Friday, February 4, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்-ஆறு

 கட்டளைக்கலித்துறையில்  மாணிக்க வாசகர் அருளியது 


பாடல்: 15


களிவந்த சிந்தனையொடு உன் கழல் கண்டும் கலந்தருள 
வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெயச்சுடர்க்கெல்லாம் 
ஒளிவந்த பூங்கழல் உத்தரகோசமங்கைக்கரசே
அளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே 


விளக்கம்:
உலகத்து மெய்ச் சுடர்களுக்கேல்லாம் ஒளி வழங்கக்கூடிய கழல்களை அணிந்த தாள்களை உடைய உத்தரகோசமங்கைக்கரசே! எனக்கு அருள் அளிக்க வந்தவனே! என் தந்தை போன்றவனே! என்னை ஆள்கின்ற என் அப்பனே!  களி வந்த சிந்தனையோடு (விளையாட்டுத்தனமாக) உன் பாதமலர்களை கண்ட பின்பும் உன்னுடன் கலந்து தழுவிக்கொள்ள (இப்பிறவிவை துறக்க) இயலாதவனான என்னை விட்டிடுதி!    

பாடல் : 16


என்னை அப்பா அஞ்சல் என்பவரின்றி நின்று எய்த்து அலைந்தேன் 
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே 
உன்னை ஒப்பாய் உத்தரகோசமங்கைக்கரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும்பொருளே 


விளக்கம்:
உன்னை யாரோடு நான் உவமிப்பது?! மெய்யின் வடிவமே!  நீ உன்னையே ஒப்பாய். (ஒப்பில்லாதவனே!!)
உத்தரகோசமங்கைக்கரசே! என் அன்னையைப் போன்றவனே! தந்தையைப் போன்றவனே! என் அரும்பொருளே! 
என்னை தேற்றி, ' அப்பா! அஞ்சற்க!' என்று ஆறுதற்படுத்த யாருமின்றி நான் அலைந்தேன்! எரி மின்னலைப் போன்றவனே! என்னை விட்டிடுதி!   

பாடல்: 17


பொருளே  தமியேன் புகலிடமே நின்  புகழ் இகழ்வார் 
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் 
அருளே அணிபொழில் உத்தரகோசமங்கைக்கரசே
இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே 


விளக்கம்:

சான்றோர்கள்  விரும்பும் அருளே! அழகு மிகுந்த சோலைகள் அமைந்த உத்தரகொசமங்கையில் குடியிருப்பவனே! ஒளியாகவும் இருளாகவும், ஜகப்பொருளாகவும் பரம்பொருளாகவும் இருப்பவனே! மிகச்சிறியவனான எனக்கு புகலிடமாக இருப்பவனே! உன் புகழை இகழ்வார் அஞ்சும் தகைத்தவனே! என்னை விட்டிடுதி!   

பாடல்: 18


இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால் 
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் 
அருந்தினனே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே 


விளக்கம்:

ஆலகால நஞ்சினை அமுதினைப் போல அருந்தியவனே! உத்தரகோசமங்கைக்கரசே! பிறவிப்பிணி கண்டு உழல்வோர்க்கேல்லாம் அப்பிறவிச்சங்கிலியை அறுத்தெறியும் மருந்தானவனே!  
நீ என்னை ஆண்டு கொள்! விற்றுக் கொள்! அடகு வை! என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்! 
எனக்குள்ளேயே விருந்தினனாக இருக்கும் ( I, My SELF, which is not, in my control) விட்டிடுதி! 
  


No comments:

Post a Comment