம் ரொம்ப பழைய தொழில்தான்! ஆனாலும் நம்ம ஆனந்தவிகடன் பண்ற விபச்சாரம் ரொம்ப புதுசு! நம்ம புரட்சி மருத்துவர் ராமதாஸ் பண்ற அரசியல் விபச்சாரத்த விட ரொம்ப powerful ஆனது. (Please refer Mathi's cartoon-Ramadoss as a prostitute waiting for the ADMK truck, where the driver is Ms. Jayalalitha). 

எவனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கோ அவனோட கால்கள கழுவ ஆனந்தவிகடன் தயங்கினதே இல்ல! இது S .S . வாசன் காலத்துல  இருந்து தொடருது! நான் கூட ஆனந்தவிகடன ஒரு அறிவுக் களஞ்சியம்னு நெனச்ச  காலம் ஒண்ணு உண்டு. அந்த மாதிரி இப்ப கூட  நெனச்சிக்கிட்டிருக்கிற  பல அறியாப் பசங்களப் பாத்து நான்  இரக்கப்படுறேன்!  

சாதி வண்ணத்த நிறைவா, மக்கள் கிட்ட  பூசுகிற  ஒரு பத்திரிக்கதான்  ஆனந்தவிகடன்! அந்த சாதிவண்ணம்  எது என்றால், பார்ப்பனீயம் மற்றும் முக்குலம்! 

ஒரே ஒரு உதாரணம்! எழுத்தாளன்  பாலகுமாரன், உதவிஇயக்குனருங்களைப்  பத்தி கொஞ்சம் கோவமா பேசிட்டான்! அவனுங்க எல்லாம் தின்னுட்டு தின்னுட்டு கிராமத்துல இருந்து  பொண்ணுங்கள கட்டிக்கிட்டு  வெட்டியா, பூமிக்கி பாரமா இருக்கத்தான்  லாயக்கு-ன்னு பேசிட்டான்! ஊர்ல இருக்கிற எல்லா ASSISTANT DIRECTORS -ம், ஏற்கனவே அப்பிடி இருந்து அப்ப DIRECTORS -ஆனவங்களும் பயங்கரமா கோவப்பட்டு நம்ம பாலகுமாரன கண்டிச்சாங்க! டைரக்டர் சேரன் பாலகுமாரன மடக்கி மடக்கி அடிச்சார்! 

அடுத்த வாரமே ஆனந்த விகடன்-ல ஒரு தொடருக்கான விளம்பரம் வருதே பாருங்க அப்பம்-வடை-தயிர்சாதம்-னு. அப்பத்தான் தெரிஞ்சிது. ஆனந்தவிகடனோட பூணூல அறுத்தெடுத்தாலும் அதனோட பார்ப்பனீயம் அழியப் போவதில்ல-ன்னு. ஏன்னா, பார்ப்பனீயம் அதனோட பூனூல்ல இல்ல. பூணூல் மாதிரி ஓடுற நரம்புகளல இருக்குன்னு.    
       

Sunday, February 20, 2011

சட்டம் என் கையில்

                 
இந்தியர்களோட பாலியல் வறுமை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல. சில பல இடங்கள்-ல நானும் எழுதியிருக்கேன். இது ஆசிய மக்களுக்கு ரொம்ப பொதுவான விஷயம்.
பிரசாந்த்-ன்னு ஒரு டிரைவர். ஸ்கூல் பஸ் ஒண்ணுல டிரைவரா இருக்கான். இன்னிக்கி அவன் ரொம்ப Famous  ஆயிட்டான். டிவி-ல எல்லாம் காட்டறாங்க. பேட்டி எடுக்கறாங்க. அவனும் டாட்டா காட்டிக்கிட்டே போலீஸ் வேன்-ல ஏறிப் போறான். 

பிரச்சின இது தான். அவன் ஸ்கூல் புள்ளைங்க கிட்ட ஏதோ 'சில்மிஷம்' பண்ணிட்டான் போல. பாதிக்கப் பட்ட பொண்ணுங்களோ அழுதுக்கிட்டே 'அவன் என் கையத் தொட்டான். என் கன்னத்துல கைய வச்சான்' அப்பிடின்னு சொல்லுதுங்க. அதுக்கப்பறம் தானே இருக்கு கிளைமாக்சு. 

வீர தீர சூரப்புலிகள் கொஞ்ச  பேரு வந்தானுங்க. அடிச்சானுங்க பாருங்க நம்ம பிரசாந்த்த.... ஐயோ! அம்மா!- அவங்க அம்மாக் கிட்ட குடிச்ச பாலையெல்லாம் ரத்தமா கக்கிட்டான் அவன்.  (யார் கண்டது! பிரசாந்த், நம்ம சாரு மாதிரி களப்பணி செஞ்சிருந்தாலும் செஞ்சிருக்கலாம்.) 

அடிச்சவனோட ஒவ்வொருத்தன் மூஞ்சியையும் close -up ல காமிச்சான் டிவி காரன். என்னா ஒரு வெறி! அவன மடக்கி மடக்கி அடிச்சி எல்லா பயபுள்ளங்களுக்கும் விரலு வீங்கிடுச்சி போல. பிரசாந்த்தும் டிவி-க்கு பேட்டி குடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷன்-க்கு கெளம்பிட்டான். 

எனக்கு இதிலிருந்து சில கிளைக்கேள்விகள் முளைக்கிறது. 
1 . சட்டத்தை கையிலெடுக்கும் உரிமையை இந்த தற்குறிகளுக்கு யார் வழங்கியது? 
2 . அவர்கள் அடித்த அடியில் அவனுக்கு ஏதாவது ஒன்று ஆகியிருந்தால் யார் மேல் போலீஸ் வழக்கு போடும்? 
3 .ஒவ்வொருவரும் தான் செய்வது சரி என்று எவ்வாறு தீர்மானிக்கின்றனர்? 
4 . பிரசாந்த்தை அடித்த மனிதருள்  மாணிக்கங்கள், மனித உருவில் தெய்வங்கள் யாரும் சின்னப் பெண்களை வக்கிரப் பார்வை பார்த்ததில்லையா? இதனை சத்தியம் செய்து அவர்களால் சொல்ல முடியுமா? 
5 . இந்த டிவி சீரியல் காலத்தில் நான்கு வயது பிஞ்சு கூட பச்சை பச்சையாகப் பொய் சொல்கிறதே! (காரணம் -Attention seeking Syndrome ). எப்படி ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் சொல்வதை அந்தக் கூட்டம் ஆராயாமல் அப்படியே நம்பியது?           
6 . சட்டத்தின் படி நீங்கள் நடந்துவிட்டால் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை கொடுக்க உங்களுக்கு உரிமை வந்துவிடுமா? 



அந்தக்கும்பல் அடித்ததில் பிரசாந்த் மண்டையப் போட்டிருந்தால்- நான் சொல்கிறேன்- அங்கு வழக்கே கிடையாது. அது ஒரு வெறி நாய்க்கும்பல் வந்து கடித்ததால் ஏற்படும் காயங்கள் போன்று. பிரசாந்த் ஒரு அனாதைப் பிணம்! அல்லவா! கூட்டமாக சேர்ந்து கொலை செய்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அல்லவா? குஜராத்தில் முசுலீம் பெண்களையும் ஆண்களையும் படுகொலை செய்த இந்துவெறி பிடித்த ஓநாய்களை இந்த அரசு என்ன செய்துவிட்டது?  காவி  நிறத்தில் தலையில் Scarf கட்டி ஒரு கையில் ரத்தம் தோய்ந்த வாளேந்தி வெறிக் கூச்சல் இட்ட ஒருவனின் புகைப்படம் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்ததே! அவனை அரசு கைது செய்ததா?  

இங்கு எவனுக்கும் ஒழுக்கம் இல்லை! நீதி இல்லை! (நீ பெரிய யோக்கியமா என்று எவனும் என்னை கேட்டுவிடாதீர்கள்! கேட்டவன் காது கொப்பளிக்கும் வரை சொல்லிக்கொண்டிருக்க எனக்கு ஒழுக்கமும் இருக்கிறது! நீதியும் இருக்கிறது! அதுவே என் சொத்து! என் கர்வம்!) தன் கருத்து சரியா, தவறா என்று உரசிப் பார்க்க ஒவ்வொருவனுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரைகல்லுக்கான தேவை இருக்கிறது. எனக்கு திருக்குறள்-பௌத்தம்- மற்றும் என் தாய் தந்தையின் போதனைகள். இந்த மூவற்றிலும்கூட தனித்தனியாகக் குறை இருக்கிறது. அவற்றில் சிறந்தது எதுவோ அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்! கடைபிடிக்கிறேன்! அப்படியான References இல்லையென்றால்தான், தான் நினைப்பதே சரி எனக் கருதும் தற்குறித்தனம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இது எளிதாக சரிப்படுத்தக்கூடிய வியாதி! தினம் அறநூல் படிக்கச் சொல்லி அடித்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும். 



