Tuesday, November 15, 2011

ஈழ விடுதலை- புலிகளின் அணுகுமுறைக் குறைபாடுகள்



பாலஸ்தீனம், தனது சுய ஆட்சிக்காக, தன் இறையாண்மைக்காக ஐக்கிய சபையின் பொதுசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கும் இவ்வேளையில், தெற்கு சூடான் தனியாகப் பிரியும் இவ்வேளையில்,  நம் எல்லோருக்கும் தவிர்க்கவியலாத சிந்தனை ஒன்று எழுகிறது. இது ஏன் ஈழத்திற்கு நடக்கவில்லை- என்ற சிந்தனைதான் அது. இதனை நமக்கு நாமே வினவிக்கொண்டால் வெளிப்படும் உண்மை ரொம்பவும் கறுப்பாக, கசப்பாக உள்ளது.
நாடுகள் விடுதலை பெற, காலனி ஆதிக்கத்திடம் இருந்து மீண்டு கொள்ள, உலகில் நிகழும் விடுதலைப் போராட்டங்களை தீர்க்க ஐக்கிய சபையின் ஒரு அங்கமான TRUSTEESHIP COUNCIL அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில நாடுகள் அந்த கவுன்சிலின் உதவியால் விடுதலையும் பெற்றன. இப்போது அந்த கவுன்சிலின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எந்த விடுதலைப் போராட்டத்துக்கும் உலக அங்கீகாரம் கிடைப்பது சாத்தியமில்லை, நினைத்தாலும் அது நடக்காது.
விடுதலைப்புலிகள் அமைப்பு அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அன்ரன் பாலசிங்கமும் உயிரோடு இருந்தார். உலகெங்கும் உள்ள முன்னேறிய நாடுகளில் தமிழ்ஈழத்திற்கான ஆதரவுமிருந்தது. ஈழம் உருவாக எதிர்ப்பு தெரிவித்த ஒரே நாடாக இந்தியா மட்டுமிருந்தது. தன் கொல்லைப்புறத்தில் ஐக்கிய சபையின் மற்றும் அமெரிக்காவின் தலை தென்படுவதை விரும்பாததே அதற்கு காரணம். இந்தியாவின் இத்தகைய எதிர்ப்புகளை எளிமையாக கடந்து வந்திருக்க முடியும். உதாரணமாக நேபாளத்தில் ஐக்கிய சபையின் தலையீடு.

குறைந்தபட்சமாக, இந்தியா பரிந்துரைத்த பதிமூன்றாம் சட்டத்திருத்தத்தின்படியாவது புலிகள் இலங்கை அரசிடம் அதிகாரப் பகிர்வு செய்து கொண்டிருக்கலாம். அதனையும் புலிகள் மறுதலித்தனர். தனிநாடு என்ற கோரிக்கையில் மிக உறுதியாக இருந்தனர். இது ஒரு பாராட்டத்தக்க நிலை என்றாலும்கூட, தனி ஈழத்திற்கான உலகளாவிய முயற்சிகள் மிகக் குறைவாகவே எடுக்கப்பட்டன. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வெறுமனே, வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டுதலும், ஆயுதங்களை வாங்கிப்போட்டு தாக்குதலுக்கு தயாராவதும் தனிநாடு கோரிக்கைக்கு போதாது அல்லவே?! இதில் கொடுமை என்னவென்றால் அன்று அன்ரன் பாலசிங்கம் கூட சரியான ஆலோசனையைக் கூறவில்லை, சரியான முடிவை எடுக்கவில்லை.      

மேலும் ராஜீவ் கொலையால், தனக்கான ஆதரவை தானே இழந்துகொண்டது புலிகள் அமைப்பு. இந்தியாவில் தமிழ்மக்கள் உட்பட வடக்கிந்தியாவிலும் தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இருந்து வந்தது. அமைதிப்படை செய்த கொடுமைகளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ராஜீவ் கொலைக்கு, அமைதிப்படையின் அட்டூழியங்கள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அதனை வேறு சாத்வீகமான முறையில் கையாண்டிருக்கவேண்டும். ‘என்னைக் கொன்றான்!, நான் அவனைக் கொல்வேன்!’ என்பது ஒரு முட்டாள்தனமான வாதம். ஒரு பெரிய இயக்கம், உலகிலேயே மிக Deadlyயான ஒரு கெரில்ல இயக்கம், தனிநாடு கோரும் ஒரு இயக்கம், தன் எல்லா அடிகளையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டாமா?! அதன் சாதக பாதகங்களை அலசிப் பார்த்திருக்கவேண்டாமா? ராஜீவ் கொலையால் புலிகள் பெற்றதைவிட இழந்ததே அதிகம். பல நாடுகளில் தடை, இந்தியா உட்பட- நிதிகள் பெறுவதில், ஆயுதங்கள் பெறுவதில் எனப் பலவகையில் தடை! இதில் ஒன்றே ஒன்றைத்தான் புலிகள் பெற்றார்கள். அது பிரபாகரனின் தணிக்கவியலா தன்முனைப்பு தணிந்ததேயாகும். இதனை தன்முனைப்பு என்று அழைப்பதைத்தவிர வேறந்த பெயரிட்டும் அழைக்கமுடியாது.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி பதிமூன்றாம் சட்டத்திருத்தத்தையாவது புலிகள் ஏற்றிருக்கலாம். தனிநாடு கோரிக்கை என்பது தற்கால உலக அரசியலில் ஒரு செல்லாக்காசு! A demand which has lost its currency! இது இறையாண்மை உள்ள நாடுகளெல்லாம், அதனை சரண்டர் செய்து ஒரு யூனியனாக வாழும் காலம். ஐரோப்பிய யூனியன் அதற்கு மிகச் சிறந்த உதாரணம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றுமோர் உதாரணம். புலிகள் அதிகாரப்பகிர்வு மூலம் தம் நாட்டிற்குள்ளாகவே அமைதியாக வாழ்ந்திருக்கமுடியும். அதனைப் புலிகள் மறுக்க சொல்லப்பட்ட காரணம், இலங்கை அரசாங்கம் தமது வாழ்வியலைக் குலைக்கும் வாய்ப்பு, அதிகாரப் பகிர்வு அமைப்பில் இருப்பதாகப் புலிகள் கருதியதே! இது ஓரளவிற்கு உண்மை என்றாலும் கூட, ஐக்கிய சபையின் மேற்பார்வையில், அல்லது ஏரியா தாதாவான இந்தியாவின் மேற்பார்வையிலோ அதிகாரப்பகிர்வை உண்மையானப் பகிர்வாக மாற்றியிருக்கலாம். மேலும், தற்கால உலக அரசியலில் அதிகாரப்பகிர்வு ஒரு சிறந்த மாற்றுமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. யாருக்கும் தீங்கு இல்லை. One State, Two governments (Almost)! சீனாவில், இந்தியாவில், கனடாவில் என பல நாடுகளில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒரு முயற்சி.  ஆனால் அந்தோ, நடந்தது என்ன?! இந்த வாய்ப்பு உடனடியாகப் புலிகளால் மறுக்கப்பட்டது.

புலிகள் மற்றுமொரு தவறைச் செய்தார்கள். அது மலையகத்தமிழர்களின் ஆதரவை பெறாதது. மலையகத்தமிழர்கள் தங்களை ஒதுக்கப்பட்டவர்களாகவே நினைத்து ஒதுங்கிவிட்டனர்- அல்லது ஒதுக்கப்பட்டுவிட்டனர். இங்கு சில உண்மைகளைக் கூறவேண்டும். தமிழ்நாட்டில் எப்படி சாதிவெறி தலையெடுத்து ஆடுகிறதோ அதற்கு சற்றும் குறையாத, சொல்லப் போனால் சற்று அதிகமாகவே சாதிப் பிரிவினைகள், மற்றும் அதன் கொடுமைகளைக் கொண்டது இலங்கைத்தமிழ் சமூகம். மலையகத்தமிழர்கள் ஒதுக்கப்பட்டதற்கு பூர்வகுடி/வந்தேறி என்ற பிரிவினைகள் காரணமென்றாலும் சாதியும் ஒரு காரணம். புலிகள் மலையகத்தமிழர்களையும் தம்முடன் இணைத்துப்போராடியிருக்கவேண்டும். அதனை செய்யத் தவறிவிட்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து புலிகள் மேற்கொண்ட முஸ்லிம் விரட்டியடிப்புக்கு இதுவரை யாரும் தகுந்த காரணங்களைக் கூற முடியவில்லை. ஒரு சுத்தமான இந்து அமைப்பாக புலிகள் அமைப்பு செயல்பட்டது ஜீரணிக்கவியலாதது.

புலிகளின் மற்றுமொரு சறுக்கல் கருணா Factor. இது இலங்கை கருணா மற்றும் தமிழ்நாட்டுக் கருணாநிதி ஆகிய இருவருக்கும் பொருந்தும். தன் சகோதர இயக்கங்களை எல்லாம் வீழ்த்தி ஈழ விடுதலைக்கு தன் இயக்கத்தை தனிப்பெரும் குரலாக மாற்றிக்கொண்ட பிரபாகரன், இயக்கத்துக்குள்ளாகவே எழுந்த துரோகங்களைக் களையெடுத்த பிரபாகரன், கருணா பிரிந்தபோது சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. தனது வழக்கமானக் களையெடுப்பை பிரபாகரன் கையாண்டிருக்கவேண்டும். மாக்கியவல்லியை மறந்துபோனார் பாலசிங்கம். கருணா மூலம் தகவல்களைப் பெற்ற இலங்கை அரசு அதனை மிக சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டது.
அதேபோல் தமிழகக்கருணா! கருணாநிதியைப் பற்றி மூன்றே வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால் அவர் ஒரு ‘Credit Hungry Man’.  கருணாநிதியை சரியான விதத்தில் பயன்படுத்தத் தவறிவிட்டனர் புலிகள்.

