Monday, February 7, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்-ஏழு

 கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது


பாடல்: 19

மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள்தீக்கொளுவும்
விடங்க என் தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வேர் 
ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே

விளக்கம்:
உத்தரகோச மங்கைக்கரசே! கொடிய யானையைத் தோலுரித்து  தீயவர்களை  பயப்படச் செய்தவனே! எருது வாகனனே! (விடங்க!) வனமாக வளர்ந்த என்  வல்வினைகளை உன் அருளின் தீயினால் பொசுக்கிவிடுவாயாக! என் பிறவியினை வேரறுத்து  (வேர் ஒடுங்களைந்து) ஆண்டுகொள்வாயாக! என்னை விட்டிடுதி!


பாடல்: 20

கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே 
வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விடுதி கண்டாய் விண்ணர் நண்ணுகில்லா 
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு ஒப்பு ஆனவனே 


விளக்கம்:
தேவர்களும் (விண்ணர்)  அடையமுடியாத சுவர்க்கத்தில் (உம்பர்)  உறைந்திருக்கும் உத்தரகோசமங்கைக்கரசே! விண், மண், நெருப்பு, காற்று மற்றும் நீரோடு ஐம்பூதங்களாக திகழ்பவனே! என் கோமளமே! பற்றிப்படர ஒரு கொழுகொம்பு இல்லாத, கொடி போல  நான் அலமந்து திகைக்கிறேன்! வெம்புகிறேன்! என்னை விட்டிடுதி!    
 
பாடல்:21

ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் 
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து 
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே


விளக்கம்:

இந்த வினைகள் நிறைந்த என் மனத்தில் தேனையும், பாலையும், கரும்பினையும், (கன்னலையும்)  அமுதத்தையும் ஒத்து என் ஊனையும் எலும்பினையும்  உருக்குகின்ற ஒண்மையனே (Unity )!
என் தாயைப் போன்றவனே!    ஆனைகள்  சண்டையிடும் போர்க்களத்தின்  தரையில் முகிழ்த்துள்ள சிறு புல் (குறுந்தூறு) என்ன பாடுபடுமோ அவ்வாறு என் ஐம்புலன்களின் அழுத்தத்தால் நான் அலைப்புறுகிறேன்! என்னை விட்டிடுதி! 

பாடல்:  22

ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்க்கு 
அண்மையனேஎன்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் 
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப்பெற்றியனே



விளக்கம்:
உண்மையான அடியவர்க்கு ஒரு சேயைப் போல அண்மையானவனே! பெண்கள் தமக்குள் ரகசியத்தை புதைத்துக்கொண்டிருப்பதைப் போல அறிதற்கு அரிதானவனே! உலகின் முதல் ஆண்மகனே! ஆணும் பெண்ணும்   இணைந்த அலி போன்றவனே! (அர்த்தநாரீஸ்வரர்) ஒண்மையனே! மெய் முழுதும் பூசிய (உத்தூளித்து) திருநீற்றால் வெண்மை ஒளி மிளிரும் தகையவனே! என்னை விட்டிடுதி கண்டாய்!   



No comments:

Post a Comment