Wednesday, February 29, 2012

மதப்பற்று- மதவெறி என்ன வித்தியாசம்?


மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் நூலளவே வித்தியாசம் என்று சொல்வர் சிலர். இரண்டையும் சம்பந்தமே இல்லாத இரு உணர்வுகள் எனக் கூறுவர் சிலர். இரண்டையும் ஒன்றாகவே நிறுத்திப் பார்ப்பர் சிலர். இது மூன்றாமவர்களுக்கான கட்டுரை.

மத உணர்வுகள் என்றென்றும் இந்த உலகில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. மனித வரலாறின் வழி நெடுக இது மாறியதில்லை.

மதம் என்பதை ‘கடவுளைச் சார்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு குழு’ எனக் கூறலாம். அதாவது அந்த மதத்தை பின்பற்றுவோர் எல்லாம், கடவுளைக் காரணம் காட்டி இயற்றப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினர்.

கடவுளைக் காரணம் காட்டாத குழுக்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. உதாரணமாக, சமூக சேவை அமைப்புகள், கட்சிகள், அழுத்தக்குழுக்கள், போராட்டக் குழுக்கள், தீவிரவாதக் குழுக்கள், என பல பெயர்களால் இவைகள் அழைக்கப்படுகின்றன.

கடவுள் இல்லை என்பதை நாமெல்லாரும் (அறிவுள்ள மனிதர்களாகிய நாம் எல்லோரும்)  அறிந்திருந்தாலும் கூட, (கடவுள் இருக்கின்றது என்னும் நம்பும் மக்களும் கூட அதை நேரிலே கண்டிராத பட்சத்திலும் கூட), கடவுள் என்ற ஒற்றை விசை மதக்குழுக்களை இதுகாறும் பிழைக்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த கடவுள் என்னும் பெயர்ச்சொல்லால் இந்தக் குழுக்களை (மதங்களை) நிலையாக எதிர்காலத்துக்கும் இழுத்துச் செல்ல, அதாவது பிழைக்கவைக்க முடியாமல் போவது காலத்தின் கட்டாயம்... எல்லாரும் படிக்கிறார்கள், அறிவு கொஞ்சம் வளருகிறது அல்லவா!!

ஆக.. மதங்கள்/மதவாதிகள், தங்களது அணுகுமுறையில் சில மாற்றங்களைக் கொணர எத்தனிக்கிறார்கள். அதாவது, கடவுள் அற்ற குழுக்களின் சில அணுகுமுறைகளை தம் குழுக்களின் அணுகுமுறையோடு, சேர்த்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, காலம் மாற மாற மதத்தைப் பரப்பும் தளத்தை மாற்றிக்கொள்வது.... (தற்காலத்தில் சமூக வலைதளங்கள்!!), மத உணர்வுகளில் அறிவியல் கலந்திருப்பதாக புருடா விடுவது!!!  இதனால், தமக்கு கிடைக்கப்போவது-அந்த கொஞ்ச நஞ்சம் படித்து யோசிக்க ஆரம்பித்துவிட்ட அந்த மக்கள்- என்ற பேராசையோடு அந்த அணுகுமுறை மாற்றத்தைக் கொண்டுவந்தும் விட்டார்கள். 

மதவாதிகளின் இந்த அணுகுமுறை அவர்களுக்கு நிறைய பலன்களை தந்தது... தந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நஞ்சம் படித்த வாலிபர்கள் இந்த மாய வலையால் ஈர்க்கப்பட்டு, இவர்களும் மதம் என்ற நோயை மக்களிடையே பரப்புகிறார்கள். இதில் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் இந்து மற்றும் இஸ்லாம் மத பசங்க தான். முகநூல் தளத்தில் இந்த இரண்டு குழுக்களும் கடவுளைப் பரப்பும் வேகம் மலைக்கவைக்கிறது. ஏன் இந்த வேகம்?? ஏன் இந்த மத உணர்வு?? ஏன் இந்த மத வெறி?? என கேள்வி எழுப்பிக்கொள்வது கட்டாயமாகிறது.

இந்த மாதிரி மதத்தைப் பரப்புபவன் எவனும் கடவுளைக் கண்டதில்லை என்பது உறுதி. என்னதான் அவன் விழுந்து விழுந்து கும்பிட்டாலும், ஒரு எழவும் நடக்கப்போவதில்லை என்பதை நாம் சொன்னாலும் அவன் நம்பப்போவதில்லை.

செத்தவன் ஒருவன் எழுந்து வந்து-இம்மையில் நான் செய்த வழிபாடுகளால் மறுமையில் எனக்கு சொர்க்கம் கிடைத்தது- என ஒரு நாளும் சொன்னதில்லை. அப்படி எவனாவது சொல்லியிருந்தால் நாம் எல்லோரும் அந்த செத்துப் பிழைத்தவனை குறுக்கு விசாரணை செய்து விட்டு பின் இம்மை, மறுமை போன்ற இழவுகளை நம்பித்தொலைக்கலாம். எவனோ ஒருவன் சொன்னானென்று நம்பும் மக்கள், கண் முன்னால் நடக்கும் அறிவியலை நம்ப மறுக்கிறார்கள்.

