Friday, December 31, 2010

குடி கும்மாளம் புத்தாண்டு

        பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று மாலை நீங்கள் வந்து பார்க்க வேண்டும். நாம் என்ன இந்தியாவில்தான் வசிக்கிறோமா அல்லது ஏதோ மேற்கத்திய நாடுகளில் இருக்கிறோமா என நீங்கள் வியப்பீர்கள். 
புத்தாண்டு கொண்டாட்டம் ஓர் இரவுக்குள் முடிந்துவிடும். ஆனால் அந்த இரவில் நடக்கும் நிகழ்வுகள் அப்படிப்பட்டது. செய்தித்தாட்களில் விளம்பரங்களைக் காணுங்கள். ஓர் இரவுக்கு ஐயாயிரம் ரூபாய். அதுவும் உங்கள் இணையுடன் தான் வரவேண்டும். டிஸ்க் ஜாக்கி என ஒருவன் வருவான். அவனுக்கு அந்த ஓட்டல்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும். சில ஓட்டல்களில் வெளிநாடுகளில் இருந்து கூட அவன் தருவிக்கப்படுவான். இந்த நள்ளிரவு விருந்துகளில் உணவும் சாராயமும் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் ஐயாயிரம் ரூபாய். 

ஆணும் பெண்ணும் குடித்து கும்மாளமடித்து வீடு சென்று சேரும்போது விடிந்திருக்கும். 
ஆஹா! இறைவனின் தரிசனத்தை ஏழையின் சிரிப்பில் அல்ல, பணக்காரர்களின் போதையில் நிச்சயம் கண்டு ரசிக்கலாம்!பேரின்பம்! பேரானந்தம்!  

மக்களே! இந்தியாவில் முன்னூறு மில்லியன் மக்கள் எப்போதும் பசியோடு இருக்கிறார்கள் (CHRONICALLY HUNGRY ). அறுநூறு மில்லியன் மக்கள் அவ்வப்போது பசியோடு இருக்கிறார்கள். (SEASONALLY HUNGRY ). மீதம் இருக்கிற நூறு மில்லியன் மக்களின் அட்டகாசம் தான் இவை. விவசாயம் பொய்த்து, கடன் கழுத்தை நெரிக்க, சென்ற வருடத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தை தாண்டுகிறது. இது மூன்று இந்தோ-பாகிஸ்தான் போர்களில் இழந்த உயிர்களைவிட அதிகம்.  

அந்த ஒருலட்சம் உயிர்களில் தொண்ணூற்று ஒன்பதாயிரம் உயிர்கள் மகாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தது. அந்த மாநிலங்களின் தலைநகரங்களுக்கு தினந்தோறும் வந்து சேரும்  இரயில்களில், தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தை சார்ந்த ஐம்பது இளம்பெண்களாவது
வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர்களில் பெரும்பாலானோர் செய்யத்துணியும் தொழில் என்னவென்று தெரியுமா? ஆந்திரத் தலைநகரிலும் சென்னையிலும் இந்த அவலம் மிக  அதிகம். 

சொந்த நாட்டுக்குள்ளேயே இவ்வளவு பேதங்கள். அமெரிக்கன் அதிகம் தின்கிறான் என குற்றம் சாட்ட உனக்கு என்ன தகுதி வந்துவிட்டது நண்பனே! உன் தேவைக்கு மீறிய பணம், மற்றோரிடமிருந்து பிடுங்கப்பட்டது எனப்புரிந்து கொள். நான் உழைத்தேன், நான் சம்பாதித்தேன், நான் செலவு செய்கிறேன் எனத் தற்குறி போல் எண்ணாதே. உன் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை நீ பெற்றிருந்தால் உன்னால் பணத்தை விசிற முடியாது நண்பா. விவசாயத்தை நம்பி, அரசை நம்பி, அரசின் கொள்கைகளை நம்பி, உரத்துறை  மந்திரியை நம்பி, அரசின் கடனை நம்பி, கந்து வட்டிக்காரனின் கருணையை நம்பி வாழும் ஒருவனின் அந்நிலைக்கு அவன் மட்டுமே காரணமில்லை.