பிரசாந்தை அடித்த அந்த மனிதருள் மாணிக்கங்களின் முகங்களை மிகக் Close - up ல் டிவி காரன் காட்டினான். எவ்வளவு கொலை வெறி? அந்த மனிதர்களை நான் ஒன்று கேட்கிறேன்! நீங்கள் யாரும் சிறு வயது பெண்களை தவறானக் கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லையா? அடப்பாவிகளா!! இதே இந்தியாவில் 4-ல் ஒரு பெண்குழந்தையும் 7 -ல் ஒரு ஆண்குழந்தையும் பாலியல் வக்கிரத்துக்கு உள்ளாகிறார்கள். 8 வயது சிறுமியைக் கற்பழித்த 65 வயது கிழவனும்  உண்டு.  பிரசாந்த்தை அடித்த அந்த மனிதர்களின் முகங்களில் கோபம், கொலைவெறி இவற்றோடு (தான் மாட்டிக்கொண்டாலும் இவ்வாறுதானே அடிவிழும் என எண்ணுவதால் ஏற்படும்) லேசானத் தயக்கத்தையும் என்னால் காணமுடிந்தது.       

ஒரு வேலை காரணமாக சென்னையில் என் சக Bachelor  நண்பர்களுடன் ஒரு மாதம் வரை தங்கவேண்டி வந்தது. அந்த FLAT -ன் எதிர் FLAT -ல் குடியிருக்கும் குடும்பத்தில் ஒரு பெண்குழந்தை. LKG படிக்கும் சிசு. மழலைப் பேச்சு இன்னும் மாறவில்லை. என் நண்பர்களின் FLAT -க்கு அந்தக் குழந்தை விளையாட வரும். என் நண்பர்கள் மாலை நேரங்களில்   அக்குழந்தையிடம் விளையாடுவதும் உண்டு. ரொம்ப உரிமையாக அந்த FLAT -ல் வளைய வரும். அது ஒரு முறை வந்து எங்களிடம் சொன்னது- 'அங்கிள், எங்க அம்மா குளிக்கறத நீங்க பாத்திருக்கீங்களா? எங்க அம்மா குளிக்கப் போறத்துக்கு முன்னாடி இங்கதான் ************************'. எங்களுக்கெல்லாம் ஒரே shock .  என்னடா இந்த பாப்பா என்னன்னவோ சொல்லுதே என்று. நான் கூட நினைத்தேன்- சரி குழந்தை தெரியாத்தனமாய் சொல்கிறதோ என்று! பிறகுதான் அந்தக் குழந்தையை கவனித்தேன்! சிறு குழந்தைக்கான எதுவும் அதனிடம் இல்லை! பெரியத்தனமானப் பேச்சு- விளையாட்டு- பெரிய பெரிய வார்த்தைகள் என்று, தன் குழந்தைத்தனத்தை இழந்துவிட்டிருக்கிறது அந்த சிசு! நாம் யாராவது மழலைத்தனமாக பேசினால் அது சொல்லும்-'ங்கொய்யால! உங்களுக்கு பேசவே வராதா அங்கிள் ' என்று. 
என் நண்பர்கள் எல்லாம் சொக்கத்தங்கம்! அவர்களிடம் நான் ஒன்று சொல்லிவிட்டு வந்தேன்! இந்தக் குழந்தையை இனிமேல் வீட்டிற்குள் விடாதீர்கள். ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் இது உங்களை Character Assasination செய்துவிடும் என்று.  
அந்த சிசுவின் மனதில் எவ்வாறு நஞ்சு  ஏறியது? டிவி சீரியல், அம்மாவின் உரையாடல்கள், குடும்பத்தின் பழக்கவழக்கங்கள்- இவைதான்! 

சின்னக் குழந்தைகளின் பேச்சையே நம்பமுடியாமல் போனதற்கு யாரை குறை சொல்வது? கலி தான்! ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் சொன்னதைக் கேட்டு பிரசாந்த்தை குமுறிய கூட்டத்தில் சேர்ந்து அடித்த ஒருத்தனின் மகன் இவ்வாறு சின்னப் பெண்ணிடம் சேட்டை செய்தான் என்ற  குற்றச்சாட்டில்  அடிவாங்கி வந்தால் அவனுக்கு மிகப் பெருமையாகவா இருக்கும்? ஏன் அந்த பெண் அந்த டிரைவரை  காதலித்திருக்கக் கூடாது? ஏன் அவன் அதை மறுத்திருக்கக் கூடாது? ஏன் அந்த கோபத்தில் அந்த சின்னப் பெண் அவன் மேல் குற்றம் சாட்டியிருக்கக் கூடாது? இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையா என்ன? அதான் இந்தமாதிரி scene எல்லாம் டிவி சீரியல்-ல காட்டுறானே! 


சட்டத்தின் படி தான் நடந்துவிட்டால், அவ்வாறு நடவாதவனை கண்டிக்கும் அல்லது தண்டிக்கும் உரிமை தனக்கு வந்து விட்டதாக எண்ணும்  தற்குறித்தனத்தை என்னவென்று சொல்வது? இதனை நீங்கள் ரோட்டில் அடிக்கடிப் பார்க்கலாம். நீங்கள் Wrong route -ல் போய் சரியான ரூட்டில் வருபவனை லேசாக மோதிவிட்டால் போதும். அவன் முறைப்பான் பாருங்கள்...... அடடடடடா! ஏனென்றால் சட்டம் அவனுக்கு பெரிய பலத்தைக் கொடுப்பதாக அவன் எண்ணிக் கொள்கிறான்! 
இதே அவன் தவறான ரூட்டில் வந்து மோதிவிட்டால் நாய் தன் பின்னங்கால்களுக்கிடையில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடுவதுபோல் ஓடிவிடுவான்! அல்லது எதிர்ப்புக் குரல் கொடுத்தால் கூட அதில் ஒரு தாழ்வுணர்வு இருக்கும். ஏனென்றால் சட்டம் அவனுக்கு ஆதரவாக இல்லை.  அதாவது support இருக்கும் தைரியத்தில் குரைக்கும் நாய் போல!- (அந்நியன் படம் கூட ஷங்கர் எடுத்த நாய்ப்படம்தான்- ராமநாராயணன் படத்துக்கும் அந்நியன் படத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை)

சட்டத்தின் ஆதரவு அவ்வளவு வலிமையைக் கொடுக்கிறது மனிதனுக்கு. 


வேண்டுமானால் இந்தியாவில் உள்ள கிரிமினல் சட்டங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம்- பிரசாந்த்தை மடக்கி மடக்கி அடித்தார்களே, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு டஜன் பெண்களையாவது கற்பழித்திருப்பார்கள்.  ஐந்து முதல் பத்து கொலைகளையாவது செய்திருப்பார்கள். சட்டம் ஒன்றே அவர்களை எல்லாம் அடக்கி வைத்திருக்கிறது என நானும் அறிவேன். 


ஆனா! 


சட்டம் எப்போ வேணும்னாலும் வளையும்டா பைத்தியக்காரா! எப்பிடி வேணும்னாலும் வளைச்சிக்கலாம்டா மூதேவி! ஸ்டேட்-க்கு  ஒரு சட்டம்! நாட்டுக்கு ஒரு சட்டம்டா! எதுவுமே தெரியாம 'சட்டம் ', 'சட்டம்'னு குதிக்கிறியேடா  கிறுக்கா!     


தான் இயற்றிய அத்தனை சட்டங்களையும் தானே பல முறை மீறாத அரசுகள் இந்த உலகில் ஒன்றைக் காட்டுங்கள் எனக்கு! அன்றே நான் இந்த உலகப் பிரஜா உரிமையை துறக்கிறேன்!  

சட்டம், அரசாங்கம், போலீஸ், பள்ளிக்கூடங்கள், ராணுவம், நீதிமன்றம் ஆகியவை எல்லாம் பாசிசத்தின் கருவிகளே! இருப்பியல்வாதத்தின் எதிரிகளே! (இதன் அர்த்தம் புரியாதவர்கள்- எனக்கு மெயில் செய்யவும்- jamsarain@gmail.com) 

பிரசாந்த்-ஐ போலீஸ் கைது செய்து கூட்டிட்டு போய்ட்டுது! அவன அடிச்சவனெல்லாம்  பக்கத்துவீட்டு சின்னப்பொண்ண சைட் அடிக்கப் போய்ட்டானுங்க! 
பிரசாந்த்- உண்மையிலேயே  நல்லவனாக இருந்தால்- இன்று நடந்த சம்பவம் இரு விளைவுகளில் ஒன்றை மட்டுமே உண்டாக்கும். 

ஒன்று. 

பிரசாந்த்தின் தற்கொலை- ஜெயிலில் அல்லது வெளியில் வந்த பிறகு.

இரண்டு. 
ஒரு பெண் வெறுப்பாளனாக-பெண் வெறியனாக- Rapist -ஆக பிரசாந்த் மாறுவது. 

குறிப்பு:

1 .இந்தக் கட்டுரை நுணுக்கமான பாலியல் பிரச்சினையை முன்வைக்கிறது. என் பதப் பிரயோகங்களில் நான் மிகக் கவனம் எடுத்துக் கொண்டிருந்தாலும், சில,  வரம்பு மீறியிருக்கலாம். 
2 . இதை படிக்கும் பெண்கள் தவறாகக் கருதவேண்டாம்! நான் பெண்ணிய எதிர்ப்பாளன் அல்லேன்!
3 . பெண்ணியக் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது!     