விடுதலைப் போராட்டம் என்பது கொள்கை ரீதியாகத்தான் நடக்கவேண்டும் என்பதில்லை. தான் கொண்ட கொள்கையிலிருந்து சில சமயங்களில் விலகிச் சென்றுதான் ஆகவேண்டும். ஏனென்றால் விடுதலைப் போராட்டம் தனிமனிதனைச் சார்ந்ததல்ல. அது மக்கள் சார்ந்தது. மக்களின் நன்மையையே முதல் கருத்தாகக் கொண்டு போராளிக்குழு செயல்பட்டாக வேண்டும். புலிகள் மிகப்பிடிவாதமாக இருந்துவிட்டனர்!!

மேற்சொன்ன காரணங்களோடு இன்னும் சிலபல காரணங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலின. பிரபாகரன் நினைத்திருந்தால், கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். போரை இல்லாமல் செய்திருக்கலாம்.
சிங்கள இனவெறி அரசாங்கம் தமிழர்களை அழித்தொழிக்க முயன்றதும், கொத்தெறி குண்டுகளை வீசி கொலைகள் செய்ததும், மகளிரின் கருவறுக்கும் ஈனச்செயலை செய்ததும், பணக்கார முதலைகளின் முதலீட்டுக்காக இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்தியங்கள் போரை நடாத்திக்கொடுத்ததும் நேரடிக்காரணங்கள் என்றால் புலிகளின் செயல்பாடுகள் மறைமுகமான காரணங்கள்!
இதோ! புலிகளின் தலைவர் வாழ்ந்த ஆடம்பர பதுங்குகுழிகளைப் பாரீர்! என இலங்கை அரசாங்கம் இன்று மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது.  இந்திய முதலாளிகள் பணத்தைக் குவித்து தொழில் செய்யத் துவங்கிவிட்டனர். தன்முனைப்புக்குப் பலியான இயக்கம் என புலிகள் இயக்கத்தைப் பற்றி உலக கெரில்லக்கள் கூறுகின்றன.
இவை அனைத்தையும் புலிகள் தவிர்த்திருக்கமுடியும்.
தமிழ் ஈழ விவகாரம், வெறும் உணர்ச்சித்தூண்டலுக்கு மட்டுமே இப்போது பயன்படுத்தப்படுகிறது. உணர்ச்சிவயப்பட்ட சீமான் உள்ளிட்ட சில தலைப்பிரட்டைகள் கிடந்து குதிக்கின்றன. அவர் இயக்கத்தவர் எல்லோரும் ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்’ சின்னத்தை பச்சை குத்த வேண்டும் என அதிகாரப்பூர்வமின்றி அறிவுறுத்தப்படுகிறார்கள் போலத்தெரியவருகிறது. எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டு பச்சை குத்திய ர.ர.க்கள் இன்று முழுக்கை சட்டை அணிந்தேயிருக்கிறார்களே!

அறிவுப்பூர்வமாக ஈழப்படுகொலையை அணுகினால், தவறு இருபுறங்களிலுமே இருப்பது தெரிய வரும்! 

Saturday, June 18, 2011

கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம்-கைப்புள்ள

 

சுப்ரமணியம் சுவாமி என்று ஒரு காமெடி பீஸ் ஒண்ணு நாட்டுல திரிஞ்சிக்கிட்டு இருக்கு. அந்தாள காமெடி பீஸுன்னு மட்டும் நினைச்சிரக்கூடாது. அப்பப்ப அது விஷத்தையும் கக்கும். அதாவது பாம்புன்னும் அடிக்க முடியாது. பழுதுன்னு மிதிக்கவும் முடியாது.அப்பிடிக் கக்குன விஷத்தைப் பத்தித்தான் இந்தக் கட்டுரை.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவுல அது சொல்லியிருக்கு கம்ப்யூட்டருக்கு ஏத்த பாஷை சமஸ்கிருதம்தானாம்! நாசா விஞ்ஞானிகள் கூட அப்பிடித்தான் சொல்லுறாங்களாம். அந்த புத்தகத்தோட பேரு பரமஹம்ச- த வேதாந்திக் டேல். எழுதினவன் பேரக் கேளுங்களேன்! வாயால சிரிக்க மாட்டீங்க! சுப்ரமோனி அவன் பேரு! நேமாலஜி!!!

இது ஒரு பெல்ட்டு கும்பல்ன்னு இப்ப தெரியுதுல்ல?!

அதுல சூனா சானா சொல்றாரு! அமெரிக்காவுல ‘பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை’ ங்கற தலைப்புல இத உரையாற்றக் கூப்புட்டாங்களாம். நீதான் கடலையே தாண்டக் கூடாதே... உன் இந்து சனாதன தர்மத்தின் படி. நீ ஏன் அங்க போன?  

மேற்கத்திய நாடுகள்ல, இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சிய ‘The Hindu rate of Growth’ அப்படின்னுதான் சொல்லுவாங்க! அதாவது ஒரு நாட்டோட GDP யோட வளர்ச்சி  4%-5% இருந்துதுன்னா அதுக்குப் பேரு இதுதான்! இந்து மதத்தால, இந்தியாவால பொருளாதாரப் பாடத்துலயே ஒரு புது Terminology வந்ததுன்னா பாத்துக்கிடுங்க.   சத்தியமா எனக்குத் தெரிஞ்சி இந்து மதம் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் என எந்த ஈரோப்பியனும் அமெரிக்கனும் மனதால் கூட நினைத்திருக்க மாட்டான்! இந்தாள பின்ன எதுக்கு உரையாற்றக் கூப்பிட்டாங்களாம்?

தெரியல!

அப்பறம் அந்த ஜந்து இன்னொன்னும் சொல்லுது. திராவிடன்-னு ஒரு இனமே இல்லையாம். வெள்ளக்காரன் வந்ததுக்கப்புறம்தான், அவன்தான் அப்படிப் பிரிச்சானாம். அடப்பக்கிப் பயலே! கால்ட் வெல் எழுதுன திராவிட மொழிகள் பத்தினப் புத்தகத்த படிச்சிரிக்கியா நீயி? ஒரு எழவும் தெரியாம எப்பிடித்தான் மைக்கப் புடிச்சி பேசுறானுங்களோ?

அமெரிக்காகாரன் இந்துத்வா மேலயும் இந்து சனாதன தர்மங்கள் மேலயும் ரொம்ப ஈடுபாடு காட்டுறாங்களாம். அதான் உங்க தானைத்தலைவர் மோடிக்கு விசா மறுத்தப்பவே தெரிஞ்சிப் போச்சே! இப்போல்லாம் அமெரிக்கா ஜிகாத் தீவிரவாதிகளைவிட இவன மாதிரிப் பயலுங்க கிட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்காங்க!   அப்படியே ஈடுபாடு காட்டினாலும்தான் என்ன இப்போ? எவனோ நாலு லூசுப் பயலுங்க, கேமரா முன்னாடி துணிய அவுக்கிற ரெண்டு நடிகைங்க  ஆகா ஓகோன்னா அதுக்கு நாங்க ஏன் செவி சாய்க்கணும்?

இந்த விஷப்பூச்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது...மந்திரியாக. மேலிடத்தில் இன்னும் செல்வாக்கோடு உலவுகிறது. இதை என்ன செய்வது? 

மற்ற திராவிட மொழிகளில் உள்ள சம்ஸ்கிருத அசுத்தத்தின் நெடியையே தாளவில்லை. இதுல கம்ப்யூட்டர்-ல சமஸ்கிருதமாம். 

இவன் சொல்ற மாதிரி சமஸ்கிருதம் மட்டும் கம்ப்யூட்டர்-ல வந்துட்டா, அன்னைக்கு நான் அதை தொட்டா, அதுக்கு மேல நான் சோத்துக்கைல சோறு திங்க மாட்டேன்யா
             

   

Wednesday, June 15, 2011

ஊழலின் தவிர்க்கவியலாத் தன்மை


ஊழல் ஒழியணும், ஊழல் ஒழியணும்னு ஏதோ காதல் படத்து கிளைமாக்சுல வர்ற பரத் மாதிரி சில பேர் புலம்பறத கொஞ்ச   நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன்! பா(ப்)பா ராம்தேவ் மற்றும் அன்னா ஹஜாரே  ஆகியோரை கழுவிக் கழுவி ஊத்தி திட்டி எழுதுபவர்கள் கூட, கடைசியில "ம்!! ஏதோ நல்லது நடந்தா சரி" என பெருமூச்சு விடுவதைக் காண்கிறேன்.

நிற்க! 

இங்கு ஊழலின் தேவை என்ன என்பதை  சற்று விளக்க வேண்டியிருக்கிறது . 