யார் சொன்னார்கள் விவசாயம் செய்யச்சொல்லி? நீயும் software industry -க்கு வா என் அவனை நோக்கிக் கூறினால் , நீ அதற்கு மேல் மலத்தை மட்டுமே உண்ண முடியும் நண்பா. சோறு கிடைக்காது. Recycling தான். 

புதிய ஆண்டை கொண்டாடிக்கொள்ளுங்கள். வாழிய புத்தாண்டு. இந்த முறை சற்றே வேறு மாதிரி கொண்டாடுங்கள். இந்த ஒரு நாளாவது தானம் செய்யுங்கள். நீங்கள் செலவிடும் பணத்தை RURAL INFRASTRUCTURE DEVELOPMENT FUND -க்கு அனுப்பி வையுங்கள். FLOOD RELIEF -க்கு அனுப்புங்கள். பார்க்கலாம். என்னதான் ஆகிறது என்று. விடியும் வரை குடித்து, ஆடி விடிந்தபின் மூத்திரமாகப் போகும் சாராயத்திற்கு செலவிடாமல் வேறு விதமாகத்தான் செய்து பாருங்களேன்.  உதவுவதால் கிடைக்கும் போதை, சாராய போதையை விடப் பெரியது. இல்லையென்றால் அளவோடு குடித்து வளமோடு வாழ்ந்து, மீந்த பணத்தையாவது அனுப்புங்களேன். அதிக காசு கொடுத்து ஆங்கிலப்புத்தாண்டை அனுபவிக்க ஆங்கிலேயர்களுக்கு பிறந்தவர்கள் இருக்கிறார்கள். 

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

Thursday, December 30, 2010

நிறம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு மற்றோரிடமிருந்து பிரிக்கிறது?

மானுடவியலின் கூற்றுப்படி மனிதனின் நிறம் என்பது அந்த மனிதனின் முன்னோரின் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தது. மானுடவியல் மனித இனத்தை பலவாகப்பிரிக்கிறது. அவை யாவன, Negroid ,Negrito , Negrillo ,mediterraneans , Paleo -mediterraneans , australoids , Nordics , Caucasoids , Mongoloids  என பலவகை உண்டு. ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், முடியின் அமைப்பு, உயரம், மூக்கின் அகலம் (அ) கூர்மை, உடலின் நிறம் முதலியன. இந்த ஒவ்வொரு இனத்திலும் பல பிரிவுகள் உண்டு. இந்தியாவில் அனைத்துப்பிரிவுகளையும் நாம் காணமுடியும். 
இது ஒரு புறம். 

மானுடவியலாளர்களின் இன்னொரு கருத்து என்னவென்றால் சாதிகள் எல்லாம் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தே உருவானது என்பதே. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் பரிணாம வளர்ச்சி இன்னும் முழுமை பெறவில்லை என இந்தக் கருத்தை வைத்து உறுதியாகக் கூற முடியாதுதான். ஆனால் கருமை என்பது இழிவு, சப்பை மூக்கு என்பது அசிங்கம் என்ற கருத்துகள் மிக முன்னேறிய நாட்டில் கூட வழங்கப்பட்டு வருபவை. கருப்பர்கள் சப்பை மூக்கு அமைந்தோர், இன்னும் உலக  அளவில் தனிமைப்படுத்தப்பட்டே வருகிறார்கள். இதை யார் வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் அவர்கள் தம்மைத்தாமே கண்ணாடி முன் வினவிக்கொள்ளவேண்டும். Racism is  a  global phenomenon. காந்தி கூட இனவெறியால்  பாதிக்கப்பட்டவர்தான். நீங்கள் கேட்கலாம். ஒபாமா, கறுப்பராயிருந்தாலும் அமெரிக்க அதிபராக வெற்றி பெறவில்லையா என்று..  

