Wednesday, February 9, 2011

திருவாசகம்- நீத்தல் விண்ணப்பம்- எட்டு

கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது 
பாடல்: 23
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்றடியேனை   விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்றடியேன் தன்னை தாங்குநர்  இல்லை என்வாழ்முதலே 
உற்றடியேன் மிகத் தேறிநின்றேன் எனக்குள்ளவனே

விளக்கம்:
 உன் அருளைப் பெற்றபிறகும் பிழைகள் புரிந்து உன் அருளின் ஒளியை சுருக்கிக்கொண்டிருக்கும் இந்த உன்மத்தனை விட்டிடுதி! அவ்வாறு நீ கைவிட்டுவிட்டால் நான் சீரழிந்துவிடுவேன். அதை  நான் கண்டுகொண்டேன்!/அறிந்துகொண்டேன். உன்னை விடுத்தால் என்னைக் காப்பாற்ற யாருமில்லை. என் வாழ்வின் முதன்மையானவனே! என் உள்ளில் உள்ளவனே! 

பாடல்: 24
உள்ளனவேநிற்க இல்லன செய்யும்  மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மாதடக்கை 
பொள்ளல் நல்வேழத்துரியாய்  புலன்நின்கண் போதல் ஒட்டா 
மெள்ளெனவே  மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பெனவே 

விளக்கம்:
 பெரிய தும்பிக்கையை உடைய கஜன் என்ற யானையின் தோலை உரித்து தன்மேல் போர்த்திக்கொண்டிருப்பவனே! நெய்க்குடத்தை 'மொள்' என எறும்புகள் மொய்ப்பது போல என் புலன்கள் நான் உன்பக்கம் நோக்கவே விட மறுக்கிறது! என் காமம் வெள்ளமாகப் பெருகி ஓட, எதைச் செய்ய வேண்டுமோ அதை விடுத்து செய்யக்கூடாததை செய்துகொண்டிருக்கும் என்னை விட்டிடுதி!  

**துழனி-ஆறு
**வேழம்- யானை 

பாடல்; 25
எறும்பிடை நாங்கூழெனப் புலனால் அரிப்புண்டலந்த
வெறுந்தமியேனை விடுதி கண்டாய் வெய்யக் கூற்றோடுங்க 
உறும் கடிப்போதவையே உணர்வுற்றவர்  உம்பரும்பர்
பெரும் பதமே அடியார் பெயராத பெருமையனே 

விளக்கம்: 
மார்க்கண்டேயனின் உயிரெடுக்க வந்த எமனை எத்தி உதைத்தப் பாதங்களை உடையவனே! உன் பெருமை உணர்ந்தோர், தேவதேவர்களெல்லாம்  அடையும் பெறும் பதமே! உன் அடியார்களை விட்டு விலகி நில்லாத பெருமை உடையவனே! (அடியார்களை என்றும் காப்பவனே!).தனியேனாகிய என்னை, எறும்புகளுக்கிடையில் அகப்பட்ட நாங்கூழ் புழுவென என் புலன்கள் அரித்தெடுக்கிறது. என்னை விட்டிடுதி! 

**நாங்கூழ் புழு- மண்புழு எனக் கொள்க
**வெய்யக்கூற்று  - கொடிய எமன்

 பாடல்: 26
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப்பிரிந்த 
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி 
வரும் நீர் மடுவில் மலைச் சிறுதோணி வடிவில்  வெள்ளைக் 
குருநீர் மதி பொதியும் சடைவானக் கொழுமணியே!

விளக்கம்:
பொங்கிப்பெருகி வரும் கங்கையின் மடு ஒன்றில் ஆடும் சிறு தோணியின் வடிவத்தில் பிறைநிலவை சடையில் தரித்த கொழுமணியே! (அளவில் பெரிய மாணிக்கமே!) 
பெருகி ஓடும் வெள்ளம் வற்றும்போது சிறிய மீன் துவள்வதைபோல உன்னைப் பிரிந்த வெறுமையேன்   என்னை விட்டிடுதி!   
 