அரசியலில்  ஊழல் என்பது ஒரு ஒழிக்கப்பட முடியாத Evil என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஊழல் இல்லாத ஒரு அரசினை (அதுவும் வளரும் நாடுகளில்) நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

In fact Corruption is desired for the stability of the political system. It is a necessary Evil. 

ஊழல் இல்லாத ஒரு அரசாங்கம் ஒரு dictatorship-க்குக் கீழோ அல்லது இன்னும் மோசமான perverted political systems-ஆன Oligarchy அல்லது aristocracyக்குக் கீழோ தான்  இருக்க முடியும். அதன் விளைவுகள் பெரும்பாலும் தாங்கவொண்ணாததாகத்தான் இருக்கும். இதுதான் உண்மை. 

ஒரு உதாரணம் சொல்லனும்னா ஐக்கிய நாடுகள் சபைல இருக்கிற பாதுகாப்பு சபையில உக்காந்து இருக்கிற  அஞ்சு தாதாக்களுக்கு இருக்கிற வீட்டோ பவர் மாதிரிதான் ஊழல். வீட்டோ அதிகாரத்தை வைத்து எத்தனையோ சர்வதேச அரசியல் நிகழ்ந்திருந்தாலும், எத்தனையோ நல்ல தீர்மானங்கள் கைவிடப்பட்டிருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபை இன்னும் நிலைத்திருக்க அந்த அதிகாரம்தான் காரணம்.  இல்லையென்றால் அதுல உக்காந்து இருக்கிற அமெரிக்க வஸ்தாது அந்த சபையையே கலைச்சிருவான்.  League of Nations என்கிற சர்வதேச அமைப்பை இப்படித்தான் கலைச்சான் அமெரிக்க வஸ்தாது! 

நான் சொல்றது லூசுத்தனமாக சிலருக்குத் தெரியலாம். அரசியல் அறிவியல் படிச்சவங்களுக்கு ரொம்ப நல்லாத் தெரியும்.நல்லாப் புரியும்.

ஊழல் ஒரு நாட்டுல தவிர்க்க முடியாத ஒண்ணு. ஊழல் இல்லையேல் மக்கள் அனுபவிக்கிற துயரங்களைப் பற்றி உலக நாடுகள்ல dictatorship ஐ  அனுபவிச்ச சில நாட்டு மக்கள் கிட்ட போய் கேளுங்க.


Transparancy International-ங்கற ஒரு அமைப்பு நாடுகள்ல நடக்கிற ஊழல் அளவை வச்சி தரவரிசைப்படுத்துறாங்க (Corruption Perception Index). அது டென்மார்க், சிங்கப்பூர் எல்லாம் ரொம்பவும் கை சுத்தமான நாடுகள் அப்பிடின்னு சொல்லுது. மொத்தமே ஒரு கோடி மக்கள் கூட தேறாத அந்த நாடுகளெல்லாம் சந்தோஷமா, Stable-ஆ இல்லையா  அப்பிடின்னு யாரும் கேட்டுறாதீங்க. இந்த தியரி அவங்களுக்குப் பொருந்தாது.

அதனால   

சும்மா ஊழல் ஊழல்னு கத்திக்கிட்டு இருக்காம, கண்ட கண்ட பய புள்ளங்க உண்ணாவிரதத்த பாத்து மயங்காம போயி அவங்க அவங்க சோலியப் பாருங்க!

நாடு தானா முன்னேறிரும்!

Wednesday, June 8, 2011

சிலவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது


பொய்யென்று தெரிந்தும் சில

போலி உறவுகளை

அன்பிலா இதயங்களின் வழி

ஊறும் கானல் காதல்களை


கொல்லக்காத்திருக்கும் வெறியேறிய

விழிகள் வழி தேடுவதை

வெறியை  அன்பாக மாற்றி நடிக்க

தெரிந்த மனிதர்களை


மாறிய வழிபாடுகளை

மாறும் மதப்பெயர்களை

மாறா மனிதர்களை


சிலவற்றை

எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.


ஒரு வயிற்றில் பிறந்தாலும்

ஒன்றையொன்று விழுங்கத்துடிக்கும் சர்ப்பசிசுக்கள்

சூழல் மறுக்கும் சுக்ரீவன்கள்

வதம் செய்யக் கருதும் வாலிகள்


சிலவற்றை

எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.


இருப்பினும்


சிதறிய மணிகளைக் கோர்த்துக்கொண்டு

நாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.




Monday, June 6, 2011

சென்னையில் ஒரு வெய்யில் காலம்!

கடந்த சனிக்கிழமை இரவு ஒரு வேலையாக சென்னைக்கு புறப்பட்டேன்! ராத்திரி ஒன்பது மணிக்கு பஸ் புறப்படுகிறது. அதற்காக ஏழே முக்காலுக்கெல்லாம் நான் தயாராகிவிட்டேன்!
பஸ் ஸ்டாண்டு கூட ந்தா இங்கிட்டுதான். சாப்பிட்டு முடித்துவிட்டு ஆட்டோவில் ஏறினேன்! 8.15க்கு.  அந்த நேரம் பார்த்து ஒரு அதிர்ச்சி. பெங்களூரில் ஸ்டார் கிரிக்கெட் என்று சினிமாக்காரனுங்க எல்லாம் கிரிக்கெட் ஆடுறானுங்க.
(இவனுங்கள யாரு கிரிக்கெட் ஆட கூப்பிட்டது? சத்திய சோதனை)
நான் கிளம்பிய நேரம் அந்த மேட்ச் முடிந்து விட்டது. அந்த டிராபிக்-ல் என்னால் 9.15க்கு தான் பஸ் ஸ்டாண்டுக்கு போக முடிந்தது. டைம் கீப்பரைச் சுற்றி ஒரு ஐம்பது பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.
கஷ்டப்பட்டு அவரிடம் டிக்கெட்-ஐ நீட்டி ' ஐயா, இந்த மாதிரி பஸ்சை மிஸ் பண்ணிட்டேன். எனக்கு வேற பஸ்-ல சீட கெடைக்குமா'-ன்னு கேட்டேன். அவரும் பெரிய மனசு பண்ணி ஒரு பஸ்-ல சீட கொடுத்தாரு.
என்னா ஒரே கஷ்டம்-னா நான் ஏசி பஸ்-ல டிக்கெட் போட்டிருந்தேன். இது நான்-ஏசி. அது பரவாயில்லன்னு ஏறிப்போயிட்டேன்!

சென்னை வெயில்ல வதங்கி ஒரு வழியா ஞாயித்துக் கிழமை (நேத்துதாம்பா) ராத்திரி பஸ் ஏறினேன்! இதுகூட ஏசி பஸ் தான். ஏறி உக்காந்து அரைமணிநேரம் ஆகியும் வேர்த்துக் கொட்டுது. 

 கண்டக்டரை கூப்பிட்டு,
'என்னா சார்! ஏசியே இல்ல. கொஞ்சம் கூட்டி வக்கக்கூடாதா ?' ன்னு கேட்டேன்! அவரு ஸ்டைலா என்ன பாத்துக்கிட்டே சொன்னாரு! ' இருக்கறது இவ்வளவுதான் சார். வர்ரதுன்னா வாங்க, இல்லன்னா வேற பஸ்
புடிச்சி வாங்க'-ன்னார். பெங்களூருக்கு அதுவும் ஞாயித்துக் கிழமை, ரிசரவ் பண்ண பஸ்ச வுட்டுட்டு வேற பஸ் பாத்துக்கறதா? கனவு கூட காணமுடியாது.

வேற வழி!?


பாயே மூச்கொண்டு பர்பேக்கு! அஷ்டே!

ஸ்ரீபெரும்புதூர் வந்தாச்சி. திடீர்னு ஒரு சகபயணி கத்த ஆரம்பிச்சிட்டார். அவர்கிட்டையும் அந்த கண்டக்டர் அதே ஸ்டைல்-ல பதில் சொல்லியிருப்பார் போல. அவருக்கும் இதே பிரச்சினை. எல்லோருக்கு மூச்சடைக்கிற மாதிரி வந்துடுச்சி. பஸ்சுக்குள்ள வேற வெப்பம் அப்பிடியே
காந்துது. ஒரு பத்து பேர் கெளம்பி டிரைவர்கிட்ட போயி வண்டிய ஓரங்கட்ட வச்சிட்டாய்ங்க. வேற வண்டி வந்தாதான் நாங்க வண்டியில ஏறுவோம், இல்லன்னா ரோட்டுலயே உக்காந்துருவோம்-னு பயணிகள் மிரட்டுனதால அந்த டிரைவர் டெப்போக்கு போன் பண்ணாரு.
அந்த முனைல இருந்து, ஒருத்தர் சொல்றாரு. ஏசி இல்லைங்கறத்துக்கு எல்லாம் இவ்வளவு பிரச்சினை பண்றீய்ங்களே, இதெல்லாம் ஓவரா இல்லையான்னு கேக்கறாரு. சாதாரண பஸ்ஸா இருந்தா பரவால்ல. ஜன்னலைத் தொறந்தா காத்து வரும். இது ஏ.சி வேற.
காத்தே உள்ள வாராதுய்யா! அதனால இன்னொரு பஸ்சு அனுப்புனாதான் ஆச்சுன்னு கண்டிசனா சொல்லிட்டாய்ங்க பசங்க (பயணிகள்தான். எல்லாம் வயசுப் பசங்க)

பத்தே முக்காலுக்கு நின்ன வண்டி, ஒன்னேமுக்கால் வரைக்கும் நிக்குது. அந்த மூணு மணிநேரமும் அந்த வண்டியோட என்ஜின அந்த டிரைவர் அமுத்தவே இல்ல. யோவ்! என்னாய்யா இது, என்ஜின ஆப் பண்ணமாட்டியான்னு கேட்டா, அந்த டிரைவர் 'ஆப் பண்ணினா மறுபடியும் ஸ்டார்ட் பண்ண முடியாது சார்'-னு சொல்றாரு.
அடப்பாவிகளா! டெப்போ-ல எப்புடின்னு கேட்டா அங்கயும் அப்படித்தானாம்!!!