Friday, February 18, 2011

ஆணியப் புடுங்கவேணாம்



I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.- Voltaire 

உன் கருத்துக்கு நான் ஒப்பமாட்டேன் என்றாலும் உன் கருத்து கூறும்  உரிமையைக்  காக்க  என்  உயிர்  கொடுத்துப்  போராடுவேன்!- வால்டேர்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நானு ஒரு போஸ்ட் பண்ணேன். அது இன்னான்னா ஒரு மத ரீதியான செண்டிமெண்டு. Ms . உம்மு நிதா எழுதின புத்தகம் ஒண்ணுக்கு விமர்சனம் எழுதுனேன். அந்த புத்தகம் இஸ்லாம் பொண்ணுங்களுக்கு குடுத்திருக்கிற உரிமைங்க, தடைங்க பத்தினது! அத எழுதினத்துக்கு எத்தன எதிர்ப்பு வந்துச்சு தெரியுமா? 

பிரச்சன என்னான்னா... நான் முஹம்மது நபியப் பத்தியும் அவரு பொண்டாட்டிங்க list பத்தியும் கொஞ்சம் எழுதியிருந்தேன்! குறிப்பா அவரு Senior citizen ஆனதுக்கு அப்புறமா 9 வயசுப் பொண்ணக் கல்யாணம் பண்ணினதப்பத்தி எழுதுனேன்.  (ஆயிஷா-ரலி)  

எங்க அண்ணனே எனக்கு போன் பண்ணி- நீ என்ன பெரிய மயிராடா-ன்னு கேட்டுட்டாரு. 

என்னா கொடும சாமி! 

நானும் அந்த போஸ்ட்ட  தூக்கிட்டேன்!  எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன்! எங்க அண்ணனுக்கு முக்கியமா சொல்றேன்! கீழ ஒரு லிங்க் ஒண்ணு கொடுத்திருக்கேன்! அத சொடுக்கிப் பாருங்க! என்னோட டிகிரி ரொம்ப கம்மின்னு உங்களுக்கே புரியும்!   


அப்பறமா சொல்லுங்க! நானெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு! 

மூக்கறுப்பு துவங்கியது எங்கிருந்து எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்-கவும். 

Tuesday, February 15, 2011

மாணிக்கவாசகரின் கதை

மாணிக்கவாசகர் வாழ்ந்தது கொஞ்ச காலம்தான். அவர் மறைந்தபோது  அவருக்கு வயது 32. சிறந்த சிவபக்தர். 'நால்வர்' எனப்படுவோர்களில் இவரும் ஒருவர்.
மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். குதிரைப் படைகளுக்கு குதிரைகள் வாங்கும் பொருட்டு மன்னன் அளித்த பணத்தைக் கொண்டு திருப்பெருந்துறையில் உள்ள சிவன் கோவிலை புதுப்பித்துவிட்டார் மாணிக்கவாசகர். இதனை அறிந்த பாண்டியமன்னன் அவரை சிறையில் அடைத்தான். 
மாணிக்கவாசகரின் வேண்டுதலுக்கிரங்கிய சிவபெருமான், பாண்டியனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார். ஓநாய்களை எல்லாம் குதிரைகளாக மாற்றி பாண்டிய நாட்டுக்குள் கொணர்ந்து, அவையே மாணிக்கவாசகர் வாங்கிய குதிரைகள் எனவும், அவர் மேல் பிழை எனவும் கூற, பாண்டியன் மாணிக்கவாசகரை விடுவித்தான். அனால் அன்று இரவே, வந்திருந்த குதிரைகள்  எல்லாம் ஓநாய்களாக  மாறி லாயத்தில் உள்ள நிஜக்குதிரைகள் எல்லாவற்றையும் கடித்து தின்றன!  இது அறிந்து வெகுண்ட பாண்டியன் மாணிக்கவாசகரை மீண்டும் சிறையிலடைத்தான். 

பாண்டியனின் செயலால் சினமடைந்த சிவபெருமான், வறண்டு கிடந்த வைகை நதியில் பெருவெள்ளத்தை பொங்கச்செய்தார். வைகை நதியின் வெள்ளத்தை அடக்கிக் கட்டுப்படுத்த வீட்டுக்கொருவர் வரவேண்டும் எனப் பாண்டியன் ஆணையிட்டான். சிறையில் இருந்த மாணிக்கவாசகர்  பெருமானும் அணை வேலையில் ஈடுபடுத்தப்பட்டார்.
'வந்தி' என்னும் பிட்டு விற்கும் மூதாட்டிக்கு அணை வேலைக்கு அனுப்ப ஆள் யாருமில்லையாதலால், சிவபெருமான் அவளிடம் ஒரு  பணியாள் போல வந்து ' பணத்திற்கு பதில் பிட்டு கொடுத்தால் மண் சுமக்கத் தயார்' எனக் கூறவும் அந்தக் கிழவி சிவனை அணை வேலைக்கு அனுப்பினாள். சிவனோ எந்த வேலையும் செய்யாது பிட்டு தின்று விட்டு, உறங்கிப்போனார்.      

வந்தியின் வீட்டான் சோம்பேறியாகத் தூங்குவதாக பாண்டியனுக்கு தகவல் வரவே, காலாட்களை அனுப்பி சிவனை இழுத்துவரச் செய்தான் பாண்டியன். பிரம்பால் சிவனை பாண்டியன் முதுகில் விளாசவும், அங்குள்ள அத்தனை பேருக்கும் முதுகில் அடி விழ, சிவன் தன் காட்சி அளித்தார். மாணிக்கவாசகரை மீட்கவே, தான் இந்த திருவிளையாடல் புரிந்ததாகக் கூற- ததாஸ்து!
மாணிக்கவாசகர் தன்னை கடையேன் என்றும் பிறவி மோகம் கொண்டவன் என்றும், நாயேன் என்றும் பேயேன்  என்றும் தன்னைத் தானே இகழ்ந்து கொள்ளவதைக் கண்டால் அவர் உண்மையிலேயே அவ்வாறுதானோ- என்ற சந்தேகம் வாசகர்களுக்கு ஏற்படலாம். மாணிக்கவாசகருக்கு ஏற்பட்டது ஒரு வகையான Masochism . அவரின் சிவபக்தியை சிவனே கூட சந்தேகிக்க முடியாது. மாதர்களை நாடுவதாக எல்லாம் புலம்புகிறார் மாணிக்கவாசகர். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. 
மாணிக்கவாசகர் குதிரை வாங்கும் பொருட்டு செல்லும் வழியில் திருப்பெருந்துறையில்  சிவபெருமான் அவருக்கு காட்சி அளித்ததாகவும், அவர் பணித்தவண்ணமே, மாணிக்கவாசகர் அந்தப் பணத்தை  கோவில் புதுப்பிக்கப் பயன்படுத்தியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. பாவம் மாணிக்கவாசகர்! எதைக் கண்டு இப்படி ஆனாரோ?
யாரும் என்னை சிவச்செல்வன்  என்று சந்தேகித்துவிடவேண்டாம். மாணிக்கவாசகரின்  கருத்துகளில் எனக்கு பல மாறுபாடுகள் உண்டெனினும் அவரின் தமிழுக்கு அடிமை நான் . இவ்வளவு நாட்களாக திருவாசகத்திற்கு என்னால் பதவுரை மட்டும்தான் எழுதமுடிந்தது. அதில் உள்ள தத்துவங்களை என்னால் அலசிக் கூறமுடியவில்லை.     

உண்மையிலேயே திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்தான் !

அடுத்தமுறை எழுதும்போது நீத்தல் விண்ணப்பம் முடிந்திருக்கும். சிறிது நாட்களுக்குப் பிறகு ஆண்டாளின் திருப்பாவைக்கு பதவுரை பார்ப்போம். ஆண்டாளின் தத்துவங்களையும் சற்று அலசுவோம். 

Monday, February 14, 2011

காதலர் தினம்


உலகக் காதலர்களே! 
இன்று காதலர் தினத்தைக் கொண்டாடுகிறீர்கள். நன்று! 
இந்த நாளில் தமிழரின் அகவாழ்வைப் பற்றி சற்று அறிந்துகொள்ளுங்கள். தமிழ் இலக்கியங்கள் தமிழர் வாழ்வை அகம், புறம் என இரண்டாகப் பகுத்துள்ளது. அகவாழ்வில் இருவகையுண்டு. அது களவு, கற்பு என்பதாகும். களவு என்பது மணமாவதற்கு முன்னர் ஏற்படும் தொடர்பு. கற்பு என்பது  மணமான பின் உள்ள வாழ்வியல் நெறியாகும். 

