Monday, February 14, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்-ஒன்பது

கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது

பாடல்: 31
சச்சையனேமிக்க  தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் 
விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய் 
பச்சையனே செய்ய மேனியனே யொண்பட அரவக் 
கச்சையனே கடந்தாய் தடந்தாள அடற்கரியே 


விளக்கம்: 
நுட்பமானவனே! நீர், வானம், காற்று, நிலம், நெருப்பு என ஐம்பூதங்களாக விளங்குபவனே! கருமை நிறமானவனே! பச்சை நிறமானவனே! சிவந்த மேனியை உடையவனே! பாம்பினை தன் அரைக்கச்சையாக அணிந்தவனே! கொடிய பெரிய கால்களை உடைய யானையை சம்ஹாரம் செய்தவனே! என்னை விட்டிடுதி!  

பாடல்: 32
அடற்கரி போல் ஐம்புலங்களுக்கஞ்சி அழிந்த என்னை 
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்க்கல்லால்
தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக்
கடற்கரி தாஎழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டேனே


விளக்கம்:
உண்மையான அடியார்களைத் தவிர பிறரால் நெருங்க முடியாதவனே! ஒளிவீசும் மாமணியே! தன்னைப் பயன்படுத்தி கடைவதனால் ஏற்படும் வெப்பத்தைப் பொறுக்கமுடியாமல் ஆதிசேஷன் கடலையே கருமையாக்க வல்ல நஞ்சைக் கக்க, அதனை பிறரைக் காக்கும் பொருட்டு எடுத்து விழுங்கியதால் கண்டத்தில் கறை உடையோனே! உன்னை எவரும் விட்டுவிலக  இயலாத் தகையவனே! கொடிய யானைகள் போல் புலன்கள் வருத்தும் என்னை விட்டிடுதி!

பாடல்: 33 
கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரைமலர்த்தாள் 
பண்டு தந்தார்போற் பணித்துப் பணி செயக் கூவித்தென்னைக்
கொண்டெனெந் தாய்களை யாய் கலையாய குதுகுதுப்பே      

விளக்கம்:
திருப்பெருந்துறையில் அன்றொருநாள் காட்சியளித்து, நின் மலர் மணம் வீசும் திருவடிகளைக் காட்டியதுபோல் மீண்டும் அருளி, என்னை நின் பணி செய்ய பணித்து, என் கலையாத பிறவிமோகத்தை களைந்துவிடுவாயாக! மனம் போன போக்கில், கண்டதை செய்து, உன் கருணைத்தேனை பருகிக் களித்து தவிக்கும் என்னை விட்டிடுதி. 
(அதாவது உன் கருணைக்கு நான் பாத்திரம் அல்ல. ஏனென்றால் நான் பூலோக வாழ்வை இன்னும் துறக்கவில்லை. ஆனாலும் உன் கருணை இன்றி நான் இல்லை என சுயகழிவிரக்கத்தால் புலம்புகிறார் மாணிக்கவாசகப்பெருமான்!)  

பாடல்: 34

குதுகுதுப்பின்றி என் குறிப்பே செய்து நின்குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதிகண்டாய்  விரை யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து
எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே


விளக்கம்:
இனியவனே! என் மனதை வாழைப் பழத்தைப் போல் கனிவித்து, திருப்பெருந்துறையில் எனக்குக் காட்சியளித்தது போல் மீண்டும் காட்சியளித்தால் உன்னை எதிர்கொள்வது எவ்வாறு என எனக்குச் சொல்லித்தருவாயாக! கயிலாய மலையில் வீற்றிருப்பவனே! 
எந்தக் குற்றஉணர்வும் இல்லாமல் என் விருப்பம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்னை விட்டிடுதி!  

பாடல்: 35
பரம்பரனே நின்பழஅடி யாரோடும் என்படிறு
விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம்
பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே

விளக்கம்:
மென்மையான முயலைப் போன்ற வெண்ணிற பிறைச்சந்திரனையும் கழுத்தைச் சுற்றி படர்ந்திருக்கும் அரவத்தையும்  சமமான இடத்தில்  வைத்திருக்கும் பெருமானே! இந்தப் பிறவி என்னும் ஐந்து தலை நாகம் (புலன்களைக் குறிப்பிடுகிறார்:- ஐவாய் அரவம்) என் மனம் அஞ்சுமாறு என்னை வாட்டுகிறது! பரம்பரனே! உன் அடியார்களோடு என்னை  இணைந்திருக்க அனுமதித்தவனே! என்னை விட்டிடுதி!  