ஆக தமிழ்நாட்டுல ஓடற பெரும்பாலான ஏசி வண்டிகளை ஆப் பண்றதே இல்ல. ரயில் என்ஜின் மாதிரி எப்பவும் ஆன்ல தான் இருக்கு. தேவைப் படும்போது ஆன் பண்ணிக்கிற மாதிரி அந்த ஸ்டார்டர்கள சரி பண்ணினாதான் என்ன? டீசல் சிக்கனம் தேவை இக்கணம் அப்புடின்னு இவிங்கதான் எல்லா பஸ்-லையும் எழுதி வைக்கிறாய்ங்க. இதுல இவ்வளவு டீசல சும்மா நிக்கற வண்டிகளுக்கு வீணடிச்ச்சா இதை விட கொடுமை உண்டா?
அரசாங்கமே இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கலாமா?

இந்தியாவுக்கான மொத்த எண்ணெய்த்தேவையில  70%க்கு மேல நாம இறக்குமதி பண்றோம். பெரும்பாலான பணம் எண்ணெய் இறக்குமதிக்கே சரியாப் போயிடுது. Approximately 30-35% of the GDP. இந்த நிலைமையில சும்மா நிக்கற வண்டிகளுக்கு டீசல் வேஸ்ட் பண்றத நிறுத்துனாலே
நிறைய பணத்த சேமிக்க முடியும். இதை அரசால ரொம்ப எளிமையா நடைமுறைக்குக் கொண்டு வரமுடியும்.

ஒன்னு முடிவு பண்ணிட்டேன்! இனிமே எஸ்ஈடி.சி-ல பயணம் பண்ணவே கூடாதுன்னு!   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Thursday, June 2, 2011

முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சில கேள்விகள்

நேரடியாக  விஷயங்களுக்குப் போவோம். முன்னுரைகளெல்லாம் வேண்டாம்.

1. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களெல்லாம் டுபாக்கூர் என்று கத்திக் தீர்த்தீர்கள். அதன் பயன்பாட்டினை தடை செய்யக்கோரி  உயர்நீதிமன்றம் சென்றீர்கள் (Feb 20, 2001-http://www.hindu.com/2001/02/21/stories/0421223a.htm). இப்போது நீங்கள் பெற்றிருக்கும் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?



2. செப்டம்பர் 2003-ல் நீதியரசர் கனகராஜ் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டபோது Prosecutor ஐ நியமிக்காமல் உங்கள் ஆட்சி முடியும் வரை காலதாமதம் செய்தது ஏன்?



3. உங்களது கடந்த ஆட்சியில் முத்து, என்கிற,  எம்.ஜி.ஆரின் உதவியாளராக பணி புரிந்தவரை போதை மருந்து/கஞ்சா  வைத்திருந்ததாகக் கைது செய்தீர்கள். அந்த வழக்கு என்னவாயிற்று?



4. டான்சி வழக்கில் உங்களை தண்டிக்காமல் விடுவித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் உங்கள் மனசாட்சியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும் (She must atone her conscience-Justice Rajendra Babu on his verdict on 24-11-2003) எனக் கூறியது. அவ்வாறு கேட்டுக் கொண்டீர்களா? [BBC தொலைக்காட்சி பேட்டியின் போது, நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி கூட பேச மாட்டேன் என்றீர்கள். அதே வழியில்கூட இப்போது எஸ்ஸாகலாம்]



5. TN சேஷன் உங்களை ஒருமுறைக் கடுமையாக சாடியிருந்தார். அதற்குப் பிறகு ஒரு முறை அவரது தமிழக விஜயத்தின்போது மாநில விருந்தினர் மாளிகையில் தங்க இடம் மறுக்கப்பட்டது-இடம் இருந்தபோதும் கூட. அவர் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் அறை எடுத்திருந்தார். ஆனால் அந்த ஓட்டல் ரவுடிகளால் சூறையாடப்பட்டது. அதை செய்தது யார்?  [இருக்கவே இருக்கு “என் மேல் அன்புள்ளம் கொண்டோர் யாராவது அவ்வாறு செய்திருக்கலாம்” என்ற புதுப்பேட்டை பட வசனம்.] அதை செய்தவர்கள் மேல் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? 
உபதகவல்:

அவர் சென்னை வந்தபோது ஐந்து மணி நேரத்திற்கு டிராபிக் ஜாம் செய்யப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் ஆணையிட்டும் கூட DGP அந்த டிராபிக்-ஐ குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



6. SPIC பங்குகளை விற்பதில் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு சந்திரலேகா இ.ஆ.ப, ஆவணக்காப்பகத்திற்கு மாற்றப்பட்டார். அதற்குப் பிறகு சுர்லா என்ற மும்பையை சேர்ந்தவன் சந்திரலேகா மேல் அமிலம் எறிந்தான். 

(‘Ms. V.Chandralekha, a young IAS Officer and chairman, Tamilnadu Industrial Development Corporation was severely burnt when acid was thrown on her face. She had refused to oblige Chief Minister Jayalalitha in a deal connected with the Tamilnadu I.D.C. Several I.A.S officers of Tamilnadu were horrified by the acid attack on Chandralekha’ in the book INDIAN DEMOCRACY- DERAILED POLITICS AND POLITICIANS by SRIKANTA GHOSH) 



ஒரு வழக்கு விசாரணையின்போது கோர்ட் வாசலிலேயே, ‘அமிலத்தை எறிந்ததற்கு காரணம் மதுதான்!’ எனக் கூறிச் சென்றான். அதனை ‘அவன் குடித்த மதுதான் காரணம்’ என்று அரசு வழக்கறிஞர்கள் திரித்தார்கள். உண்மையிலேயே அது மதுசூதனன் என்ற உங்களின் அமைச்சர்தானா?

மும்பையிலிருந்து வந்தவனுக்கு சாராயத்தை (Drinks) மதுவென்று அழைக்கும் அளவுக்கு தமிழ் தெரிந்திருக்குமா என்பது ஐயமே!



7. கோயம்புத்தூர் விமானநிலையத் திறப்புவிழாவினை முடித்துவிட்டு  வீடு திரும்பிக் கொண்டிருந்த C.K. குப்புசாமி MP, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். அந்த திறப்புவிழாவில் நீங்களும் இருந்தீர்கள். விழாவின் உங்கள் பெயருக்கு முன்னர் ஜனாதிபதியின் பெயரை விளித்துப் பேசினார். அதுதான் அவர் செய்த குற்றம். அவரை தாக்கியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?



8. உங்கள் ஆட்சியில் நீங்கள் நூறு கோடியில் திருமணம் செய்து வைத்த  உங்கள் ‘வளர்ப்பு மகன்’ V.N.சுதாகரனை கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்கில் (13-06-2001) கைது செய்தீர்கள். செரீனா என்ற சின்னப்பெண் மீதும் கஞ்சா வழக்கு (09-07-2003) தொடரப்பட்டது. 

இவர்கள் இருவரும் கஞ்சா குடிக்கிகளாக அல்லது கஞ்சா விற்பவர்களாக இருந்திருக்கலாம். ஒருவேளை அந்த வழக்கிற்கப்புறம் அவர்கள் அந்த பழக்கத்தை/தொழிலை வீட்டுவிட்டார்களோ?

“கழுதை லத்தி போடுற வரைக்கும் கஞ்சா கேஸ் போடலாம்டி!”  என்ற கற்றது தமிழ் பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.



9. நாகப்பட்டினத்தில் ஒரு அரசு மேடையில், (13-10-2003) சோனியாவைப் பற்றி மணிசங்கர் ஐயர் பெருமையாக சொல்ல, நீங்கள் ‘ஐயர் இரண்டு வருடங்களுக்கு முன் நான் குருவாயூர் கோவிலுக்கு யானைக்குட்டி பரிசளித்ததைப் பற்றி எழுதினாரே! இப்போது என் முன் அதைச் சொல்ல தைரியமிருக்கிறதா?’ என்று கேட்க,  விழா முடிந்தவுடன் அவர் செல்லும் வழியில் தாக்கப்பட்டார். (http://www.hindu.com/2003/10/14/stories/2003101407610100.htm) நீங்கள் தாக்கச்சொல்லவில்லை என்றால், யார் சொன்னது? தாக்கியவர்கள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன?



