Monday, January 31, 2011

திருவாசகம்- நீத்தல் விண்ணப்பம்- இரண்டு

கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது 

பாடல்: 3  

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரைமரமாய் 
வேருறுவேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் 
ஊருறைவாய்  மன்னும்  உத்தரகோசமங்கைக்கரசே
வாருறு பூண்முலையாள் பங்க என்னை வளர்ப்பவனே     

விளக்கம்:
     சிறந்து விளங்குகின்ற திருவாரூரில்  உறைந்திருப்பவனே! (வாழ்பவனே!)உத்தரகோசமங்கைக்கரசே! இறுகிய கச்சையையும் அணிகலன்களையும் பூண்ட பார்வதியை தன் இடப்பகுதியில் கொண்டிருப்பவனே! என்னை வளர்ப்பவனே !
கார்மேகம் போன்ற கரிய கண்களையுடைய பெண்டிரிடம் எனது ஐம்புலன்களையும் ஆற்றங்கரை மரம் எவ்வளவு எளிதாக வேருறுமோ, அவ்வாறு செலுத்திக்கொண்டிருக்கும் என்னை விட்டிடுதி ! 

பாடல்: 4

வளர்கின்ற நின் கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் 
மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று  
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே 
தெளிகின்ற பொன்னுமின்னும் அன்னத் தோற்ற செழுஞ்சுடரே! 

விளக்கம்:
   பிறை நிலவை தன் நீளமான தலைமுடியில் சூடிக்கொண்டிருக்கும் உத்தரகோசமங்கைக்கரசே! மாசு மரு நீங்கிய தெளிந்த உருகிய பொன்னைப்போன்ற தோற்றம் கொண்டவனே! செழுஞ்சுடரே!  நின் கருணைக்கைகள் நீளும் தகையது. அப்படிப்பட்ட உன் கருணைக்கைகள் என்னை ஆட்கொள்ள நீண்டும் அதனை நீங்கி, அதனின்று விலகி, அதன் இழப்பினை அறியாது, மகிழ்ச்சியாக மிளிர்கின்ற என்னை விட்டிடுதி! 

பக்தன் எட்டி சென்றாலும் இறைவனின் கருணை இன்னும் நீண்டு அவனை காக்கும்-எனவே மாணிக்கவாசகர் 'வளர்கின்ற கருணைக்கை' எனக்குறித்தார் எனக் கொள்க!  



Sunday, January 30, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்-ஒன்று


கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது


பாடல்: 1  


கடையவனேனைக்(*)  கருணையினால் கலந்தாண்டுகொண்ட 
விடையவனே  விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோச  மங்கைக்கரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே   

விளக்கம்
கோப வெறி கொண்ட வேங்கையின் (அதாவது புலியின்) தோலை தரித்தவனே! உத்தரகோசமங்கையில் கோவில் கொண்டு வாழ்பவனே! (உத்தரகோசமங்கை  ஒரு சிறந்த சிவத்தலம்) சடை முடியோனே! நான் தளர்ந்துவிட்டேன்! என்னைத் தாங்கிக்கொள்வாயாக! 
எதற்கும் பயனில்லாத, கடையவன் ஆகிய என் மேல் கருணையை பொழிந்து, என்னைக் கலந்தாண்டு கொண்டவனே! எருதினை வாகனமாகக் கொண்டவனே ! 
என்னை விட்டிடுதி! அதாவது கைவிட்டுவிடாதே!  


விடை= எருது 

* கடையவன் என்ற பதப்பிரயோகம் பல அர்த்தங்களை கொடுக்கிறது. சாதிக்கட்டமைப்பின் கடைசி படியினை கடையோன், புலையன் என பல பதங்களின் மூலம் கூறுவர். மாணிக்கவாசகர் காலத்திலேயே  (AD .1200 ) சாதிக்கட்டமைப்பு இறுகி இருந்ததை இந்த பதப்பயன்பாடு காட்டுகிறது.     

பாடல்: 2

கொள்ளேர்  பிளவகலாத் தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் 
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய் விழுதொழும்பின் 
உள்ளேன் புறமல்லேன் உத்தரகோச மங்கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே  

       
விளக்கம்:

உத்தரகோச மங்கைக்கு அரசே! நான் உன் அடியார்கள்  கூட்டத்தில்தான் இன்னும் இருக்கிறேன். (தொழும்பர் என்றால் அடியார்  எனப்பொருள்படும்). அதற்கு புறம் சென்றுவிடவில்லை. ஆனாலும் நான் தீமையை இன்னும் புறந்தள்ளாதவன்  (கள்ளேன்). 