காதல்  வந்தால் சொல்லி அனுப்பவெல்லாம் வேண்டியதில்லை. காதலைக் கண்டறிய  தமிழ் இலக்கியம் வழி வகைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறது.  பல அறிகுறிகளில் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன். அவையாவன
 1 . பொன் முகம் மறைத்தல்
 2 . பொறி நுதல்  வியர்த்தல் 
 3 . நகு நயம் மறைத்தல் 
 4 . நாணிக்கண் புதைத்தல்        
 5 . நோக்குவை எல்லாம் அவையே போறல்             

காதல் வந்தால் பெண்கள் தன் இயற்கையான நாணத்தினால் அதனைப் பொதுவாக வெளிப்படுத்துவதில்லை. அந்நிலையில் காதலைக் கண்டறியவே இவ்வகையான குறியீடுகள். 
1  .காதல் வந்த பெண் தன் முகத்தை அதிகமாக தன் காதலரின் முன் காட்டமாட்டாள். 
2 . நீங்கள் அருகில் சென்றால் அவளின் நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளைக்கூட  பார்க்கமுடியும். 
3 . அதற்கும் மேல் மெல்ல தைரியமடைந்த பெண்மை, அருகில் வந்தாலும், உங்களின் அருகாமையால் ஏற்படும் மெல்லிய புன்னகையை மிகவும் பிரயத்தனப்பட்டு மறைப்பாள்.  
4 . அதற்கும் அருகில் சென்று பாருங்கள். அந்த வெட்கத்தால் தன் கண்களை இரு கைகளால் மூடி மறைப்பாள். 

5 . கடைசி அறிகுறி உங்களுக்கானது. நீங்கள் நோக்கும் எல்லாமும், உயர்திணை அஹ்றிணை  எல்லாமும் அவளின் முகமாகவே தோன்றும். இவையே காதலின் அறிகுறிகள். தோன்றினால் அதனை மகிழ்வுடன் எதிர்கொள்ளுங்கள். மாணிக்கவாசகர் போல புலம்பாதீர்கள்! 

A slightly negative-Alternative opinion 

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்-ஒன்பது

கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது

பாடல்: 31
சச்சையனேமிக்க  தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் 
விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய் 
பச்சையனே செய்ய மேனியனே யொண்பட அரவக் 
கச்சையனே கடந்தாய் தடந்தாள அடற்கரியே 


விளக்கம்: 
நுட்பமானவனே! நீர், வானம், காற்று, நிலம், நெருப்பு என ஐம்பூதங்களாக விளங்குபவனே! கருமை நிறமானவனே! பச்சை நிறமானவனே! சிவந்த மேனியை உடையவனே! பாம்பினை தன் அரைக்கச்சையாக அணிந்தவனே! கொடிய பெரிய கால்களை உடைய யானையை சம்ஹாரம் செய்தவனே! என்னை விட்டிடுதி!  

பாடல்: 32
அடற்கரி போல் ஐம்புலங்களுக்கஞ்சி அழிந்த என்னை 
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்க்கல்லால்
தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக்
கடற்கரி தாஎழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டேனே


விளக்கம்:
உண்மையான அடியார்களைத் தவிர பிறரால் நெருங்க முடியாதவனே! ஒளிவீசும் மாமணியே! தன்னைப் பயன்படுத்தி கடைவதனால் ஏற்படும் வெப்பத்தைப் பொறுக்கமுடியாமல் ஆதிசேஷன் கடலையே கருமையாக்க வல்ல நஞ்சைக் கக்க, அதனை பிறரைக் காக்கும் பொருட்டு எடுத்து விழுங்கியதால் கண்டத்தில் கறை உடையோனே! உன்னை எவரும் விட்டுவிலக  இயலாத் தகையவனே! கொடிய யானைகள் போல் புலன்கள் வருத்தும் என்னை விட்டிடுதி!

பாடல்: 33 
கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரைமலர்த்தாள் 
பண்டு தந்தார்போற் பணித்துப் பணி செயக் கூவித்தென்னைக்
கொண்டெனெந் தாய்களை யாய் கலையாய குதுகுதுப்பே      

விளக்கம்:
திருப்பெருந்துறையில் அன்றொருநாள் காட்சியளித்து, நின் மலர் மணம் வீசும் திருவடிகளைக் காட்டியதுபோல் மீண்டும் அருளி, என்னை நின் பணி செய்ய பணித்து, என் கலையாத பிறவிமோகத்தை களைந்துவிடுவாயாக! மனம் போன போக்கில், கண்டதை செய்து, உன் கருணைத்தேனை பருகிக் களித்து தவிக்கும் என்னை விட்டிடுதி. 
(அதாவது உன் கருணைக்கு நான் பாத்திரம் அல்ல. ஏனென்றால் நான் பூலோக வாழ்வை இன்னும் துறக்கவில்லை. ஆனாலும் உன் கருணை இன்றி நான் இல்லை என சுயகழிவிரக்கத்தால் புலம்புகிறார் மாணிக்கவாசகப்பெருமான்!)  

பாடல்: 34

குதுகுதுப்பின்றி என் குறிப்பே செய்து நின்குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதிகண்டாய்  விரை யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து
எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே


விளக்கம்:
இனியவனே! என் மனதை வாழைப் பழத்தைப் போல் கனிவித்து, திருப்பெருந்துறையில் எனக்குக் காட்சியளித்தது போல் மீண்டும் காட்சியளித்தால் உன்னை எதிர்கொள்வது எவ்வாறு என எனக்குச் சொல்லித்தருவாயாக! கயிலாய மலையில் வீற்றிருப்பவனே! 
எந்தக் குற்றஉணர்வும் இல்லாமல் என் விருப்பம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்னை விட்டிடுதி!  

பாடல்: 35
பரம்பரனே நின்பழஅடி யாரோடும் என்படிறு
விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம்
பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே

விளக்கம்:
மென்மையான முயலைப் போன்ற வெண்ணிற பிறைச்சந்திரனையும் கழுத்தைச் சுற்றி படர்ந்திருக்கும் அரவத்தையும்  சமமான இடத்தில்  வைத்திருக்கும் பெருமானே! இந்தப் பிறவி என்னும் ஐந்து தலை நாகம் (புலன்களைக் குறிப்பிடுகிறார்:- ஐவாய் அரவம்) என் மனம் அஞ்சுமாறு என்னை வாட்டுகிறது! பரம்பரனே! உன் அடியார்களோடு என்னை  இணைந்திருக்க அனுமதித்தவனே! என்னை விட்டிடுதி!  

ஐவாய் அரவம்- ஐந்து தலை நாகம் 
நேர்வு- ஒப்பு
பரம்- அரவம்  

 பாடல்: 36
பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ
வெதும்புகிறேனை விடுதி கண்டாய் விரையார் நறவம்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே 

விளக்கம்:
நின் தலையில் சூடியுள்ள, தேன் ததும்பும் மந்தார மலர்களில் அமர்ந்து தேனை உண்ட வண்டு 'தாரம்' (தாரம் என்பது ஒரு இசை வகை) இசைக்கும், அவிழ்ந்த சடையை உடையவனே! கொழுந்து விட்டெரியும் தீப்போல என் புலன்கள் என்னை சுட்டெரிக்க நான் துன்புறுகிறேன்! என்னை விட்டிடுதி!    
  
பாடல்: 37
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால்
விரைசேர் மிடியாய் விடுதிகண்டாய் வெண்ணகைக் கருங்கண் 
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா 
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந் தடர்வனவே


விளக்கம்:
வெண்ணிறப் பற்களையும் கரிய கண்களையும், அலைபோலாடும் கூந்தலையும் கொண்ட பார்வதியை மணந்தவனே! பாம்பினைக் கச்சையாக அணிந்திருக்கும் பொற்பாதங்களையுடையவனே!  ஐந்து மலைகள் சேர்ந்து நெருக்குவது போல் என் ஐம்புலன்களும் என்னை நெருக்குகின்றன! என் அரசே! அறியாச்சிறியேனாகிய நான் என் பிழைகளுக்கு அஞ்சாமல் திரிந்தாலும், எனக்கு அருள் பாலிக்க விரைபவனே! என்னை விட்டிடுதி!  

புயங்கா- பாம்பினை அணிந்தவனே! 
வரை- மலை
  
பாடல்:  38
அடர்புலனால் நிற்பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
விடர் விடலேனை விடுதிகண்டாய் விரிந்தேயெரியுஞ்
சுடரனை யாய் சுடுகாட்டரசே தொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாம்  தமியேன் தனி நீக்குந் தனித்துணையே 

விளக்கம்:
கொழுந்து விட்டெரியும் சுடர் போன்றவனே! சுடுகாட்டில் வாழ்பவனே! அடியார்களுக்கு அமுதம் போன்றவனே! பிழைகளை பெருக்கிக்கொண்டே செல்லும் இந்த தமியேனின் தனிமையை நீக்க வந்த துணையானவனே! என்னை நெருக்கும் புலன்களால் உனைப் பிரிந்து அஞ்சி, இனிமையாகப் பேசும் பெண்டிரின் பிளவுகளை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் என்னை விட்டிடுதி!