10. போயஸ் கார்டனில் ஆடிட்டர் ராஜசேகர் என்பவர் தாக்கப்பட்டார்-செருப்பால். யார் அடித்தார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு நீங்கள் நலம் பெற வாழ்த்து சொல்லி பூங்கொத்து அனுப்பினீர்கள். அவரைத் தாக்கியவர்/தாக்கியவர்கள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன? தி.மு.க அரசு மகாதேவனைக் கைது செய்தது. அந்த வழக்கின் நிலை என்ன ஆனது? (Rajasekaran spoke to mediapersons today from his hospital bed in Egmore in Chennai on what he had stated in the FIR. He was at first reluctant to talk to the press. Later, he came out with details of what he called a ``terrifying experience'' which he charged took place in Jayalalitha's drawing room. ``I am very worried about my family. They (Jayalalitha, Sasikala and Mahadevan) openly threatened not only to ruin my life but also the life of my wife and 12-year-old son,'' claimed the 53-year-old chartered accountant, who says he served as auditor to Jayalalitha until a year ago-http://www.financialexpress.com/old/ie/daily/19990315/ige15027p.html)




11. ஸ்ரீநிவாசன் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டன. அடியாட்கள் அவரது வீட்டினை சேதப்படுத்தினார்கள். அவரின் புகார்களுக்கு உங்கள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?



12. ஒரே கையெழுத்தில் ஒரு லட்சத்துக்கு மேல் அரசுப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினீர்கள். (05-07-2003) அந்த வழக்கிற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றீர்கள். மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு அதனை ஒன்பது மாதங்கள் ஆராய்ந்து 9000 பேரைத் தவிர மற்றப் பணியாளர்களை பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என உத்தரவிட்டது. 2004 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அவர்களையும் பணியில் சேர்த்துக் கொண்டீர்கள். ஆக, அதுவரை நீதிபதிகள் செலவிட்ட நேரம், அரசு செலவிட்ட தொகை எல்லாம் வீணா? உங்கள் EGO-வின் விலை இத்தனை கோடியா? ஒரு லட்சத்துக்கு மேல் அரசுப் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கிய எதேச்சாதிகாரத்தை, உலகில் எங்காவது நடந்ததாக நீங்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 



13. சோனியாவை அந்தோனியோ மெய்நோ என விளித்தும், அவரின்  பதிபக்தியை சந்தேகிப்பதாகவும் கூறினீர்கள். DO YOU STILL STAND BY THAT?



14. முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி உங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சட்டசபையிலேயே கூறினீர்கள். பெண்களின் தகாத முறையில் நடந்து கொள்வதென்பது  ஒரு கிரிமினல் குற்றம், எனவே கவர்னர் எந்த வகையிலும் விதி விலக்கல்ல.  சென்னா ரெட்டி மேல் ஏன் வழக்கு தொடரவில்லை? 




15. சட்ட சபையிலேயே “ஆம்! நான் பப்பாத்திதான்” எனக் கூறிக் கொண்டீர்கள். ஒரு வேளை அது, தி.மு.கழக எம்.எல்.ஏக்கள் மீதுள்ள கோபத்தினால் கூறியிருக்கலாம் தெரியாமல்தான் கேட்கிறேன்! இந்த அளவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தத் தெரியாமல் இருக்கும் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வரவேண்டும் என எங்ஙனம் கருதினீர்கள்?

16. இப்போது ஆயிரம் கோடி செலவு செய்து கட்டிய புதிய சட்டமன்றத்தை விட்டுவிட்டு, பழைய ஜார்ஜ் கோட்டைக்கே போகலாம் என்கிறீர்கள். அத்தனையும் மக்களின் வரிப்பணம். அந்தக் கட்டிடத்தை என்ன செய்வது? ஆயிரம் கோடி செலவு செய்து அதை மியூசியம் ஆக்குவது கொடுமையிலும் கொடுமை.



17. இவை எல்லாவற்றையும்விட கொடுமையான ஒன்று. நாவலர் நெடுஞ்செழியன்  உங்கள் காலில் விழுந்தாரே....... அம்மா, அது நீங்கள் விழ வைத்தீர்களோ அல்லது உங்கள் அடிப்பொடிகள் கட்டாயப்படுத்தினார்களோ,  உங்கள் நெஞ்சம் கூசவில்லையா? பதறவில்லையா? பதறித் தடுக்காமல் நின்று ஆசி வழங்கினீர்களே! அந்தோ!
 
சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகள்

இதையெல்லாம் நீங்கள் மறுக்கமுடியுமா?
    
18. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குண்டர்களால் தாக்கப்பட்டு குற்றுயிராய் KJ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது, அந்த மருத்துவமனைக்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.


19. டான்சி வழக்கினைப் பற்றிய பேட்டியினை சுப்ரமணியம்சுவாமி சன் டிவியில் ரபி பெர்னார்ட் உடன் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தேனாம்பேட்டையில் (சன் டிவி பகுதியில் மட்டும் - அது மணிலாவிலிருந்து ஒளிபரப்பாவது தெரியாமல்) மின்சாரம் நிறுத்தப்பட்டது. 

அரசியல்வாதிகளின் அறிக்கைகளை மறுப்பதற்கே ஒரு குழுவினை வைத்திருப்பீர்கள். என் குற்றச்சாட்டை மறுப்பதா கஷ்டம்?
என் கேள்விகள் எதற்கும் பதில் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் இதை எழுதுகிறேன்! குறைந்தபட்சம் இதையெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்று உங்களுக்கும் உங்கள் அடிப்பொடிகளுக்கும்  ஞாபகப்படுத்தவாவது இது உதவட்டும்.

இலவசங்களைக் கொடுத்து தி.மு.க மக்களைக் கெடுத்துவிட்டது என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தீர்கள். தயவு செய்து ஒரு வேண்டுகோள். இலவசங்களைக் கொடுக்காமல் இந்த ஆட்சியை முடியுங்கள். 

குறிப்பு:
எனக்கு  தி.மு.க வை ஆதரிக்க வேண்டுமென்றோ, அ.தி.மு.க வை எதிர்க்கவேண்டுமென்றோ எந்தக் கட்டாயமும் இல்லை. எனக்கு எந்த கட்சி சார்பும் இல்லை. ஒரு சாமான்யனாகத்தான் உங்களுக்கு இந்தக் கேள்விகளைத் தொடுக்கிறேன்!

è 

Monday, May 30, 2011

எறும்பூரித் தேய்ந்த பாறைகள்


எல்லோரும் சமம் எனக் கற்றுத்தந்த
கடவுள் வழிபாட்டை வீட்டுக்குள் விட மறுத்த
 சாதி, மதம், சடங்குகளை வெறுத்த 
எந்திரமயத்தை ஏழையின் எதிரியாய் பார்த்த


பொருட்பொதுவாக்கலை சொல்லித்தந்த
பொதுவுடைமைக் கருத்தை பொதுவாகக் கற்றுத்தந்த
கால்நடையை விடுத்து வாகனத்தில் சென்றால் கண்டித்த

உழையாப் பலன் பெறுவதை வெறுத்த 

என் தந்தை-இன்று

ஸ்ரீ காலஹஸ்திக்கு சென்று திரும்பும் வழியில்
டிரைவரிடம் சொன்னார்
தம்பி! அந்த AC-ய கொஞ்சம் போடுப்பா!


இட ஒதுக்கீடு! பொருளாதார மேம்பாடு! சமூக அங்கீகாரம்! (*)

John Rawl என்ற அரசியல் அறிவியல் அறிஞர்தான் முதலில் இட ஒதுக்கீட்டின் நியாயத்தை கொள்கை வடிவில் எடுத்துரைத்தார். Positive Discrimination என்ற அந்த கொள்கை அவருக்கு முன்பாகவே நிறைய அறிஞர்களுக்கு தோன்றியிருந்தாலும்கூட  John Rawl-லே  அதனை முறைப்படுத்தினார்.



விஷயம் ரொம்ப எளிமையானது! அதாவது, இதுவரை அடக்கப்பட்ட, உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களையும், இதுவரை உரிமைகளை அனுபவித்து வந்த மக்களையும் ஒரே தராசுத் தட்டில் வைத்துப் பார்க்கமுடியாது என்பதுதான் அது.

"சமூகம் சீராகிவிட்டது, ஆகவே நீங்கள் எல்லோரும் சமம்" என்று அறிவித்துவிட்டால் கண்டிப்பாக சமூகம் சமமாகிவிடாது. அது மீண்டும் பழைய நிலைமையில்தான் தொடரும்! ஆக மேட்டினை வெட்டிப் பள்ளத்தில் போட்டால் தான் சமதளம் கிட்டும் என்பதுதான் இந்த கொள்கையின் அடிநாதம்.

மேலே குறிப்பிட்ட மேடு, பள்ளம் என்பதெல்லாம் சரிதான்! அதற்காக, இதுவரை உரிமை அனுபவித்தவனுக்கு, சுத்தமாக உரிமை மறுத்தலும், உரிமையை இழந்தவனுக்கு முழுமையாக உரிமையை அளிப்பதுவும் தவறானது. ஆகவே, உரிமைகளை மற்றும் பலன்களை அனுபவிக்க, மேல்தட்டுக்கு பொதுபோட்டியும், கீழ்த்தட்டுக்கு அவன் இடத்தை யாரும் கைப்பற்றி விடாவண்ணம், உறுதி செய்தலும்தான் இடஒதுக்கீட்டின் அடிப்படைக் கருத்து!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக படித்து வந்த சமூகம், அத்துணைக் காலம்  கடைநிலை ஊழியம் செய்த சமூகத்திடம் நேரடியாக போட்டி போட்டால் யார் வெற்றி பெறுவார்கள்! கண்டிப்பாக இரத்தத்திலேயே கல்வி ஊறிப்போனவன்தான் வெற்றி பெறுவான்! இது எந்தவகையிலும் நீதியாக இருக்கமுடியாது! சமூக நீதி, பலன்கள் சரியாக சென்றடையும்போதுதான், சமூக நீதி என்றே அழைக்கப்படும்!