ஒரு மணி கொள்ளைக்கூட (கொள்- குதிரைக்கு இடும் தீவனம்) உட்புகவிடாத   இறுக்கமான மார்பகங்களைக்கொண்ட மங்கையரின் செவ்விதழ்களை நான் இன்னும் விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன். அதாவது நான் இன்னும் சிற்றின்பத்தை கைவிடவில்லை.

 என்னை விட்டிடுதி! 

 நான் உன்னை விட்டு நீங்குவதை அறிந்தும் என்னைக் கண்டுகொண்டு ஆட்கொண்டுவிட்டாயே! அதற்கு காரணம் என்னவோ?!     



இன்னாத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகினு? அத்தால ஒரு சேஞ்சுக்கு பக்தி இலக்கியம் எழுதலாம். 
ஒரு ரெண்டு நாளைக்கு திருவாசகம் பதவுரை பாப்போம். மாணிக்கவாசகரோட புலம்பல்கள் ரொம்ப பிரசித்தம்.  
அப்பறமா அரசியல் பத்தி பாப்போம். இன்னா? 


Saturday, January 29, 2011

கர்நாடக சமத்துவம்


எழுபத்தைந்து வயதான மேலந்தபெட்டு  கிராமத்தில் வசிக்கும் பைலு என்பவர் இதுவரை போஸ்ட் ஆபீஸ்-ல் கால் வைத்ததில்லை. அங்கு போஸ்ட் ஆபீஸ் இல்லை என்ற காரணத்தால் இல்லை.  அவ்வாறு கால் வைத்தால் அங்கிருந்து தூக்கி வெளியே எறியப்படுவோம் என்ற பயம்தான் காரணம். ஏன் என்றால் அவர் ஒரு தலித். 
கர்நாடகத்தில் உள்ள தெற்கு கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுக்கா, மேலந்தபெட்டு கிராமத்தில்தான் இந்த கொடுமை. வயது முதிர்ந்த தலித்துகள் தங்கள் பென்ஷன் பணம் பெறுவதற்காக போஸ்ட் ஆபீஸ்-இன் வாசலில் காத்திருக்கவேண்டும்-கொளுத்தும்  வெய்யிலில். அந்த அலுவலர்கள் வெளியே வந்து கையிலுள்ள பணத்தை வேறு யாரிடமாவது கொடுப்பார்கள். அவர்கள் அந்த தலித் மக்களுக்கு கொடுப்பார்கள். No Direct Dealing.

அந்த போஸ்ட் ஆபீஸ் ஊருக்கு நடுவில்கூட இல்லை. போஸ்ட் மாஸ்டர்-இன் வீட்டுக்கருகில்  உள்ளது. தீண்டாமையை ஜீரணித்துக்கொள்ளும் வயதானவர்களின் நிலைமை ஒருபக்கம். அதனை சீற்றத்துடன் உற்று நோக்கும் இளைய தலைமுறை மறுபக்கம். 
(நன்றி- தி ஹிந்து நாளிதழ் 28 -01 -2011 )


மத்திய அரசு உண்மையாகவே சமத்துவத்தை உருவாக்க முனைகிறது என்றால் செய்யவேண்டிய காரியங்கள் இவைதான்.
  • இந்த சம்பவத்தை ஆராய்ந்து அதன் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். 
  • அது உண்மை என நிறுவப்பட்டால் அந்த அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படவேண்டும். 
  • அதோடு அவர்கள் மேல் Protection of Civil Rights Act படி தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும். 
இவைதான் மத்திய அரசின் மாண்பை காப்பாற்றும். 