தொழும்பர்- அடியார்

பாடல்: 39
தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த 
வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினையேனுடைய 
 மனத்துணை யேஎன்தன்  வாழ்வினையே எனக் கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே

விளக்கம்:
குற்றமுடைய மனத்துடையேனாகிய  எனக்கும் துணையாக வந்தவனே! என் வாழ்வினையே! என் பரலோகத்தில் துணையானவனே! (எய்ப்பில் வைப்பே-எய்ப்பு என்றால் மேலுலகம், முக்தி   எனப் பொருள்படும்). இந்த துயரம் படிந்த ஆக்கையின் (உடலின்- அதாவது பிறவி) திண்வலையை (வலை போன்ற சிக்கலான வாழ்வியல்  துயரங்கள்) என்னால்  ஒரு தினையளவு கூட பொறுக்க இயலவில்லை! என் துணையாக நீயிருக்க அதைக் கருதாமல் திமிர் பிடித்தலையும் என்னை விட்டிடுதி!
பாடல்:40  
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு 
மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக் 
கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும் 
மலைத்தலை வாமலை யாம் மணவாள என் வாழ்முதலே 

விளக்கம்:
முதல்நாள்  பிறையை தன் தலையில் சூடியுள்ளவனே! கருணையின் இருப்பிடமே! கயிலாயம் என்னும் மலைக்குத் தலைவா! மலையத்துவசனின் மகளாகிய பார்வதியை மணந்தவனே (மலையாம் மணவாள)! என் வாழ்வின் முதலே! வலையில் அகப்பட்ட மானைப் போன்ற மருண்ட கண்களை உடைய மங்கையரின் பார்வை எனும் வலையில் பட்டு வருந்தும் என்னை விட்டிடுதி!   

(அடுத்த தவணையில் முடியும்)

Wednesday, February 9, 2011

திருவாசகம்- நீத்தல் விண்ணப்பம்- எட்டு

கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது 
பாடல்: 23
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்றடியேனை   விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்றடியேன் தன்னை தாங்குநர்  இல்லை என்வாழ்முதலே 
உற்றடியேன் மிகத் தேறிநின்றேன் எனக்குள்ளவனே

விளக்கம்:
 உன் அருளைப் பெற்றபிறகும் பிழைகள் புரிந்து உன் அருளின் ஒளியை சுருக்கிக்கொண்டிருக்கும் இந்த உன்மத்தனை விட்டிடுதி! அவ்வாறு நீ கைவிட்டுவிட்டால் நான் சீரழிந்துவிடுவேன். அதை  நான் கண்டுகொண்டேன்!/அறிந்துகொண்டேன். உன்னை விடுத்தால் என்னைக் காப்பாற்ற யாருமில்லை. என் வாழ்வின் முதன்மையானவனே! என் உள்ளில் உள்ளவனே! 

பாடல்: 24
உள்ளனவேநிற்க இல்லன செய்யும்  மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மாதடக்கை 
பொள்ளல் நல்வேழத்துரியாய்  புலன்நின்கண் போதல் ஒட்டா 
மெள்ளெனவே  மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பெனவே 

விளக்கம்:
 பெரிய தும்பிக்கையை உடைய கஜன் என்ற யானையின் தோலை உரித்து தன்மேல் போர்த்திக்கொண்டிருப்பவனே! நெய்க்குடத்தை 'மொள்' என எறும்புகள் மொய்ப்பது போல என் புலன்கள் நான் உன்பக்கம் நோக்கவே விட மறுக்கிறது! என் காமம் வெள்ளமாகப் பெருகி ஓட, எதைச் செய்ய வேண்டுமோ அதை விடுத்து செய்யக்கூடாததை செய்துகொண்டிருக்கும் என்னை விட்டிடுதி!  

**துழனி-ஆறு
**வேழம்- யானை 

பாடல்; 25
எறும்பிடை நாங்கூழெனப் புலனால் அரிப்புண்டலந்த
வெறுந்தமியேனை விடுதி கண்டாய் வெய்யக் கூற்றோடுங்க 
உறும் கடிப்போதவையே உணர்வுற்றவர்  உம்பரும்பர்
பெரும் பதமே அடியார் பெயராத பெருமையனே 

விளக்கம்: 
மார்க்கண்டேயனின் உயிரெடுக்க வந்த எமனை எத்தி உதைத்தப் பாதங்களை உடையவனே! உன் பெருமை உணர்ந்தோர், தேவதேவர்களெல்லாம்  அடையும் பெறும் பதமே! உன் அடியார்களை விட்டு விலகி நில்லாத பெருமை உடையவனே! (அடியார்களை என்றும் காப்பவனே!).தனியேனாகிய என்னை, எறும்புகளுக்கிடையில் அகப்பட்ட நாங்கூழ் புழுவென என் புலன்கள் அரித்தெடுக்கிறது. என்னை விட்டிடுதி! 

**நாங்கூழ் புழு- மண்புழு எனக் கொள்க
**வெய்யக்கூற்று  - கொடிய எமன்

 பாடல்: 26
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப்பிரிந்த 
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி 
வரும் நீர் மடுவில் மலைச் சிறுதோணி வடிவில்  வெள்ளைக் 
குருநீர் மதி பொதியும் சடைவானக் கொழுமணியே!

விளக்கம்:
பொங்கிப்பெருகி வரும் கங்கையின் மடு ஒன்றில் ஆடும் சிறு தோணியின் வடிவத்தில் பிறைநிலவை சடையில் தரித்த கொழுமணியே! (அளவில் பெரிய மாணிக்கமே!) 
பெருகி ஓடும் வெள்ளம் வற்றும்போது சிறிய மீன் துவள்வதைபோல உன்னைப் பிரிந்த வெறுமையேன்   என்னை விட்டிடுதி!   
 
பாடல்: 27

கொழுமணியேர் நகையார்க் கொங்கைக் குன்றிடை சென்று குன்றி 
விழுமடியேனை விடுதி கண்டாய் மெய்ம்முழுதுங்கம்பித்து     
அழுமடியாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயின்னுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே 

விளக்கம்:
உருண்ட முத்துக்களைப் போன்ற பற்கள் தெரியுமாறு நகைக்கும் மாதரின் தனங்களை நாடிச் சென்று அவைகளுக்கிடையில், குன்றிலிருந்து அருவி வீழ்வதைப் போல வீழும் என்னை கைவிட்டுவிடாதே!

உடலெல்லாம் நடுங்குமாறு உன் அருள்வேண்டி அழும் அடியார்களின் கூட்டத்தில் என்னையும் சேர்த்து என்னை ஆட்கொண்டு அருளினாயே! மாசிலா  மாணிக்கமே! (கழுமணியே)! திருப்பெருந்துறையில் எனக்கு காட்சி  அளித்ததை போல மீண்டும் நின் திருவடிகளைக் காட்டுவாயாக!   

**கம்பித்து- நடுங்கி 

பாடல்: 28

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்நெறிக்கே 
விளங்குகிறேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாம்
கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கருணாகரனே 
துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே 


விளக்கம்:
விண்ணகத்தாராகிய தேவரும் மண்ணகத்தாராகிய  அசுரரும் அருந்துவதற்கு முன் ஆலகாலம் என்ற கொடிய நஞ்சினை உண்டாயே! கருணையின் இருப்பிடமானவனே! புலன்களால் நான் சிற்றின்பத்தில் விழுந்து தவிக்கிறேன்! (துலங்குகின்றேன்!) என்னை ஆட்கொண்டவனே! (அடியேன் உடையாய்) என் குலதெய்வமே! என் புலன்கள் என்னை பயமுறுத்த, நானும் திகைத்து பொய்நெறியின்பால் சென்றுகொண்டிருக்கிறேன்! என்னை விட்டிடுதி! 


 பாடல்: 29

குலங்களைந் தாய்களைந் தாய் என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் 
விலங்கலெந் தாய்விட்டிடுதிகண்டாய் பொன்னின் மின்னுகொன்றை 
அலங்கலந் தாமரை மேனியப் பாவொப்பி லாதவனே 
மலங்களைந்  தாற்சுழல் வன் தயிரிற்பொரு மத்துறவே      

விளக்கம்:
பொன்னைப் போல மிளிரும் கொன்றைப்பூ மாலையை அணிந்தவனே! அழகிய தாமரை போன்ற மேனியுடையோனே! அப்பா! ஒப்பிலாதவனே! ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும், மத்து தயிரைக் கடைவது  போல என்னை சுழற்ற நான் சுழல்கிறேன் (துன்புறுகிறேன்!).  மேரு மலையை வில்லாய் வளைத்தவனே! என் பந்த பாசங்களை அற்று எறிந்தவனே! என்னை விட்டிடுதி!   

**மலங்கள்-அசூயைகள் ஐந்து.   


பாடல்: 30

மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி
வித்துறுவேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக்
கொத்தறுபோது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றி  
தத்தறு நீறுடனாரச் செஞ்சாந்தணி சச்சையனே   
  
விளக்கம்:
நகுசிரம் (நகு+சிரம், சிரிக்கும் சிரம், அதாவது மண்டை ஓடு!)  தலையில் அணிந்து கொன்றை மலர்களை கொத்தாக சூடிக்கொண்டு, குடலை மாலையாக அணிந்து, திருமேனி முழுவதும் திருநீறணிந்து, மணக்கும் செஞ்சாந்துக் குழம்பை உடலில் பூசி விளங்கும் தனித்துவமானவனே!
குளிர்ந்த தயிரில் மத்து கடைவது போல என் புலன்கள் என் மேல் தீ உமிழ, இந்தப் பிறவிப்பிணியை மீண்டும் மீண்டும் தொடரும் என்னை விட்டிடுதி!     
 