அது போகட்டும்!

இடஒதுக்கீட்டினை ஏதோ சலுகை எனக்கருதி, அதனால்தான் எனது வாய்ப்பு பறிபோனது என அரசாங்கத்தை சபிக்கும் பலரை கண்டிருக்கிறேன்! தோழர்களே! இட ஒதுக்கீடு ஒன்றும் சலுகை அல்ல. அது காயப்பட்ட இனங்களின் மனதில் பூசவேண்டிய களிம்பு. அது உரிமை.

இட ஒதுக்கீட்டினைப் பெறாதோர், பெறத் தகுதியானோர்க்கு வழி விடுவது கடமை.

அமெரிக்காவில் கூட இடஒதுக்கீடு உண்டு! கறுப்பர்களுக்கு!

ஆப்ரிக்காவிலிருந்து கொத்தடிமைகளாக, விலங்குகளைப் போல விலைக்கு வாங்கி வரப்பட்ட கறுப்பர்கள், இன்று சலுகை பெறுவதுதான் நியாயம்!

ஒரு கதை சொல்லுகிறேன்! அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது! ஆஸ்திரேலியா-வின் பூர்வகுடிகளான பிண்டுபு-க்களை அழிக்கத் திட்டம்போட்ட அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டது! அது என்ன தெரியுமா?! ஒரு பூர்வகுடியை வேட்டையாடி அவன் உடலைக் கொண்டுவந்தால், கொண்டுவந்தவனுக்கு  ஒரு  டாலர் பரிசு! இது நிகழ்ந்தது 17-ம் நூற்றாண்டில். குலை நடுங்கும் இந்த அறிவிப்பினை வெளியிட்டதால் எத்தனை உயிர் மாண்டு போயினவென்று தெரியுமா மக்களே!!! அதற்கு Kevin Rudd மன்னிப்பு கேட்டார்தான்! ஆனால், மன்னிப்பு மட்டும் மருந்தில்லை! அதற்கு மேலும் தேவை இருக்கிறது! அதுவே இட ஒதுக்கீடு!

சக மனிதனை, சாதியின் பெயரால் விலங்கை விட கேவலமாக நடத்திய சமூகம்தான் இந்திய சமூகம்! குடிக்கும் தண்ணீரிலிருந்து வாழும் வீடு வரை, தாழ்த்தப்பட்ட மக்களைத் தனியே பிரித்து வைத்த சமூகம் இந்திய சமூகமே!

செருப்பணிய, மேலாடை அணியத் தடை இருந்தது! சில தெருக்களில் காலால் கூட நடந்து செல்லக் கூடாது! நெஞ்சால் ஊர்ந்தே செல்லும் கொடுமை! இவ்வாறு சக மனிதனை நடாத்திய சமூகத்தை எங்காவது கேட்டதுண்டா?  

எந்த ஒரு நாட்டிலும் நடந்திராத, கற்பனை கூட செய்யமுடியாத கொடூர சித்திரவதைகளை இந்திய தலித்து மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்! இன்னும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்! இதற்கான தீர்வான இட ஒதுக்கீட்டை, தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக நினைக்கும் ஒரு சில சமூக மக்களைக் குறி வைத்துத்தான் இந்தக் கட்டுரையே எழுதப்படுகிறது!

மனு தர்மம் என்ற நச்சு, ஆரியர்கள் தவிர மற்றோர் அனைவருக்கும் உரிமைகளை மறுத்தது! இன்னும் கூட இந்திய அரசாங்கம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தனது அரசியலமைப்பு சட்டம் மனு தர்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது எனக் கூறிக்கொள்கிறது! அம்பேத்கரை 'மாடர்ன் மனு' என விளிக்கும் புத்தகங்களைக் கூட உண்டு! இதைவிட மோசமாக அம்பேத்கரை யாரும் கேவலப்படுத்திவிடமுடியாது!

இந்தியாவின் இடஒதுக்கீட்டு நிலை என்ன?
குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு!

1979 வருடம் மண்டல் ஆணையம் தங்களின் அறிக்கையை அரசுக்கு சமர்பித்தது! அதன்படி இந்தியாவின் 27% (1931-census)  உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளில் 27% க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்! நாடெங்கிலும் எழுந்த எதிர்ப்பால் அதை கிடப்பில் போட்டது அரசாங்கம்! பத்து வருடங்கள் கழித்து 1989- ல் அதை தூசி தட்டிய வி.பி.சிங் அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் கொண்டுவந்தது!

பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அது பொதுப் பட்டியலை பாதிக்கும் எனக் கருதிய பொதுப்பட்டியலை சேர்ந்தோர், ஒரு மதவாத தேசியக்கட்சியின் மறைமுக ஆதரவோடு கடுமையாக எதிர்த்தனர்.

ஒரு கல்லூரி மாணவன் தன்னையே எரித்துக் கொண்டு மாய்ந்தான்! இட ஒதுக்கீடு-வழக்காயிற்று! அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகபட்சம்  ஐம்பது சதவீதத்திற்குள்ளாக நாட்டின் மொத்த இட ஒதுக்கீட்டையும் அடக்கிவிடவேண்டும் என்றும் மீதமுள்ள ஐம்பது சதவீதம் பொதுப்போட்டிக்கு விடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதாவது 27% பதவிகள்/இடங்கள் OBC இனத்தவருக்கும் 15% பதவிகள்/இடங்கள் SC இனத்தவருக்கும் 7.5% ST இனத்தவருக்கும் ஆக மொத்தம் 49.5% க்குள், இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மீதமுள்ள 50% பதவிகள்/காலியிடங்கள் பொதுப்போட்டிக்கு விடப்பட்டது! இந்த சதவிகிதங்கள் எல்லாம் நாட்டில் உள்ள அந்தந்த சாதியினரின் விகிதாச்சாரத்தின்படியே (1931-census)வழங்கப்பட்டது! நாட்டில் உள்ள OBC இனத்தவர்களின் விகிதம் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாயிருக்கலாம் என்பதாலும், அவ்வினத்தவர்க்குள்ளாகவே சமூக அங்கீகாரம், மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றுள் மிகுந்த வேறுபாடு இருப்பதாலும், Creamy Layer என்ற வடிகட்டும் உத்தியை பயன்படுத்தியது அரசாங்கம்!

அதாவது, பொருளாதார ரீதியாக பிரியாத ஒரு OBC குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குறைந்திருந்தால் மட்டும் இட ஒதுக்கீட்டை அவர்கள் அனுபவித்துக் கொள்ளலாம். ஆகவே இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு OBC மாணவர்கள், வருடத்திற்கு ஒரு முறை தங்களின் ஆண்டு வருமானச் சான்றிதழை, வட்ட அலுவலரிடம் சமர்ப்பித்து அதற்கேற்ப புதிய சாதிச்சான்றிதழைப் பெறவேண்டும்.

கொஞ்ச நாட்களாக Creamy Layer என்ற வருமானம் உயர்ந்த பிரிவினை, OBC-க்களுக்கு இருப்பது போல SC/ST பிரிவினருக்கும் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

SC/ST பிரிவினரில் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி பணியில் இருப்போர், பொருளாதாரத்தில் உயர்ந்திருப்பதாகவும், ஆகவே அவ்வாறு முதல் தலைமுறையில் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தியவர்கள் இரண்டாவது தடவையாக பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் அல்லது, SC/ST பிரிவினருக்கிடையே  Creamy Layer என்ற ஒன்றை அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன! இது குறித்து உச்ச நீதிமன்றம் கூட ஒரு முறை தன் குரலை எழுப்பியிருக்கிறது.

இதில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சமூக அந்தஸ்தினை/அங்கீகாரத்தினை வழங்கிவிடுமா?
2.பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட Creamy Layer  என்ற கோடு OBCக்களுக்கு இருப்பது போல SC/ST பிரிவினருக்கும் அறிமுகப்படுத்துவதில் என்ன பிழை?

ஏழை மக்களுக்கு, அவர்கள் உயர்ந்த சாதியினராகவே இருந்தாலும் கூட பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற நரசிம்மராவ் ஆட்சிகால சட்டத்தினை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆக உச்சநீதிமன்றம், பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது தெளிவாகிறது. அதாவது, பொருளாதார ரீதியாக குறைந்திருந்தாலும் சமூக அங்கீகாரத்திற்கு குறைவில்லை என உச்ச நீதிமன்றம் ஒத்துக் கொண்டதாகத்தான் பொருளாகிறது. இந்த உத்தரவை அரசும் ஒப்புக்கொண்டது.