Karishma  என்று ஒன்று உண்டு. அது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அந்த கரிஷ்மா என்பது கருப்பான நிறத்தினருக்கு அமைவது வெகு அரிது. ரஜினிகாந்த், ஒபாமா  ஆகியோர் அதற்க்கு உதாரணம். ஆனால் உடல் நிறமே, குறிப்பாக வெள்ளை நிறம்  மக்களைக் கவர்வதற்கு முக்கியமான ஒன்று என்பது பல நேரங்களில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நிறக்கவர்ச்சி, உலக மக்கள் எல்லோருக்கும், குறிப்பாக ஆசிய மக்களுக்கு உண்டு. 

இந்தியருக்கு இது  அதிகம் உண்டு. அதிலும் ஏழைகளுக்கு. அம்மக்களுக்கு அவர்கள் தெய்வம் போல  காட்சி தருவார்கள். நினைவு  கொள்க-வடிவேல் காமெடி- "வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்டா...".   அவர்களின் குறைந்தபட்ச தியாகம்  கூட ஏழைகளுக்கு மிக உயர்ந்ததாகப்படும். 

மக்களே! ஒன்று சிந்தியுங்கள். இந்திராகாந்தியை விட உங்களால் பாபு ஜகஜீவன் ராமை பிரதமராக யோசிக்கமுடிகிறதா? ராஜீவ் காந்தியின் இடத்திற்கு  உங்களால் மூப்பனாரை   யோசிக்க முடிகிறதா? இந்திராகாந்தியைவிட,  ராஜீவ் காந்தியை விட ஜகஜீவன் ராமும் மூப்பனாரும் அதிகத் தகுதி பெற்றிருந்தாலும் கூட...

முடியவில்லை தானே? ஏன்?

இன உணர்வு என்பது அழியப்போவதில்லை. சாதி என்ற அழுகிய கட்டமைப்பு இந்தியாவில் இருக்கலாம். ஆனால் இனம் என்ற உணர்வு உலகம் முழுவதிலும் இருக்கிறது. அது உருவத்தில், உடலமைப்பில்  இல்லை. அதை நோக்கும் மனதில் உள்ளது. அது அழகு எது என்ற கருத்துரையில் பதிந்துள்ளது. அழகு என்பது என்ன எபதை தற்கால அழகியல் பதிவு செய்ய மறக்கவில்லை என்றாலும், அதை  மக்கள் மனதில் விதைக்க மறந்ததே அழகியலின் பெரிய குறை. அது விதைக்கப்படும் வரை, இன உணர்வு இருக்கத்தான் செய்யும். American   History -X என்ற படத்தைப் பாருங்கள். இனம், இன உணர்வு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் உங்களுக்குப் புரியும்.

Wednesday, December 29, 2010

அட்வைஸ் முயல்- கோவக்கார சிங்கம்



ஒரு காட்டிலே முயலொன்று சந்தோஷமாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒட்டகச் சிவிங்கி கஞ்சா அடிப்பதற்காக, காட்டை  சுற்றிக்கொண்டிந்தது. பதறிப்போன முயலானது,"ஒட்டகச் சிவிங்கியே! போதைப் பொருள் தீங்கு விளைவிக்கும். வா என்னுடன். சந்தோஷமாக காட்டைச் சுற்றி ஓடிவருவோம்", என்றது. சிவிங்கியும் மனது மாறி கஞ்சாவை எறிந்து விட்டு முயலுடன் ஓட ஆரம்பித்தது. 

அவையிரண்டும் ஒரு யானையைச் சந்தித்தன. அப்போது யானை சுகமாக கோகெயினை உறிஞ்சும் முயற்சியிலிருந்தது. முயலோ வழக்கம் போல யானையிடம், "போதைப் பொருள் வேண்டாம். வா எங்களுடன். சந்தோஷமாக காட்டைச் சுற்றி ஓடிவருவோம்", என்றது. யானையும் சம்மதித்தது. மூன்று மிருகங்களும் ஓட ஆரம்பித்தன. 

