Wednesday, February 2, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்- நான்கு

 கட்டளைக் கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது

பாடல் : 9
இருதலைக் கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த 
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு 
ஒருதலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 
பொருதரு மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே   

விளக்கம்: 
பெரிய மூன்று உலகத்திற்கும் ஒரு தலைவனாய்  விளங்கும் உத்தரகோச மங்கைக்கரசே! போருக்கேற்ற திருசூலத்தை தன் வலது கையில் ஏந்தி பொலிபவனே! ஐம்பூதங்களின் ஈர்ப்பும் உன் மேலுள்ள ஈர்ப்பும் என்னை இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிக்கச்செய்கின்றன. அதனால் உன்னை பிரிந்த ஆற்றாமையால் விரிந்த கூந்தலோடு புலம்பும்  என்னை விட்டிடுதி!   
மூவிலை வேல்= திரிசூலம் 
பொரு=பொருதுதல்=போர்  
வியன்= பெரிய 
பாடல்: 10
பொலிகின்ற நின்தாள் புகுத்தப் பெற்று ஆக்கையை போக்கப் பெற்று 
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளரி 
ஒலிகின்ற  பூம்பொழில் உத்தரகோசமங்கைக்கரசே 
வலி  நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே 

விளக்கம்: 
வண்டுகளின் ஓசை விளரிப்பண் (ஒரு வகையான இசை)  போல ஒலிக்கக்கூடிய பூஞ்சோலைகளை  உடைய உத்தரகோச மங்கைக்கரசே! மிக வலிமையான  மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்தையும் எரித்த சிவனே! பொலிகின்ற உன்  பாதமலர்களை சரணாகதி புகுந்து இந்த உடலைத் துறப்பதற்காக ஏங்கும் என்னை கைவிட்டுவிடாதே! 

சிலை= வில் 
ஆக்கை= உடல் 
தாள் =பாதங்கள் 

No comments:

Post a Comment