பாடல்: 27

கொழுமணியேர் நகையார்க் கொங்கைக் குன்றிடை சென்று குன்றி 
விழுமடியேனை விடுதி கண்டாய் மெய்ம்முழுதுங்கம்பித்து     
அழுமடியாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயின்னுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே 

விளக்கம்:
உருண்ட முத்துக்களைப் போன்ற பற்கள் தெரியுமாறு நகைக்கும் மாதரின் தனங்களை நாடிச் சென்று அவைகளுக்கிடையில், குன்றிலிருந்து அருவி வீழ்வதைப் போல வீழும் என்னை கைவிட்டுவிடாதே!

உடலெல்லாம் நடுங்குமாறு உன் அருள்வேண்டி அழும் அடியார்களின் கூட்டத்தில் என்னையும் சேர்த்து என்னை ஆட்கொண்டு அருளினாயே! மாசிலா  மாணிக்கமே! (கழுமணியே)! திருப்பெருந்துறையில் எனக்கு காட்சி  அளித்ததை போல மீண்டும் நின் திருவடிகளைக் காட்டுவாயாக!   

**கம்பித்து- நடுங்கி 

பாடல்: 28

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்நெறிக்கே 
விளங்குகிறேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாம்
கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கருணாகரனே 
துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே 


விளக்கம்:
விண்ணகத்தாராகிய தேவரும் மண்ணகத்தாராகிய  அசுரரும் அருந்துவதற்கு முன் ஆலகாலம் என்ற கொடிய நஞ்சினை உண்டாயே! கருணையின் இருப்பிடமானவனே! புலன்களால் நான் சிற்றின்பத்தில் விழுந்து தவிக்கிறேன்! (துலங்குகின்றேன்!) என்னை ஆட்கொண்டவனே! (அடியேன் உடையாய்) என் குலதெய்வமே! என் புலன்கள் என்னை பயமுறுத்த, நானும் திகைத்து பொய்நெறியின்பால் சென்றுகொண்டிருக்கிறேன்! என்னை விட்டிடுதி! 


 பாடல்: 29

குலங்களைந் தாய்களைந் தாய் என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் 
விலங்கலெந் தாய்விட்டிடுதிகண்டாய் பொன்னின் மின்னுகொன்றை 
அலங்கலந் தாமரை மேனியப் பாவொப்பி லாதவனே 
மலங்களைந்  தாற்சுழல் வன் தயிரிற்பொரு மத்துறவே      

விளக்கம்:
பொன்னைப் போல மிளிரும் கொன்றைப்பூ மாலையை அணிந்தவனே! அழகிய தாமரை போன்ற மேனியுடையோனே! அப்பா! ஒப்பிலாதவனே! ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும், மத்து தயிரைக் கடைவது  போல என்னை சுழற்ற நான் சுழல்கிறேன் (துன்புறுகிறேன்!).  மேரு மலையை வில்லாய் வளைத்தவனே! என் பந்த பாசங்களை அற்று எறிந்தவனே! என்னை விட்டிடுதி!   

**மலங்கள்-அசூயைகள் ஐந்து.   


பாடல்: 30

மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி
வித்துறுவேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக்
கொத்தறுபோது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றி  
தத்தறு நீறுடனாரச் செஞ்சாந்தணி சச்சையனே   
  
விளக்கம்:
நகுசிரம் (நகு+சிரம், சிரிக்கும் சிரம், அதாவது மண்டை ஓடு!)  தலையில் அணிந்து கொன்றை மலர்களை கொத்தாக சூடிக்கொண்டு, குடலை மாலையாக அணிந்து, திருமேனி முழுவதும் திருநீறணிந்து, மணக்கும் செஞ்சாந்துக் குழம்பை உடலில் பூசி விளங்கும் தனித்துவமானவனே!
குளிர்ந்த தயிரில் மத்து கடைவது போல என் புலன்கள் என் மேல் தீ உமிழ, இந்தப் பிறவிப்பிணியை மீண்டும் மீண்டும் தொடரும் என்னை விட்டிடுதி!     
 
**வெண்டலை= வெண்+ தலை- அதாவது நகுசிரம் அல்லது மண்டை ஓடு. 
**இலைச்சி-கொன்றைப்பூக்கள்

   





No comments:

Post a Comment