அப்போது ஒரு சிங்கம் போதை ஊசியை போட்டுக் கொள்ள தயாரானது. உடனே முயல் தனது பல்லவியை ஆரம்பித்தது. நிமிர்ந்து பார்த்த சிங்கம் ஊசியை கீழே வைத்து விட்டு முயலை சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்தது. 

பதறிப் போன சிவிங்கியும், யானையும்," சிங்க ராஜாவே! முயலை ஏன் அடிக்கின்றீர்கள்? நமக்கு நல்லதற்குதானே சொல்லுகின்றது" என்று கோரஸ் போட்டன. சிங்கம் சொன்னது," என்னாது? இந்த முயலா? நமது நன்மைக்கா? எப்போ 'எக்ஸ்டஸி' போட்டாலும் இந்த முயல் இப்படித்தான். ஒரு அடிமுட்டாள் போல என்னை காட்டையே சுற்றி சுற்றி ஓட வைக்கும்" என்றது. 



நீதி: எவன் என்ன அட்வைஸ் பண்ணாலும் முதல்ல அவன் அதை செய்யிறானா என்று தெரிந்து கொண்டு பின் ஏற்றுக்கொள்ளவும். 

Tuesday, December 28, 2010

எப்படி முடிந்தது உன்னால்



கடைசி இரவின் கடைசி முத்தம்  
கண்ணீர்கள் கையசைப்புகள்
மின்னல்களாக தோன்றிச்செல்லும் 
நினைவில் மட்டும் அல்லாது பிறவிலும்


நேர்க்கோடாய்ச்செல்லும் காலுள்ள 
சர்ப்பம் ஒன்றைக் கண்டேன் 
மகிழ மரத்தடி சென்று மீண்டு வந்தது
வெளிவந்த பிக்கு ஒன்று  சொன்னான்
சர்ப்பத்தின் காலடியைத் தேடு. 


இறங்கிய  மழைத்துளிகள் எல்லாம் 
என் நினைவூட்டியதோ? 
பாலை நிலத்தில் நான் கம்பிகளைப் 
பற்றிக்கொண்டிருந்தேன்- நீ 
மழையில் நனைந்த நேரம் 


யாதொன்றும் பிழையில்லை 
இனியாவது என் மனைவியாயிரு.

பழமைவாதம் பழையபஞ்சாங்கம்

சில பெருசுகள் பழமைவாதம் பேசுவதை நாம் எல்லோரும் கண்டிருப்போம். இந்த பெருசுகள் தங்களின் பிள்ளைகளுக்கும்  இந்த பழமைவாதத்தை பரம்பரை சொத்தைப்போல  விட்டுச்சென்றுவிடுவார்கள். இந்த சிறுசுகள் பெருசுகளாக மாறுவதற்கு முன்பே பழைய பஞ்சாங்கத்தை பாட ஆரம்பித்துவிடுவான்கள். என்ன கொடுமை சரவணன் இது? பழைய பாடல்கள், பழைய காலத்து ஆட்கள், அந்த காலத்து கலாச்சாரம்  என இந்தப்பெருசுகளின் தொல்லை தாங்கமுடியாது.
ஒரு விஷயம் தெளிவாக நான் சொல்கிறேன். கி.ராஜநாராயணன் கூட இதைத்தான் சொல்லுவார். மனுஷன் இருக்கும் இடமெல்லாம் மனுஷ நாற்றம் அடிக்கும். இந்த காலம் மட்டுமல்ல. எந்த காலத்திலும் நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது. இதை ஏன்  இந்த பெருசுகள் உணர மறுக்கிறார்கள்? அந்த காலத்திலும் கள்ளக்காதல் இருந்தது. உலகின் முதல் தொழிலே விபச்சாரம்தான். 'தானே கள்வன், தாமது பொய்ப்பின் யாமெவன் செய்கோ ' என குறுந்தொகைத்தலைவி   குருகு ஒன்றை சாட்சி தேடி  குமுறவில்லையா என்ன? அன்று செய்த 'மடலேறுதல்' தான் இன்று 'Eve Teasing '.  