**வெண்டலை= வெண்+ தலை- அதாவது நகுசிரம் அல்லது மண்டை ஓடு. 
**இலைச்சி-கொன்றைப்பூக்கள்

   





Tuesday, February 8, 2011

இலஞ்சம்- ஊழல்- ஒரு விளக்கம்-I

சுமார் 200 ஆண்டுகளுக்கு  முன் வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் -ஆக இருந்தவர் லார்டு காரன்வாலிஸ். இந்தியாவில் அரசுப் பணிகளை அறிமுகப்படுத்தியவர் அவரே! இப்போதைய இந்திய ஆட்சிப் பணிகளையும் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அரசுப் பணிகளை covenated , Non -covenated services என இரண்டாகப் பகுத்தார் காரன்வாலிஸ். அதாவது covenated என்பதை தற்போதைய IAS -க்கும் Non -covenated என்பதை Staff selection commission - மூலம் கிடைக்கும் பதவிகளுக்கும்  ஒப்பிடலாம். 
இதில் covenated services -க்கு வெள்ளையர்களை மட்டும் தேர்ந்தெடுத்தார் காரன்வாலிஸ். ஏன் என்று கேட்டதற்கு அவர் கொடுத்த ஒரே விளக்கம். 

'Every Hindustani is Corrupt'  

இதில் கூறப்பட்ட 'Every Hindustani' என்பது எல்லா காலத்திலும் இருந்த இனி பிறக்கப்போகிற இந்தியர்களையும் உள்ளடக்கியது. காந்தி உட்பட! (காந்தி அப்போது பிறக்கவே இல்லை என்றாலும் கூட!)

ஆசிய மக்கள், குறிப்பாக நிலநடுக்கோடு அருகில் வசிக்கும் மக்களின் தன்மை பற்றி கூறும்போது  ரோம் நகரத்தின் பிரபல புவியியலாளர் ஸ்ட்ராபோ -'The Most timid people ' என வருணிக்கிறார். Timidness என்றால் அடிமையின் மோகம் என்று பொருள். அவ்வாறு அடிமைப்பட்ட மக்கள், அடிமைத்தனத்தை விரும்பும் மக்கள் அடிமைப் படுத்தவும் விரும்புவார்கள்! வாய்ப்பு கிடைக்கும்போது பிறரின் வாழ்வாதாரத்தை கவர்வதற்கும் தயங்கமாட்டார்கள். அதிகாரத்தை அடைந்தவர்கள் அதனை மிக மோசமாக பயன்படுத்துவார்கள். இது ஒரு பொதுப்படுத்தப்பட்ட மதிப்பீடுதான்  என்றாலும் இதனை மறுக்க முடியாது! 

இன்னும் சொல்லப் போனால் லஞ்சமும் ஊழலும் மனித இனத்தின் கூடவே பிறந்தது. இதனை Hobbes போன்ற அரசியல் அறிவியலாளர்கள் கூறியுள்ளார்கள். 


பிறரை கோப்பிட்டுக் காட்டுவது இருக்கட்டும்!


மனிதனின் ஒவ்வொரு படிநிலைகளிலும் லஞ்சம் தேவைப்படுகிறது. அடம்பிடிக்கும்  குழந்தைக்கு, முத்தம் தரத் தயங்கும் காதலிக்கு, மணம் புரிந்த மனைவிக்கு,  கடவுளுக்கு,  பணி புரியும் இடங்களில் எனப் பலஇடங்களில் லஞ்சம் அவசியமாகிறது. அடம்பிடிக்கும்  குழந்தைக்கு அதற்கு பிடித்த விளையாட்டு சாமான், காதலிக்கு ஒரு ரோஜா, மனைவிக்கு ஒரு சேலை, கடவுளுக்கு தீபாராதனைமற்றும் பணம் என லஞ்சம் உதவுகிறது. கடவுளின் அருளுக்காக லஞ்சம் கொடுக்கக் காத்திருக்கும் வரிசையின் நீளத்தை திருப்பதியில் சென்று பாருங்கள். (லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்க வேண்டும். என்ன எழவுடா இது? எந்த உத்தரவாதமும் இன்றி எப்படி பணத்தை இப்படி கொட்டிக் குடுக்குறான்களோ எனக்குப் புரியவில்லை! எவன வேணுன்னாலும் நம்பலாம். இவனுங்கள நம்பக்கூடாது!) 


லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஊழலின் வடிவம் பெரியது. மக்களுக்குச்  (பிறர்க்கு)  செல்லவேண்டியதை தனக்கு இட்டுக்கொள்வது. லஞ்சம் மிகச் சிறியது. ஆனால் அதன் வடிவங்கள் எண்ணிலடங்காதது. 


Prevention of Corruption Act -லஞ்சம் என்றால் என்னவென்று விவரிக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும். கடமையை செய்யப் பெறுவது லஞ்சமா? கடமையை மீறி அதற்கு மேல் பணிபுரிய பெறுவது லஞ்சமா? அதற்கும் மேலாக, லஞ்சம் பெறுவது தவறா?   


இது குறித்து நாளை பார்க்கலாம். 
   

Monday, February 7, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்-ஏழு

 கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது


பாடல்: 19

மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள்தீக்கொளுவும்
விடங்க என் தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வேர் 
ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே

விளக்கம்:
உத்தரகோச மங்கைக்கரசே! கொடிய யானையைத் தோலுரித்து  தீயவர்களை  பயப்படச் செய்தவனே! எருது வாகனனே! (விடங்க!) வனமாக வளர்ந்த என்  வல்வினைகளை உன் அருளின் தீயினால் பொசுக்கிவிடுவாயாக! என் பிறவியினை வேரறுத்து  (வேர் ஒடுங்களைந்து) ஆண்டுகொள்வாயாக! என்னை விட்டிடுதி!


பாடல்: 20

கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே 
வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விடுதி கண்டாய் விண்ணர் நண்ணுகில்லா 
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு ஒப்பு ஆனவனே 


விளக்கம்:
தேவர்களும் (விண்ணர்)  அடையமுடியாத சுவர்க்கத்தில் (உம்பர்)  உறைந்திருக்கும் உத்தரகோசமங்கைக்கரசே! விண், மண், நெருப்பு, காற்று மற்றும் நீரோடு ஐம்பூதங்களாக திகழ்பவனே! என் கோமளமே! பற்றிப்படர ஒரு கொழுகொம்பு இல்லாத, கொடி போல  நான் அலமந்து திகைக்கிறேன்! வெம்புகிறேன்! என்னை விட்டிடுதி!    
 
பாடல்:21

ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் 
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து 
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே


விளக்கம்:

இந்த வினைகள் நிறைந்த என் மனத்தில் தேனையும், பாலையும், கரும்பினையும், (கன்னலையும்)  அமுதத்தையும் ஒத்து என் ஊனையும் எலும்பினையும்  உருக்குகின்ற ஒண்மையனே (Unity )!
என் தாயைப் போன்றவனே!    ஆனைகள்  சண்டையிடும் போர்க்களத்தின்  தரையில் முகிழ்த்துள்ள சிறு புல் (குறுந்தூறு) என்ன பாடுபடுமோ அவ்வாறு என் ஐம்புலன்களின் அழுத்தத்தால் நான் அலைப்புறுகிறேன்! என்னை விட்டிடுதி! 

பாடல்:  22

ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்க்கு 
அண்மையனேஎன்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் 
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப்பெற்றியனே



விளக்கம்:
உண்மையான அடியவர்க்கு ஒரு சேயைப் போல அண்மையானவனே! பெண்கள் தமக்குள் ரகசியத்தை புதைத்துக்கொண்டிருப்பதைப் போல அறிதற்கு அரிதானவனே! உலகின் முதல் ஆண்மகனே! ஆணும் பெண்ணும்   இணைந்த அலி போன்றவனே! (அர்த்தநாரீஸ்வரர்) ஒண்மையனே! மெய் முழுதும் பூசிய (உத்தூளித்து) திருநீற்றால் வெண்மை ஒளி மிளிரும் தகையவனே! என்னை விட்டிடுதி கண்டாய்!   