Friday, January 28, 2011

நீ என்கிற நீயும்-நான் என்கிற நானும்


குழாச்சட்டை எறங்குச்சுன்னா 
தெரியுற ஜாக்கி பட்டை உன்து
கொட்டாப்பட்டி எறங்குச்சுன்னா 
தெரியுற சுடர்மணி பட்டை என்து

சாதி இல்ல சாதி இல்லன்னு 
சலம்பல் பண்ற நீயி- ஒர்த்தன் வாயில 
சாணி கரச்சி ஊத்திட்டானுங்க 
நல்லாக்கேளு நீயி

வெயிலடிச்சா தாங்க மாட்ட 
வெள்ளத் தோலு உன்து-வெய்யில்ல 
ரோட்டுவேல செஞ்சி செஞ்சி 
கருத்த  தோலு என்து 

ஆறு மாசம் காக்க வச்சி 
அறுவடைக்கு ஏமாத்துது பூமி- நீ
கம்ப்யூட்டர்-ல காச நெதம்
அச்சடிக்கிற சாமி 

ஒன் சாயங்கால செலவுலதான்ப்பா 
எம்புள்ள கல்யாணமே ஆச்சு
ஒன் ஒரு வேள செலவுலதான்-எங்கப்பன்
காரியம் கூட ஆச்சு  

எம்புள்ளய உம்புள்ளகூட 
நானும் படிக்க வப்பேன்
கருப்பா, ஒரு ஓரத்துல நின்னு 
எம்புள்ளயும் படிச்சிக்கட்டும் 

எவ்வளவு தூரம் நீ சென்றுவிட்டாலும் 
எட்டிப்பிடிக்க நானும் வருவேன்-அதுவரை 
நான் ஏங்கிக் கொண்டிருப்பேன்  
ஏங்குவது எனக்கென்ன புதிதா  என்ன 

ஆனால் ஒன்று

எனக்கு மறுக்கப்பட்ட கருணைகளை 
என்றும் என்னிடம்  எதிர்பார்த்துவிடாதே
ஏக்கம் பின் எதிர்நிலையில் செயல்படும்
அதைத் தாங்கவொண்ணாது உன்னால்
 






 

Sunday, January 16, 2011

அம்பேத்கர் என்ற பெயரின் பயன்பாடுகள்



 அம்பேத்கர்-ஐப் பற்றி நான் பெரிதாக ஏதும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நலிந்த மக்களின் ரட்சகராக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்ட வரைவுகளை முன்னிறுத்தி பெரும் ஆண்டைகளிடம் போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்தவர். அவையெல்லாம் சரிவர கிடைக்கின்றனவா என்பது மற்றொரு கேள்வி என்றாலும், அவை கிடைக்க வழிவகை செய்ததை நாம் மறக்க முடியாது. 

ஆனால் அது மட்டுமே அம்பேத்கர்-இன் முகம் கிடையாது. அம்பேத்கர் ஒரு intellectual. அவரது அறிவாற்றலால் வெள்ளையர்களின் மரியாதையை பெற்றவர். ஒரு பிரிட்டிஷ் பெண்மணி அவருக்கு எழுதிய காதல் கடிதங்கள் கொஞ்ச காலத்திற்கு முன் வெளியிடப்பட்டபோது நான் சற்று வியந்தேன். 

சாதி என்ற கட்டமைப்பு இந்தியாவில் இன்னும் இருப்பதனால்தான், இன்னும் அம்பேத்கர் ஒரு சாதி அடையாளமாகவே பார்க்கப்படுகிறார். அவரின் மற்ற அடையாளங்கள் மறைக்கப்பட்டு சாதியின் வண்ணம் மட்டுமே பூசப்படுவது ஒரு பெரிய சோகம். 

அவர்மேல் பல விமர்சனங்கள் அந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. அவருக்கு போட்டியாக பலரை அரசியலில் வளர்க்க முயற்சித்தது காங்கிரஸ். 

Constituent Assembly -இல் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் காந்தி. தலித்துகளுக்கு சமஉரிமை அளிக்கப்போவதாக  வெளிவரும் தகவல்களுக்கு உங்களின் கருத்து என்ன என பத்திரிக்கையாளர்கள் வினவியபோது 'எனக்கு தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது! என் கையில் ஏதும் இல்லை' எனப் புலம்பினார் காந்தி. 

அம்பேத்கர் என்ற பெயரின் பயன்பாடுகள் 

தலித் அரசியலில்  அம்பேத்கரின் பெயர் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதாக எனக்குப்படுகிறது. மாயாவதி, திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும் பலர் அவரது பெயரை கூறிக்கொண்டு அரசியல் புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவை எல்லாம் தேர்தலில் கிடைக்கும் சீட்டுக்கள், அதனால் கிடைக்கும் வோட்டுக்கள். இவைகளே. இதற்கு காரணம் என்னவென்றால், மற்றவர்களின் பார்வை போல இவர்களின் பார்வையும் மிக குறுகலானது. அம்பேத்கரை இவர்களும் சாதியின் அடையாளமாகத்தான் பார்க்கிறார்கள். கொடுமை!!! அவரை சாதியின் அடையாளமாகப் பார்ப்பதின் விளைவுகள் பல. 