இதற்குக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்கள் 16 ன் படி  State may discriminate the socially and educationally backward classes for public employments (Positive dicrimination) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Economically backward classes என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதே நீதிமன்றம் 1992 ல் நடந்த மண்டல் வழக்கில் OBCக்களுக்கு Creamy Layer என்ற கோட்டினை வரையறுத்தது. அது ஏனென்ற காரணம் தெளிவாகப் புரியவில்லை!

OBCக்களுக்கு creamy Layer விதித்ததற்கு, கீழ்க்காணும் விஷயங்கள் காரணங்களாகக் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம.

1.  பொருளாதார ரீதியான முன்னேற்றம் OBC பிரிவினரிடையே, வாழ்வதற்குப் போதுமான சமூக அங்கீகாரத்தை வழங்கமுடியும் என நீதிமன்றம் கருதியிருக்கலாம்.

2. OBC பிரிவில் சாதிகளின் எண்ணிக்கை அதிகம். பொருளாதார வேறுபாடுகளும் அதிகம். ஆகவே அவர்களுக்குள்ளாக பொதுவான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பிற்காலத்தில் உள் ஒதுக்கீடு வழங்க நேரிடலாம். எனவே இட ஒதுக்கீட்டுக்கு தகுதியான வட்டத்தைச் சுருக்க பொருளாதார நிலையை ஒரு நியாயமான காரணமாக நீதிமன்றம் கருதியிருக்கலாம்.

ஆக மேற்கூறிய காரணங்களின் மூலமாக, அரசியல் சட்டத்தில் இல்லாத 'பொருளாதார நிலையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு' என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது தெளிவாகிறது.

SC/ST பிரிவில் creamy layer முறையை அறிமுகப்படுத்துவதற்கு மேலே கூறியவை போன்ற நியாயங்கள் வேண்டும். மேலே கூறிய நியாயங்கள் SC/ST பிரிவினருக்குப் பொருந்துமா?

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. கொஞ்ச நாளைக்கு முன்னர் The Hindu நாளிதழில் matrimonial பகுதியில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. அழகிய குணவதியான பெண்ணுக்கு வரன் கேட்டிருந்தார்கள்.  No Caste bar என்றும் போட்டிருந்தார்கள். கூடவே  SC/STs Please excuse என்றும் போட்டிருந்தார்கள். அவன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் சரி.

2. திண்ணியம் என்ற இடத்தில் ஒரு தலித்தின் வாயில் மலத்தைத் திணித்து வேடிக்கைப் பார்த்தார்கள்.

3. பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு எத்தனை வருடங்கள் தேர்தலே நடைபெறாமல் இருந்தது என உலகத்துக்கே தெரியும்.

4. உத்தபுரம் என்ற கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பலைகளை நாடறியும்.

5. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. அதனை நாடெங்கிலும் இன்னும் செய்து வருவது தலித்துக்களே!

6.குப்பை அகற்றும் தொழிலாளர்கள் (தோட்டிகள்) எனப்படும் அரசாங்க வேலைக்கு தலித்துக்களைத் தவிர எத்தனை பிற சாதியினர் செல்கிறார்கள்?

6. இன்றும் இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு தலித் வீடுகள் எரிக்கப்பட்டு வருகின்றன.

7. பாலியல் வன்கொடுமைகள் இன்றும் பல தலித் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வருகின்றன.

பொருளாதார வளர்ச்சி தலித்துகளுக்கு சமூக அங்கீகாரத்தை அளித்துவிடப்போவதில்லை.

இதற்கு சில உதாரணங்கள்.

ஒரு உயர் நீதிமன்றத்தில் புதிதாகப் பதவியேற்ற ஒரு நீதிபதி, அதற்கு முன்பாக அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த தலித் நீதிபதியால் தீட்டுப்பட்டதாகக் கருதி அதற்கு கோமியம் தெளித்து தீட்டுக் கழித்திருக்கிறான். நீதி நிலைத்துவிடும்தானே?! நீதி தேவதையே மூர்ச்சையாகியிருப்பாள்

கடந்த மார்ச் மாதம் ஒய்வு பெற்ற  A.K.ராமகிருஷ்ணன் என்ற தலித்,  Inspector General of Posts ஆக இருந்தவர். அவர் ஒய்வு பெற்ற அன்று, அவரின் அறைக்கு கோமியம், பசுவின் சாணம் ஆகியவை தெளிக்கப்பட்டு தீட்டு கழிக்கப்பட்டுள்ளது. விஷயம் வெளியே தெரிந்துவிட்டதால் அடுத்தநாள் அலுவலகம் முழுவதும் அதே சடங்கு செய்யப்பட்டு மூடிமறைக்கப்பட்டது. இது நடந்தது, நாட்டிலேயே அதிகமாக கற்றோர் வாழும் மாநிலமான கேரளத்தில். (http://scstemployees.blogspot.com/2011/04/sc-officer-room-cleansed-by-cow-dung.html)

தணிக்கை செய்யும் ஒரு மத்திய அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரிடம் சென்று சற்று நேரம் பேசிப்பாருங்கள். உங்களிடம் நட்பைத் தொடரும் அளவுக்கு நீங்கள் ஒரு சுவாரஸ்யமான ஆளாக இருந்தால், உங்களிடம் நட்பைத் தொடர வேண்டும் அவர் எண்ணினால், அடுத்த கேள்வி உங்கள் சாதி பற்றியதாகத்தான் இருக்கும். இந்தியா முழுக்க இருக்கும் அந்த அலுவலகங்களில் இது தான் நிலை.

இந்த நிலையில், பொருளாதார நிலையின் அடிப்படையில் SC/ST பிரிவில் creamy layer முறையை அறிமுகப்படுத்துவது என்பதும் அது குறித்து பேசுவது என்பதுவுமே சமூக நீதியை மறுதலிப்பது போலாகும். அதையும் மீறி SC/ST பிரிவில் இட ஒதுக்கீட்டுக்கு creamy layer முறை வேண்டும் என்று கேட்போருக்கு அந்த இனத்தவருக்குள்ளாகவே கலகம் மூட்டி விடும் எண்ணத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

SC/ST மக்களுக்குள்ளாகவே, ஒரு மெல்லிய கீறல் இது போன்ற பேச்சுக்களால் உருவாகியுள்ளது. நீங்களெல்லாம் வழிவிடுங்களேன், நீங்கள்தான் முன்னேறிவிட்டீர்களே, என்ற குரல்கள் உள்ளுக்குள்ளேயே ஒலிக்கிறது.

முன்னேறினால்கூட சமூக அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைப்பதில்லை என்ற உண்மை வெற்றிகரமாக அவர்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக முன்னேறிய SC/ST மக்கள் தங்கள் சமூகத்தை முன்னேற்றப்பாடுபட்டாலும்கூட அது அச்சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமேதான் முடிகிறதே  ஒழிய சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தரமுடியவில்லை. முடியவும் போவதில்லை.  ஏனெனில் அது அவர்களின் கையில் இல்லை.

ஆகவே!

மாற வேண்டியது சமூகமும், மக்களின் மனங்களும், சமூக நீதியின் இயல்பான வெற்றியான அதிகாரப்பரவலும்தான்.

அது முதலில் நிகழட்டும்.
* கீற்று இணையதளத்தில் 29-05-2011 அன்று வெளியான எனது கட்டுரை. 

Thursday, May 19, 2011

அடம் பிடிக்கும் கோமளவல்லி (எ) ஜெயலலிதா


என் நண்பர் ஒருவரிடம் தமிழக தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கருத்து கேட்டேன்! அவர் சொன்னார்!

YEAH! IN A WAY, IT IS THE VICTORY OF DEMOCRACY!  என்று.

சரிதான்! எனக்கொன்று புரியவில்லை! இது அ. தி. மு.க. வுக்கு கிடைத்த வெற்றியா? அல்லது தி.மு.க. வுக்கு எதிர்ப்பாக கிடைத்த வெற்றியா?அ.தி. மு.க. வுக்கு ஆதரவாக எனக்கு ஒரு விஷயமும் புலப்படவில்லை! 
தி. மு.க. எதிர்ப்புக்கும் அவ்வாறே!

அ. தி. மு.க. தனது கடந்த ஆட்சியில் செய்தவை என்னென்ன? இரண்டு லட்சம் 
அரசு அலுவலர்களை  தற்காலிகப் பணிநீக்கம் செய்தது, மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டுவந்தது மற்றும் மது விற்பனையை அரசே ஏற்று, பட்டதாரிகளை ஊற்றிக்கொடுக்க வைத்தது  தவிர? (கருணாநிதி, இன்னும் பல பேர்களை நியமித்தார்- நிறைய கடைகளைத் திறந்தார்).

 வேறொன்றும் எனக்கு புலப்படவில்லை. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெயா என்ன செய்தார்?

  • நான்கரை ஆண்டுகளாக கொடை  நாடு சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்தார்.
  • திடீரென்று வெளியே வந்து இரண்டு மாநாடுகளை நடத்தினார்.
  • கருணாநிதி, ஈழப் பிரச்சினையில் கைவிரித்ததை கண்டு ஜெயா,  ஈழம்  மலர  வழி வகுப்போம் எனக் கூவினார்! நிற்க! பாராளுமன்ற தேர்தலின்போது மட்டும். இதே ஜெயாதான் புலிகளின் அரசியல் ஆலோசகரான தமிழ்செல்வனின் மரணத்திற்கு இரங்கல் கவிதையை படித்துவிட்டு over react செய்தது.
  • மூன்று முறை சட்டமன்றத்திற்கு வந்து தன்  ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டுப் போனார். 
இவ்வளவுதான் எனக்குத் தெரிந்து ஜெயா கடந்தப் பத்து வருடங்களாகச் செய்தது.


