Monday, January 31, 2011

திருவாசகம்- நீத்தல் விண்ணப்பம்- இரண்டு

கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது 

பாடல்: 3  

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரைமரமாய் 
வேருறுவேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் 
ஊருறைவாய்  மன்னும்  உத்தரகோசமங்கைக்கரசே
வாருறு பூண்முலையாள் பங்க என்னை வளர்ப்பவனே     

விளக்கம்:
     சிறந்து விளங்குகின்ற திருவாரூரில்  உறைந்திருப்பவனே! (வாழ்பவனே!)உத்தரகோசமங்கைக்கரசே! இறுகிய கச்சையையும் அணிகலன்களையும் பூண்ட பார்வதியை தன் இடப்பகுதியில் கொண்டிருப்பவனே! என்னை வளர்ப்பவனே !
கார்மேகம் போன்ற கரிய கண்களையுடைய பெண்டிரிடம் எனது ஐம்புலன்களையும் ஆற்றங்கரை மரம் எவ்வளவு எளிதாக வேருறுமோ, அவ்வாறு செலுத்திக்கொண்டிருக்கும் என்னை விட்டிடுதி ! 

பாடல்: 4

வளர்கின்ற நின் கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் 
மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று  
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே 
தெளிகின்ற பொன்னுமின்னும் அன்னத் தோற்ற செழுஞ்சுடரே! 

விளக்கம்:
   பிறை நிலவை தன் நீளமான தலைமுடியில் சூடிக்கொண்டிருக்கும் உத்தரகோசமங்கைக்கரசே! மாசு மரு நீங்கிய தெளிந்த உருகிய பொன்னைப்போன்ற தோற்றம் கொண்டவனே! செழுஞ்சுடரே!  நின் கருணைக்கைகள் நீளும் தகையது. அப்படிப்பட்ட உன் கருணைக்கைகள் என்னை ஆட்கொள்ள நீண்டும் அதனை நீங்கி, அதனின்று விலகி, அதன் இழப்பினை அறியாது, மகிழ்ச்சியாக மிளிர்கின்ற என்னை விட்டிடுதி! 

பக்தன் எட்டி சென்றாலும் இறைவனின் கருணை இன்னும் நீண்டு அவனை காக்கும்-எனவே மாணிக்கவாசகர் 'வளர்கின்ற கருணைக்கை' எனக்குறித்தார் எனக் கொள்க!  



No comments:

Post a Comment