இதே மாதிரி பழைய பாடல் ரசிக்கும் கும்பல் ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரியான சங்கீதம் அது. ரொம்ப  தடவை கேட்டால் போர் அடிக்கும். கே. வி. மகாதேவன் போன்றவர்களின் இசை நன்றாக இருக்கும். 'வாராய் நீ வாராய்' பாட்டைகேட்டு பாருங்கள். கிடார்-இன் இன்னிசையை நுகர முடியும். எம். எஸ். வி. இசை அந்தளவுக்கு கவராது. எம். எஸ். வி ஒரு realist and a romanticist .  இளையராஜா,  ஹாரிஸ் ஜெயராஜ், ரஹ்மான் போன்றோரின் இசையை ரசிக்கும் அளவுக்கு என்னால் பழைய பாடல்களை ரசிக்க முடியவில்லை. பழைய இசையில் புதுமை இல்லை. புதிய சத்தங்கள் இல்லை. புதிய தொழில்நுட்பங்கள் இல்லை.
அதே மாதிரி பழைய படங்கள். சில பழைய படங்களுக்கு  இன்னும் இருக்கும் மரியாதை வியப்பளிக்கிறது. உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், பாசமலர், உலகம் சுற்றும் வாலிபன்  போன்ற படங்கள். இந்த படங்களை இப்போது வெளியிட்டால் கூட குறைந்தது ஐம்பது நாட்கள் ஓடுகிறது.  தமிழர்களின் வீக் பாயிண்ட்-ஐ சரியாக கணித்தவர் எம்.ஜி.ஆர் தான். தன்னைவிட குறைந்தது நாற்பது வருடங்களாவது இளைய நடிகையை கவர்ச்சி (கவுச்சி)  நடனம் ஆடவிட்டு, அடித்தட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். இயக்குனரின் சொல் பேச்சு கேட்டு எம்.ஜி.ஆர் நடித்த காலத்தில் வெளிவாத படங்களெல்லாம் காவியம்.  அவர் சொல் பேச்சு கேட்டு இயக்கப்பட்ட படங்களைப்பார்த்தால்தான் தெரியும்.
இதெல்லாம் ரசித்தார்கள் நம்ம பெருசுகள்.

இந்த 'பாசமலர்' படம் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சிக்மொந்த் பிரைட்-இன் கூற்றுப்படி எல்லா உறவுகளுக்கும்  அடிப்படை sexual Energy-யே. தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி என எதிர் பால் உறவுகள் மட்டுமல்லாது ஓர்பால் உறவுகள் கூட sexual energy -ஐ சார்ந்தே இருக்கும். இந்தகூற்றை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள், சிக்மொந்த் பிராய்டின் முடிவு  மனநோயாளிகளிடம் பரிசோதித்த  ஆராய்ச்சியின் முடிவு என மறுதலிப்பார்கள். ஆனால் Sex is one of the basic instincts. சாமானியனுக்கும் மெண்டலுக்கும் ஒன்றே.     அப்படி என்ன தங்கை மீது அப்படி ஒரு பாசம்? என்ன எழவு இது? இந்த படம்  ஒரு பாதியை இழந்து திரியும் மறு பாதியின் அவலத்தைப்பற்றியது. சிக்மொந்த் பிரைட்-இன் கூற்றுப்படி பார்த்தால் எனக்குத்தெரிந்து பாசமலர் படம் போன்ற ஒரு vulgar - ஆன படம் இதுவரை தமிழில் வெளியானதில்லை.   