மதங்கள் எல்லாமே மக்களைப் பிரிக்கும் கோடுகள் என்பதை உணர்ந்து கொண்டால், மத உணர்வு வேறு, மதப்பற்று வேறு, மத வெறி வேறு என்று எவனும் சொல்லமாட்டான். இந்த மூன்று பதங்களுமே ஒன்றுதான். மதம் என்ற ஒன்று, இந்த மூன்று பதங்களுக்குமே பொதுவாக இருக்கிறது அல்லவே???! அந்த மதம்தான் மனிதர்களைப் பிரிக்கிறது! மனிதர்களைப் பிரிப்பதை விட மோசமான வக்கிரமான செயலை, வேறு எது செய்துவிட முடியும்??? 

மத வெறி என்பது வேற்று மதத்தானை கொல்லும் செயலுக்குக் காரணம்  மட்டுமல்ல. மதத்தை அடிப்படையாகக் காட்டி ஒருவன் செய்யும் தர்மம் கூட மதவெறியே.
கொல வெறியில் ஏசு கிறிஸ்து

வின்சென்ட் ஒரு ஏழை என்பதற்காக ஒரு குறிப்பிட்ட ‘குரூப்பில’ சொல்லி உதவி வாங்கித் தரும் ஜோசப்பும், சினிமா நடிகர் ஆர்யா, ஒரு முஸ்லிம் என்பதற்காக, அந்தப் பையனை ஏதோ மார்லன் பிராண்டோவை பாராட்டும் ரேஞ்சுக்கு பாராட்டும் முஸ்லிமும், ஆசிரியையைக் கொன்ற மாணவன் குறிப்பிட்ட மதத்தான் என்பதற்காக (கல்வி அமைப்பு, பெற்றோர் வளர்ப்பு, பாக்கெட் மணி மற்றும் சினிமாக்கள் என்று பல காரணங்கள் இருந்தும் கூட) அந்த ஆசிரியையின் நடத்தையையே  கொச்சைப்படுத்தும் மனிதனும்,  கேப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் மத நூலை மேற்கோள் காட்டிப் பேசும் மனிதனும் மதவெறி பிடித்தவனே. பின்ன.... அவனை வேறு என்னவென்று சொல்வது???

மதவெறி பிடித்து ஆயுதம் தாங்கி மற்றொரு மனிதனைக் கொல்கிறானே... அவன் என்ன 24 மணி நேரமுமா ஆயுதத்தைத் தாங்கி கொலை செய்து கொண்டா  இருக்கிறான்?? இந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் பின்னாளில் மதத்தின் காரணம் கொண்டு கொலை செய்கிறார்கள். கௌரவமான பணியில்/பதவியில் இருப்பவர்கள் கொலை செய்ய மாட்டார்கள்தான். ஆனால் கொலை செய்தவனுக்கு உதவிகள் செய்வார்கள்.


மத உணர்வு என்பதும் மதப் பற்று என்பதும், மத வெறி என்பதன் நீறு பூத்த வடிவங்கள். இது உண்மை எனத் தெரிந்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு விவாதிக்க வரும் சில இளங்கன்றுகள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். மதம் சாரா குழுக்களின் அணுகு முறைகளை, மதகுழுக்கள் பயன்படுத்த ஆரம்பித்ததன் விளைவுகளில் ஒன்றுதான்...... மதப்பற்று, மதஉணர்வு மற்றும் மதவெறி ஆகிய மூன்று பதங்களின் அர்த்தங்களும் ஒன்றாகிப் போன விபரீதம்!

அந்தக் கன்றுகளை மதமயமாக்கத்தான் இந்த அணுகுமுறை மாற்றங்களே கொணரப்பட்டன என்பதை அவர்கள் உணரவேண்டும் என இல்லாத அந்தக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!
   
   After coming into contact with a religious man I always feel I must wash my hands.
   A casual stroll through the lunatic asylum shows that faith does not prove anything 
                                                                                                -Frederich Nietczhe


மதவாதிகளுடன் ஒவ்வொரு முறை பேசி முடித்தபின்னும், என் கைகளில் கறை படிந்ததாக எண்ணி, என் கைகளைக் கழுவிக்கொள்கிறேன்!

மனநல விடுதிகளின் பக்கம் சற்று நடந்து பார்க்கும்போதுதான் உங்களுக்குப் புரியும்... கடவுள் நம்பிக்கையால் ஒன்றையும் புடுங்க முடியாது என்று!!!
- பிரடெரிக் நீட்ஷே