ஒரு ரூபாய்க்கு அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், கூட்டுறவுக் கடன்கள் ரத்து, அவசர ஆம்புலன்ஸ் சேவை, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் (ரூ. ஒரு லட்சம் வரை), இலவச கலர் டிவி, மழையில் ஒழுகா கான்கிரீட் வீடுகள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை, தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் மீதான தடையை நீக்கி, தடையால் 
பாதிக்கப்பட்டோருக்கு, ஐந்து வருடங்களுக்கு வயது வரம்புச் சலுகை, 
பல சப்-அர்பன் (துணை) நகரங்களை நிர்மாணித்தது, இன்னும் எத்தனையோ செய்த 
கலைஞருக்கு எதிர்கட்சி வரிசையில்  அமரும்  தகுதியைக் கூட தர இந்த தமிழக மக்கள்  தயாராயில்லை! இதுல இன்னொரு பய வேற வரப்போறான்! ஆண்டவா! 

சட்டசபைக்கு வெளியவே பார் கேக்கறானாம் இந்தப் பய!  இன்னும் ஒரே மாசத்துல இந்த ஜந்துவை அம்மா, உதைத்து வெளியே தள்ளிவிடும்! இவன் சினிமாவுல வில்லன உதைக்கிற மாதிரி! (அணுகவும்: டாக்டர் ஐயா அவர்கள்!)  

கலைஞர் தவறே செய்யவில்லை என நான் கூறமாட்டேன்! இலங்கைப் போர்  விவகாரத்தில் குறைந்தபட்சம்-என்னால் இயலாது- எனக் கை விரித்திருந்தால் கூட அது மறக்கப்பட்டிருக்கும். உண்ணாவிரதம், கடிதம் என கபட நாடகம் ஆடியதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  

'SPECTRUM' விவகாரத்தைப் பற்றி நான் எதுவும் எழுதுவதை இல்லை.
அது ஊரே நாறிப் போன, உண்மையில் ஒன்றுமே இல்லாத, ஒன்று. அங்கு ஊழல் என்று ஒன்று நடைபெறவே இல்லை.  இப்படித்தான் தீர்ப்பாகும் பாருங்கள். வளைக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. நேர்மையான தீர்ப்பே அவ்வாறுதான் வரும். ஏனென்றால் TRAI regulations- ல்   உள்ள  Social  cause- Clause ன்  படி  'First Come, First Serve' என்பது  நியாயமே! அங்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம்! சாத்தியமே! ஆனால்
 அதை தண்டிக்க முடியாது!  
மற்றுமொன்று! 'Presumptive Loss' என்ற  ஒரு கருத்தே  தவறானது!   இது எல்லோருக்கும் தெரியும்! சிபிஐ-க்கும் தெரியும்!

அலைக்கற்றை  விவகாரத்தைப் பற்றிய பிரச்சாரத்தை  நம்பி கருணாநிதிக்கு எதிராக வாக்களித்தோம் எனக்கூறும் வாக்காளர்கள் தீர்ப்பு வரும் நாள் அன்று தங்கள் முகத்தை உற்று கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும். எவன் சொன்னாலும் நம்பினேனே நான் ஒரு இளிச்சவாயன்தானே! என தன் பிம்பத்திடம் தானே உரையாடவேண்டும்!


எனக்கென்னவோ, ஈழவிவகாரம்தான் இந்தப் படுதோல்விக்குக் காரணம் எனப் படவில்லை! தமிழன் என்ற அடையாளத்தைத் துறக்க விரும்பும் மக்கள்தான்  கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ்மண்ணில் வாழ்கிறார்கள். இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்! அவ்வாறான மக்கள் ஈழத்தில்கூட உண்டு.  மறுப்போர்கள் தங்கள் மனசாட்சியிடம்தான் கேட்டுக்கொள்ளவேண்டும்.

இருக்கும் ஒண்ணு ரெண்டு பேரும், கத்தி கத்தி ஓஞ்சிப்போய்ட்டாங்க!

அப்படியென்றால் கருணாநிதியின் படுதோல்விக்குக் காரணம் என்ன? குடும்ப ஆட்சியா!?

அட பதர்களா!!! ஆள்றவனுக்கு குடும்பம்-னு                                                                 இருந்தா அதுவும் வரத்தாண்டா செய்யும். இது இங்க மட்டுமில்ல! ஈரான்-ல, ஈராக்ல, பாகிஸ்தான்ல, மன்னர்கள் ஆட்சி  செய்யும் நாடுகள்ல, லிபியாவுல, எகிப்துல, இவ்வளவு  ஏன் அமெரிக்கா-வுல கூட வாரிசு ஆட்சி இருக்கத்தான் செய்யுது! 

ஆமா! ஸ்டாலினுக்கு என்னதான் குறைச்சல். முப்பது வருஷத்துக்கு மேல 
அரசியல்ல இருக்காப்ல! மிசா காலத்துல உதை வாங்கியிருக்கப்ல! இந்த 
அனுபவத்தோட பல நாட்டு அதிபர்கள்கூட இல்லை-ங்கிறது தான் உண்மை!            

 ரவுடியிசம் அதிகமாயிருச்சி! எனக் குற்றம் சாட்டுவோர்களுக்கு ஒன்று சொல்கிறேன்! ஜெயா ஒண்ணும் புதுசா ஆட்சிக்கு வரல! ஏற்கனவே ரெண்டு தடவ பாத்துருக்கோம்! ரவுடிங்க எல்லாம் அந்தம்மா காலத்துல காந்தியாவா இருந்தானுங்க?  எல்லாமும் எல்லா காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது!

கனிமொழி சொத்து வளைச்சிபோட்டுச்சி! அழகிரி அதைப் பண்ணினாரு! இதைப் பண்ணினாரு! அதனால்தான் மாத்தி வோட்டு குத்துனோம்-னு சொல்ற பசங்களுக்கு ஒண்ணு.

வளர்ப்புப் பையன்-னு சொல்லப்பட்டவனுக்கு முன்னூறு கோடி ரூபாய்ல கல்யாணம், ஒவ்வொரு எம்மெல்லேவும் ஒரு வாரத்துக்கு ஒரு கோடி பட்டுவாடா பண்ணியது, லண்டன்-ல ஒன்னு கொடைக்கானல்-ல ஒண்ணுன்னு ஹோட்டல்,    டான்சி நில விவகாரம் இன்னும் இதர பல  ஊழல்கள்- இவையெல்லாம் யார்காலத்தில் நடந்தன?    காலை ஒன்பதே முக்காலுக்கு தினமும் அண்ணா சாலையில் ஐந்து வருடங்களுக்கு போக்குவரத்தை நிறுத்தியது யார் காலத்தில் நிகழ்ந்தது?

கருணாநிதிக்கு குடும்பம் இருக்குது! அவங்க ஊழல் செஞ்சதா குற்றச்சாட்டு வந்தது! அம்மா ஆட்சிக்கு வந்தாச்சு! இனிமே மன்னார்குடி  மாபியா அதை செய்யப் போகுது! இதே மாபியா ஏற்கனவே பத்து வருஷம் கொள்ளை அடிச்சது. எல்லாம் நம்ம மக்களுக்கு
மறந்துட்டுது!  


பிளாட்டோ ஒன்று சொல்வார்! தன்னுடைய 'THE REPUBLIC' என்ற புத்தகத்தில்.

மக்கள் முட்டாள்கள்
கல்கி கூட தனது பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இதையே  சொல்வார்! (நான்காவது பாகம்-       ஆட்சியைப்  பறிகொடுக்கின்ற  கோபத்தில் கரிகாலன்   பெரிய பழுவேட்டையரையரிடம்  கூறும்  வசனம்!)

அரிஸ்டாட்டில்  ஒன்று சொல்வார்! 

'COLLECTIVE WISDOM IS GREATER THAN INDIVIDUAL WISDOM' என்று. 

இதில் நான் யாரை நம்புவது! 

ஜனநாயகத்தின் வெற்றி எனக் கூறிய என் நண்பருக்கு நான் கூறிக்கொள்வது! 
 'இனிமேல் காணுங்கள் நண்பரே! YOU WILL HAVE TO WITNESS ALL THE MANIFESTATIONS OF ARISTOCRACY AND DECAYED FORM OF DEMOCRACY!


புதிதாகக் கட்டிய தலைமைச் செயலகம் ஜெயாவுக்குப் பிடிக்கவில்லையாம்! 
மறுபடியும் அந்த வாடகைக் கோட்டைதான் வேண்டுமாம்!

இதுக்குப் பேருதான் அவாள்  திமிரு!


குறிப்பு!

ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த சில சம்பவங்களான, முன்னூறு கோடி திருமணம், கும்பகோணம் சம்பவம் போன்றவற்றுக்கான புகைப்படங்களை இணையத்தில்  தேடினேன்! எங்கும் கிடைக்கவில்லை! கிடைத்தது, அம்மாவின் போட்டோக்கள்தான்! அதில் சாம்பிளுக்கு ஒன்று!