Monday, December 27, 2010

கவிதைகள், கண்ணதாசன்





இதுவரை திரையுலகம் கண்ட , திரையுலகத்திற்கு மேலாக கவியுலகமும் கண்ட கவிகள் எல்லோரையும் விட கண்ணதாசனே சிறந்தவர் என்ற கருத்து நிலவி வருகிறது. இதைப்போல ஒரு அசிங்கமான கருத்து வேறில்லை.
இந்த கருத்துக்கான காரணத்தை நாம் அலச வேண்டும். 1950 லிருந்து 1975 வரையிலான காலகட்டம் தமிழகம்  திராவிடக்கட்சியினரின் பிடியில் இருந்தது. அவர்களின் மேடைப்பேச்சுக்களை கேட்டால் உங்களுக்குப்புரியும்.
அடுக்குமொழி பேசுவதாகக்கருதிக்கொண்டு அவர்களின் முட்டாள்தனமான உளறல்கள்- ஐயோ அம்மா- இது அண்ணா காலத்திலிருந்தே தொடர்கிறது. தமிழ் தமிழ் என்று தமிழனுக்கு இன உணர்வு ஊட்டி, கூடவே ரசிப்புத்திறனையும் மழுங்கடித்த பெருமை திராவிக்கட்சியினருக்கு உண்டு. T ராஜேந்தர் எல்லாம் இந்த வகையறா தான்.

அத்திக்காய் காய் காய் போன்ற பாடல்கள் நல்ல தமிழை தமிழனுக்குக்கொடுத்ததை நாம் மறுக்கவில்லை.ஆனால் தகுதிக்கு மீறிய அங்கீகாரம் ஒருவருக்கு  கிடைப்பதைத்தான் பொறுக்கமுடியவில்லை.
இன்று திரையுலகில் இருக்கும் யுகபாரதி, தாமரை, கபிலன், அறிவுமதி போன்ற தமிழ்க்கருவூலங்களைப்போல கண்ணதாசன் எழுதியிருக்கிறாரா? வேண்டுமானால் கண்ணதாசனை இயக்குனர் பேரரசு-வுடன் ஒப்பிடலாம்.   
இன்னோர் பாரதியாக  பாடல்கள் எழுதும் யுகபாரதி, இதுவரை தமிழ் இசை ரசிகன் கேட்டறியாத, ஏடுகளில் மட்டும் புழங்கப்பட்டு வந்த புதிய சொற்களை கையாளும் தாமரை, விளிம்பு நிலை மனிதருக்கும் புரியுமாறு புரியாத பல சித்தாந்தங்களை எளிமையாகக்கூறும் கபிலன், தமிழில் பிறமொழியை கலந்து அதை மாசுபடுத்த மறுக்கும் அறிவுமதி- இவர்கள் தான் மக்கள் தமிழை காக்க வந்த தமிழ்தூதுவர்கள். போற்றவேண்டுமானால் இவர்களை  போற்றுங்கள்.  





அரசியல் அலசல் கட்டுரைகள்- இனி நாம் பார்க்கப்போவது இதைத்தான். கவிதைகள் வரும் போகும். கட்டுரைகளே மேலோங்கும்.

Thursday, December 23, 2010

ஏதோ கடவுள்கள்




மாலை ஏழு மணி
வாகனம் நிற்கும் சிக்னலின் பக்கம்

நடைபாதை ஓரம் இரு குழவிகள் 
அக்காள் ஒன்று தம்பி ஒன்று
இருவர் கையிலும் ஏதோ மரத்து இலைகள் 
இலைகளின் மேல் ஏதோ பண்டம் 

ஆயிரம் வாகனம் சிக்னலுக்கு அப்பால் 
அந்த பண்டத்தை அசை போட்டு உண்ணும் 
இருவருக்கும் ஏதோ சந்தோஷம்
மகிழ்ச்சியாய் நடக்கிறது உரையாடல் 

கன்னடத்தில் பேசும் குரல்கள்
சிக்னல் ஒலியையும் மீறி கேட்க
ஒருவரும் அப்புறம் திரும்பாதிருக்க

உலகத்துயரை உங்களுக்கே  கொடுத்தேன்
எனக்கு ஏதடா துயரமும் இன்னொன்றும்- என  
எள்ளி சிரித்து  இருவரும் இருக்கக்
கண்டேன் ஏதோ இரு கடவுள்களை