ஐவாய் அரவம்- ஐந்து தலை நாகம் 
நேர்வு- ஒப்பு
பரம்- அரவம்  

 பாடல்: 36
பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ
வெதும்புகிறேனை விடுதி கண்டாய் விரையார் நறவம்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே 

விளக்கம்:
நின் தலையில் சூடியுள்ள, தேன் ததும்பும் மந்தார மலர்களில் அமர்ந்து தேனை உண்ட வண்டு 'தாரம்' (தாரம் என்பது ஒரு இசை வகை) இசைக்கும், அவிழ்ந்த சடையை உடையவனே! கொழுந்து விட்டெரியும் தீப்போல என் புலன்கள் என்னை சுட்டெரிக்க நான் துன்புறுகிறேன்! என்னை விட்டிடுதி!    
  
பாடல்: 37
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால்
விரைசேர் மிடியாய் விடுதிகண்டாய் வெண்ணகைக் கருங்கண் 
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா 
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந் தடர்வனவே


விளக்கம்:
வெண்ணிறப் பற்களையும் கரிய கண்களையும், அலைபோலாடும் கூந்தலையும் கொண்ட பார்வதியை மணந்தவனே! பாம்பினைக் கச்சையாக அணிந்திருக்கும் பொற்பாதங்களையுடையவனே!  ஐந்து மலைகள் சேர்ந்து நெருக்குவது போல் என் ஐம்புலன்களும் என்னை நெருக்குகின்றன! என் அரசே! அறியாச்சிறியேனாகிய நான் என் பிழைகளுக்கு அஞ்சாமல் திரிந்தாலும், எனக்கு அருள் பாலிக்க விரைபவனே! என்னை விட்டிடுதி!  

புயங்கா- பாம்பினை அணிந்தவனே! 
வரை- மலை
  
பாடல்:  38
அடர்புலனால் நிற்பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
விடர் விடலேனை விடுதிகண்டாய் விரிந்தேயெரியுஞ்
சுடரனை யாய் சுடுகாட்டரசே தொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாம்  தமியேன் தனி நீக்குந் தனித்துணையே 

விளக்கம்:
கொழுந்து விட்டெரியும் சுடர் போன்றவனே! சுடுகாட்டில் வாழ்பவனே! அடியார்களுக்கு அமுதம் போன்றவனே! பிழைகளை பெருக்கிக்கொண்டே செல்லும் இந்த தமியேனின் தனிமையை நீக்க வந்த துணையானவனே! என்னை நெருக்கும் புலன்களால் உனைப் பிரிந்து அஞ்சி, இனிமையாகப் பேசும் பெண்டிரின் பிளவுகளை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் என்னை விட்டிடுதி!

தொழும்பர்- அடியார்

பாடல்: 39
தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த 
வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினையேனுடைய 
 மனத்துணை யேஎன்தன்  வாழ்வினையே எனக் கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே

விளக்கம்:
குற்றமுடைய மனத்துடையேனாகிய  எனக்கும் துணையாக வந்தவனே! என் வாழ்வினையே! என் பரலோகத்தில் துணையானவனே! (எய்ப்பில் வைப்பே-எய்ப்பு என்றால் மேலுலகம், முக்தி   எனப் பொருள்படும்). இந்த துயரம் படிந்த ஆக்கையின் (உடலின்- அதாவது பிறவி) திண்வலையை (வலை போன்ற சிக்கலான வாழ்வியல்  துயரங்கள்) என்னால்  ஒரு தினையளவு கூட பொறுக்க இயலவில்லை! என் துணையாக நீயிருக்க அதைக் கருதாமல் திமிர் பிடித்தலையும் என்னை விட்டிடுதி!
பாடல்:40  
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு 
மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக் 
கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும் 
மலைத்தலை வாமலை யாம் மணவாள என் வாழ்முதலே 

விளக்கம்:
முதல்நாள்  பிறையை தன் தலையில் சூடியுள்ளவனே! கருணையின் இருப்பிடமே! கயிலாயம் என்னும் மலைக்குத் தலைவா! மலையத்துவசனின் மகளாகிய பார்வதியை மணந்தவனே (மலையாம் மணவாள)! என் வாழ்வின் முதலே! வலையில் அகப்பட்ட மானைப் போன்ற மருண்ட கண்களை உடைய மங்கையரின் பார்வை எனும் வலையில் பட்டு வருந்தும் என்னை விட்டிடுதி!   

(அடுத்த தவணையில் முடியும்)

1 comment:

  1. மிக்க நன்றி ஐயா, கடைசி தவணையை முடித்துவிடுங்கள். எம்பெருமானின் திருப்புகழை பாடுவதில் குறை வைக்கக்கூடாது என்பது எமது தாழ்மையான கருத்து.

    ReplyDelete