Friday, February 4, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்-ஆறு

 கட்டளைக்கலித்துறையில்  மாணிக்க வாசகர் அருளியது 


பாடல்: 15


களிவந்த சிந்தனையொடு உன் கழல் கண்டும் கலந்தருள 
வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெயச்சுடர்க்கெல்லாம் 
ஒளிவந்த பூங்கழல் உத்தரகோசமங்கைக்கரசே
அளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே 


விளக்கம்:
உலகத்து மெய்ச் சுடர்களுக்கேல்லாம் ஒளி வழங்கக்கூடிய கழல்களை அணிந்த தாள்களை உடைய உத்தரகோசமங்கைக்கரசே! எனக்கு அருள் அளிக்க வந்தவனே! என் தந்தை போன்றவனே! என்னை ஆள்கின்ற என் அப்பனே!  களி வந்த சிந்தனையோடு (விளையாட்டுத்தனமாக) உன் பாதமலர்களை கண்ட பின்பும் உன்னுடன் கலந்து தழுவிக்கொள்ள (இப்பிறவிவை துறக்க) இயலாதவனான என்னை விட்டிடுதி!    

பாடல் : 16


என்னை அப்பா அஞ்சல் என்பவரின்றி நின்று எய்த்து அலைந்தேன் 
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே 
உன்னை ஒப்பாய் உத்தரகோசமங்கைக்கரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும்பொருளே 


விளக்கம்:
உன்னை யாரோடு நான் உவமிப்பது?! மெய்யின் வடிவமே!  நீ உன்னையே ஒப்பாய். (ஒப்பில்லாதவனே!!)
உத்தரகோசமங்கைக்கரசே! என் அன்னையைப் போன்றவனே! தந்தையைப் போன்றவனே! என் அரும்பொருளே! 
என்னை தேற்றி, ' அப்பா! அஞ்சற்க!' என்று ஆறுதற்படுத்த யாருமின்றி நான் அலைந்தேன்! எரி மின்னலைப் போன்றவனே! என்னை விட்டிடுதி!   

பாடல்: 17


பொருளே  தமியேன் புகலிடமே நின்  புகழ் இகழ்வார் 
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் 
அருளே அணிபொழில் உத்தரகோசமங்கைக்கரசே
இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே 


விளக்கம்:

சான்றோர்கள்  விரும்பும் அருளே! அழகு மிகுந்த சோலைகள் அமைந்த உத்தரகொசமங்கையில் குடியிருப்பவனே! ஒளியாகவும் இருளாகவும், ஜகப்பொருளாகவும் பரம்பொருளாகவும் இருப்பவனே! மிகச்சிறியவனான எனக்கு புகலிடமாக இருப்பவனே! உன் புகழை இகழ்வார் அஞ்சும் தகைத்தவனே! என்னை விட்டிடுதி!   

பாடல்: 18


இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால் 
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் 
அருந்தினனே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே 


விளக்கம்:

ஆலகால நஞ்சினை அமுதினைப் போல அருந்தியவனே! உத்தரகோசமங்கைக்கரசே! பிறவிப்பிணி கண்டு உழல்வோர்க்கேல்லாம் அப்பிறவிச்சங்கிலியை அறுத்தெறியும் மருந்தானவனே!  
நீ என்னை ஆண்டு கொள்! விற்றுக் கொள்! அடகு வை! என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்! 
எனக்குள்ளேயே விருந்தினனாக இருக்கும் ( I, My SELF, which is not, in my control) விட்டிடுதி! 
  


Thursday, February 3, 2011

திருவாசகம்- நீத்தல் விண்ணப்பம்- ஐந்து

 கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது 


பாடல்: 11


மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன்மணி மலர்த்தாள் 
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே 
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
நீறு பட்டே ஒளிகாட்டும் பொன்மேனி நெடுந்தகையே 


விளக்கம்:
 வினைகளை உடைய என் மனதில் ஊறும் தேனே! உத்தரகோசமங்கைக்கரசே! திருநீறு துலங்கும் ஒளியுடைய பொன்மேனியை உடையவனே! நெடுந்தகையே! 
என் மனவிருப்பத்திற்கு மாறுபட்டு என் ஐம்புலன்கள் என்னை வஞ்சிக்க, உன் மலர்த்தாள்களை வந்து சேராமல் வேறுபட்டு நிற்கும் என்னை விட்டிடுதி!   

பாடல்: 12 


நெடுந்தொகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு 
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ 
அடும்தகை வேல்வல்ல உத்தரகோசமங்கைக்கரசே
கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே 


விளக்கம்: 
உன்னை எதிர்ப்போர் அஞ்சி நடுங்கவைக்க வல்ல வேலை (திரிசூலம்) உடைய உத்தரகோசமங்கைக்கரசே! கெட்ட குணமுடைய நான் கூட அருந்தத்தக்க தெளிந்த  அமுதக்கடலாக இருப்பவனே! சீரிய குணத்தையுடைய நீ என்னை ஆட்கொள்ள வந்தபோதும் ஐம்புலன்களின்பால் மனத்தை செலுத்தி மாறுபடும் என்னை விட்டிடுதி!  


பாடல்: 13


கடலினுள் நாய் நக்கியாங்கு உன் கருணைக்கடலின்
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் 
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
மடலின் மட்டே மணியே அமுதே என் மதுவெள்ளமே 


விளக்கம்: 
உன் அடியார்களை என்றும் கைவிடாத அரூபமானவனே! (உடல் இலமே!) உத்தரகோசமங்கைக்கரசே! பூவின் மடலில் ஊறும் தேனே! என் மாணிக்கமே! அமுதமே! என் மது வெள்ளமே! உன் கருணைக் கடல் போன்றது! அதனை ஒரு நாயால்  எவ்வளவுதான் நக்கிக் குடிக்க முடியும்? அவ்வாறு எவ்வளவுதான் பெற்று உவந்தாலும் தீராத உன் கருணையை விடுவதை விரும்பாத என்னை விட்டிடுதி!   

 பாடல்: 14


வெள்ளத்துள் நாவற்றியாங்கு அருள் பெற்றுத்  துன்பத்து இன்றும் 
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் 
உள்ளத்தில் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
கல்லாதது உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே  


விளக்கம்: 


பெரும் வெள்ளத்தில் இருந்தாலும் நா வரள்வதைப் போல உன் அருள்  பெற்ற பிறகும் துன்பத்தோடு வாழும் என்னை விட்டிடுதி! 
உன்னை வணங்கும் அடியார்களின் மனத்தில் இருப்பவனே! உத்தரகோசமங்கைக்கரசே! ஒன்றும் அறியாதவனாகிய எனக்கு இதுவரை நான் கண்டிராத மகிழ்வைத் தருவாயாக!

நாவற்றி= என்பது நாவு வரள்வதையும் 'நாவற்றி' என்னும் பூச்சியையும் குறிப்பிடுவதாக இருவேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. 
நாவற்றிப் பூச்சிகள், நீரில் மேற்பரப்பில் வாழும். அவை தண்ணீரின் மேல் நடக்கவல்லது.  பெருவெள்ளமே ஆனாலும் அதில் மூழ்கி திளைக்காமல் அதன் மேல் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் நாவற்றி பூச்சியை தனக்கு உவமையாக மாணிக்கவாசகர் கருதினார் எனவும் கொள்ளலாம். 

Wednesday, February 2, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்- நான்கு

 கட்டளைக் கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது

பாடல் : 9
இருதலைக் கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த 
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு 
ஒருதலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 
பொருதரு மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே   

விளக்கம்: 
பெரிய மூன்று உலகத்திற்கும் ஒரு தலைவனாய்  விளங்கும் உத்தரகோச மங்கைக்கரசே! போருக்கேற்ற திருசூலத்தை தன் வலது கையில் ஏந்தி பொலிபவனே! ஐம்பூதங்களின் ஈர்ப்பும் உன் மேலுள்ள ஈர்ப்பும் என்னை இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிக்கச்செய்கின்றன. அதனால் உன்னை பிரிந்த ஆற்றாமையால் விரிந்த கூந்தலோடு புலம்பும்  என்னை விட்டிடுதி!   
மூவிலை வேல்= திரிசூலம் 
பொரு=பொருதுதல்=போர்  
வியன்= பெரிய 
பாடல்: 10
பொலிகின்ற நின்தாள் புகுத்தப் பெற்று ஆக்கையை போக்கப் பெற்று 
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளரி 
ஒலிகின்ற  பூம்பொழில் உத்தரகோசமங்கைக்கரசே 
வலி  நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே 

விளக்கம்: 
வண்டுகளின் ஓசை விளரிப்பண் (ஒரு வகையான இசை)  போல ஒலிக்கக்கூடிய பூஞ்சோலைகளை  உடைய உத்தரகோச மங்கைக்கரசே! மிக வலிமையான  மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்தையும் எரித்த சிவனே! பொலிகின்ற உன்  பாதமலர்களை சரணாகதி புகுந்து இந்த உடலைத் துறப்பதற்காக ஏங்கும் என்னை கைவிட்டுவிடாதே! 

சிலை= வில் 
ஆக்கை= உடல் 
தாள் =பாதங்கள் 

Tuesday, February 1, 2011

எழுத்தாளருக்கும் இயக்குனருக்கும் சண்டை



கொஞ்ச நாளாக எழுத்தாளர் சாருநிவேதிதாவுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் சண்டை. அது என்னவென்று பார்ப்போம். 