மாலை ஏழு மணி
வாகனம் நிற்கும் சிக்னலின் பக்கம்

Wednesday, December 22, 2010

பெரிய கோயிலுக்கு  பிறந்தநாள் வாழ்த்து  


ஆயிரம் ஆண்டு கோயில் கட்டிய 
செங்கோல் மன்னன் இராஜராஜன் 
ரொம்ப பெருமை உங்களுக்கெல்லாம் 


கற்களே இல்லா தஞ்சை மண்ணில் 
கற்கள் கொண்டு கோயில் சமைத்தான் 
சிற்பங்கள் செய்து நடுவில் ஒரு 
சிவலிங்கத்தையும் செருகி வைத்தான்


எத்தனை இரத்தம் சிந்தியிருக்கும்  
எத்தனை தலைமுறை அழிந்திருக்கும் 
யார் கேட்டார்கள் இந்த கோயில்களெல்லாம் 
கோயில் இல்லா நாடுகளில் மக்கள் 
குடியிருக்கவில்லையா என்ன? 


சேர பாண்டியர் பல்லவர் கொன்றான் 
கடல் கடந்து இலங்கை வென்றான் 
புவிமையக் கோடு தாண்டி 
புதிய தீவில் பெண்ணாண்டான்


அவன் மகனோ 


கனக விசயரை கல் சுமக்க விட்டான்
சமகாலத்து கற்பினை அறிமுகம் செய்தான் 
கங்கை வென்றான் கடாரம் கொண்டான்
தகப்பன் செய்தது போதாதென்று 
தானும் ஒரு கோயில்  செய்தான்
ரொம்ப பெருமை உங்களுக்கெல்லாம் 
  
பரங்கியரை வெறுத்தீர்கள் 
அமெரிக்கரை வெறுக்கிறீர்கள் 
உங்களின் உண்மை நிறத்தை அறிந்துகொண்டீரா?
அதுவும் ஏகாதிபத்தியத்தின் நிறம் தான். 


இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு 
பெரிய கோயில் நிலைத்திருக்கும் 
நீங்கள் கண்டு கண்டு பரவசப்பட


பெருமைபட்டு கொள்ளுங்கள் 

Tuesday, December 21, 2010

நடனமாதுக்கள்



சுழன்று நடனமாடும் அவள் விழியோரம்
சிறு துளி கண்ணீரை ஏன் நான் மட்டும் கண்டேன்?
பத்து ருபாய் தாட்கள் எறியப்படும் திசையில்
சிரித்த வண்ணம் சிறிது நேரம்
கண்ணுக்கு கண் நேராக நோக்குகிறாள்

மதுக்கூடம், வெறி ஏறிய விழிகள்
ஆடி முடித்த  அவளிடம் நான்
ஏதொரு கூச்சத்தையும் காணவில்லை
அகநானூற்று பரத்தையும் இப்படித்தான் இருந்தாளோ?

அவள்  ஒருத்தி மட்டும்
காலணி ஏதும்  அணிந்திருக்கவில்லை.
 தமிழ் தெய்வீகமானதா?

தமிழ்க்காவலர்களே,

     மொழி ஓசைகளின் வடிவம் தானே?
     கருத்துகளை பரிமாறத்தேவையான வாகனம் தானே?
     அதற்கு கற்பு, புனிதம் எல்லாம் கற்பித்து-அதன் 
     வளர்ச்சியை தடுக்க வேண்டாம்.
    உலக பல்கலைகழகங்களில் அறிமுகப்படுத்துங்கள்
    சீரிய இலக்கியங்களை இயற்றுங்கள்.
    பழமையைக்கருதி புதுமையை விரட்டாதிர்கள்
    மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
   தமிழின் மாண்பு தானே புரியும்
    பெண்ணாக உருமாற்றி தமிழை
    அடிமை கொள்ளாதீர்கள்
   தமிழினி மெல்ல பிழைத்துக்கொள்ளும்