சாருவின் 'தேகம்' என்ற நாவல் வெளியீட்டு விழாவுக்கு அவர் இயக்குனர் மிஷ்கினை அழைத்திருந்தார். ஆனால் மிஷ்கினோ அந்த நாவலைப் பற்றி ஒரு உண்மையை கூறிவிட்டார். அதுதான் இந்த சண்டையின் ஆரம்பம். அவர் சொன்ன வார்த்தை 'தேகம்' நாவல் ஒரு சரோஜாதேவி புத்தகம் என்பதே! இந்த ஒரு விமர்சனத்திற்காக சாரு தன் வலைமனையில் 25-க்கும் மேல்  அத்தியாயம் போட்டு மிஷ்கினை திட்டிக்கொண்டிருக்கிறார். முதலில் இது படம் ஓடவும் நாவல் விற்பனை ஆகவும் நடக்கும் stunt   எனக்கருதினேன். ஆனால் சாரு பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. 

சாரு அவர்களே! உங்களுக்கு தமிழ், இந்திய சமுதாயத்தைப் பற்றி நன்றாக தெரியும்! இது பாலியல் ரீதியாக வறண்ட சமூகம். அதற்கு ஒரு வடிகாலாகத்தான் உங்கள் எல்லா நாவல்களும் அமைந்திருக்கின்றன! இது பற்றி நீங்கள் பெருமைப்படுங்கள்! மிஷ்கின் சொன்னதில் தவறொன்றும் இல்லை. சரோஜாதேவி புத்தகங்களிலும் தவறேதும் இல்லை. 

நீங்கள் உயர்ந்த இலக்கியம் எழுதுவதாக கருதிக்கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் நீங்கள் எழுதும் நாவல்கள் பற்றி உங்கள் மனசாட்சிக்கே தெரியும். கெட்ட  கெட்ட வார்த்தைகளில்  நாவல் எழுதிவிட்டு, தண்ணி அடிச்ச கதையையும் களப்பணி செய்த கதையையும் எழுதிவிட்டு அதனூடே கவிதை ரெண்டையும் உபநிஷத்துகளையும் எழுதிவிட்டால் உங்களுக்கு நோபல் கொடுத்துவிடுவார்களா என்ன? அது உயர்ந்த இலக்கியம் ஆகிவிடுமா?   பிறகு  ஏன் இந்த over reaction? ஊருப்பட்ட அரசியல் இந்த உலகத்தில் இருக்கும்போது நீங்கள் பாலுறுப்புகளின் அரசியலைப் பற்றி (The Politics of the Genitals ) ஏன் எழுதவேண்டும்? மொழிமாற்றம் செய்ய ஆயிரம் விஷயங்கள் இருந்தும் ஏன் நீங்கள் 'The Story of the Eye '- ஐ மொழிமாற்றம் செய்ய வேண்டும்? George Bataille சிறந்த படைப்பாளி தான். சந்தேகமில்லை. ஆனால் கண்ணின் கதையை  மொழிமாற்றம்  செய்ததற்கு காரணம் என்ன? 'Sex Sells ' என்ற காரணத்தைத் தவிர வேறென்ன? அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு ரசிகர் வட்டம் இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்!


வேறு விஷயமா இல்லை  இந்தியாவில்?  நீங்கள் இருப்பது இந்தியாவில் சாரு!! 
லத்தீன் அமெரிக்க நாவல்களில் வருவதையெல்லாம் இங்கு செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள்! அது கற்ற சமூகம். பாலுறுப்புகளைப் பற்றி ஸ்பானிஷில் அல்லது பிரெஞ்சில் எழுதுங்கள். 

மிஷ்கினைப் பற்றியும் சொல்லியாகவேண்டும்! 
அவரது அஞ்சாதே படம் பாருங்கள்! அவரது  குட்டு வெளிப்பட்டுவிடும்! (நந்தலாலா படம் ஜப்பானிய படமான 'கிக்குஜாரோ' வின் அப்பட்டமான காப்பி) 

என்னவோ அவர்தான் உலக இயக்குனர்களிலேயே சிறந்தவர் மாதிரி அவர் பீற்றிக்கொள்ளுவது.... அய்யோ சாமி! முடியல!  நாலு புத்தகம் படிச்சிட்டா போதுமா சாமி?! 

தன் 'அஞ்சாதே' திரைப்படத்தைப் பற்றிய கேள்விகள்  சிலவற்றிற்கு மிஷ்கின் பதில்  சொல்லியாக வேண்டும்!
  • குருவி என்ற கதாபாத்திரம் ஏன் தன் ஊனமான கையை அதிகமாக ஆட்டிப் பேசுகிறது? மற்ற கையை ஏன் அதிகமாக பிரயோகிப்பதில்லை?
  • குடிப்பவன் தாடி வைத்திருப்பான்- நல்லவன் தாடி வைக்க மாட்டான் என எப்படி நீங்கள் காட்சி வைத்தீர்கள்? Hero குடிகாரனாக  இருக்கும்போது அவனுக்கு தாடி இருக்கும்! அவன் நல்ல நிலைமைக்கு வரும்போது போது தாடி இருக்காது! இது எப்படி? 
  • தன் Boss -இடம் இருந்து -(ஆஸ்பத்திரியில் இருந்த குற்றவாளி இறந்துவிட்டான் என) அழைப்பு வரும்போது ஏன் ஹீரோ தான் உண்ணும் உணவின் மேலேயே கை கழுவுகிறான்? இது மனுதர்ம கோட்பாடு அல்லவா? (மனுதர்ம கோட்பாட்டின்படி உணவு உண்ணும்போது அதை கை கழுவி விட்டால் அதை திரும்ப உண்ணக்கூடாது. உண்ண சொல்லி யாரும் வற்புறுத்தவும்  கூடாது!) 
  • அந்த Inspector General -ஐ ஒரு தலித் - ஆக காட்டிய காரணம் என்ன!- இந்த கேள்வியை நீங்கள் எளிதாக மறுக்க முடியும்! இருந்தாலும் உங்கள் மனசாட்சிக்கே அது தெரியும்!   
  • ஏன் உங்கள் கதாபாத்திரங்கள் ஒரு சைக்கோ -வைப் போல் நடந்து கொள்கின்றன?

இதற்கு விளக்கங்களை நான் கொடுக்கிறேன்! 
  • குருவி பாத்திரம் தன் ஊனமுற்ற கையை ஆட்டி பேசுவதற்கு காரணம்- அந்த பாத்திரத்தை பொது பாத்திரத்தோடு நீங்கள் கலக்க முற்பட்டதே! இது சாதாரணம். மாற்றுத்திறனாளிகளின் உளவியலை நீங்கள் படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள் எனக் கொள்வோம். அதனால் அவன் குடிப்பது போலவும் ரவுடி போல நடப்பது போலவும் காட்சி வைப்பதா?! குருவி பாத்திரம் தன் ஊனமுற்ற கையை ஆட்டி ஆட்டி பேசுவதற்கு காரணம் அவன் ஊனமுற்றவன் என்று மக்கள் மனதில் பதிய நீங்கள் மேற்கொண்ட முயற்சியே ஆகும். இது வக்கிரம் அல்லவா?  இது உண்மையாகவே மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்முறையே! 
  • இரண்டு மற்றும்  மூன்றாவது கேள்விகளுக்கு பதில்- நீங்கள் ஒரு Cliche -வுக்கு தப்பாத இயக்குனர் என்பதுதான்! இதற்கும் P.வாசுவின் தாலி சென்டிமென்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! 
  • அந்த IG பாத்திரத்தை தலித்-ஆக காட்டியது மட்டுமல்லாமல் அதில் ஒரு லேசான கிண்டலை இழையோடவிட்டிருக்கிறீர்கள்! இது உங்களின் வருணாசிரமப் பற்றினைக் காட்டுகிறது என்று நான் குற்றஞ்சாட்டினால் உங்களால் மறுக்க முடியுமா மிஷ்கின் அவர்களே!    
  • உங்கள் கதாபாத்திரங்கள் சைக்கோக்களைப் போல் நடந்துகொள்ளக் காரணம் என்னவென்றால்- நீங்கள் Sub-human, அல்லது super human பாத்திரங்களை ரசிப்பதை இன்னும் விடவில்லை என்பதே! காமிக்ஸை விட்டு வெளியே வாருங்கள் மிஷ்கின்! இது இயக்குனர் பாலாவிற்கு பொருந்தியது! ஏனென்றால் அவர் படமெடுத்த காலம் அப்படி! இப்போது அது செல்லாது மிஷ்கின்! இன்னும் சொல்லப்போனால் பாலாவுக்கே கூட அது இனிமேல் செல்லுபடி ஆகாது! 


எழுத்தாளர் சாருவிற்கு- புத்தகங்களுக்கும் கூடிய சீக்கிரம் சென்சார் வரப்போகிறது! அப்பொழுது தெரியும். உங்களின் கதி! உடனே பாசிசம் என்று குதிக்கவேண்டாம்!


இது பாசிசம் அல்ல! மக்களுக்கு, அவர்களுக்குத்  தேவையான இலக்கியத்தை கொடுக்கும் முயற்சி! அல்லது தேவையில்லாததைத் தடுக்கும் முயற்சி!