1 .தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு செய்ய அவரின் சிலைக்கு அவமானம் செய்யப்படுகிறது. இவன் பதிலுக்கு மற்ற தலைவரின் சிலையை அவமானப்படுத்துகிறான். அல்லது இவன் முதலில் செய்கிறான். அவன் பதிலுக்கு அவமதிக்கிறான்.  

2 .பல கட்சிகளின் தோற்றம். இவை ஒரு குழுவுக்குள் வேற்றுமை வளர்க்கத்தான் செய்யுமோ தவிர ஒற்றுமையை வளர்க்காது. 

3 . அம்பேத்கர் சட்டக்கல்லூரி, சென்னை என்று சுவரொட்டியில் போடாமல் வெறும்  அரசினர் சட்டக்கல்லூரி என்று போட்டனர். ஒரே அடிதடி தகராறு. அம்பேத்கர்-ஐ வெறும் சாதி அடையாளமாகப்பார்த்து, அவரின் பெயரை சுவரொட்டியில் தவிர்த்தால் அது ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு  செய்யும் அவமானம் என்று கருதிய அறியாமையை என்ன செய்வது ?  அதனை வன்முறை கொண்டு பழிவாங்குவதால் தீர்க்கமுடியும் என்று கருதி ஆடிய கொலைவெறி தாண்டவத்தை எப்படி கண்டிப்பது? 
இப்படிப்பட்ட பிரச்சினைகளும் அவரின் பெயரை பயன்படுத்துவதால் கிளம்புகிறது. 

தலித் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவில் உள்ள சாதிகளை அழித்துவிட்டாலும் இந்திய  மக்களின் மனதில் உள்ள சாதியை அழித்துவிட  முடியாது. அம்பேத்கர்-ஐப் பற்றி எனக்கு தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு. அவர் சாதிகளை  அழிக்க முற்பட்டார். (Annihilation of Caste ). இது social justice அல்ல. தன் கடைசி காலத்தில் பௌத்தத்திற்கு மாறினார். அவர் உள்ளிருந்தே போராடியிருந்திருக்கவேண்டும். இந்த விமர்சனங்களையும் மீறி அவர்மேல் ஒரு மரியாதையும் உண்டு. அது அவர் கற்ற கல்வியால் எனக்கு ஏற்படுவது. யாவருக்கும் நியாயமாக தோன்ற வேண்டியது. 
   
வேறு எந்த சாதிக்கும் தலைவராகக் கருதப்படும் யாரும் intellectual கிடையாது. அவர்கள் ஒரு Philanthropist -ஆக வேண்டுமானால் இருக்கலாம். 

ஆகவே அம்பேத்கர்-ஐ வெறும் சாதித்தலைவராக சுருக்கிவிடாதீர்கள்! இது பற்றி இன்னும் நிறைய பேசுவோம். சமயம் வரும்!


Saturday, January 15, 2011

பிரிவோம்!! சந்திப்போம்!!!

கடந்த இரு தினங்களாக என்னால் உங்களுடன் பேசமுடியவில்லை. இது தற்காலிகம்தான். ஒரு பணியின் நிமித்தம் நான் என் கிராமத்திற்கு வந்துள்ளேன். சிலதினங்கள் கழித்து நாம் வழக்கம் போல் பேசலாம். 


பிரிவோம்!! சந்திப்போம்!!!

Wednesday, January 12, 2011

அஹிம்சை என்பது என்ன?

சொல்லுங்கள் நண்பர்களே! அஹிம்சை என்றால் என்ன? ஜீவகாருண்யம்? உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்? எதிரிகளிடம் அன்பு செய்தல்? இவைதானே?

நண்பர்களே! காந்தி பிறந்த மண்ணில் பிறந்த நீங்களும் அதை ஒப்புக்கொள்வீர்கள். அதை அங்கீகரிப்பீர்கள். நான் அதை மறுக்க முனைகிறேன். எனக்கும் எதிரிகளிடத்தில் அன்பு செலுத்த பிடிக்கும். எனக்கும் அஹிம்சை பிடிக்கும். ஆனாலும் என் கருத்தை கொஞ்சம் கேளுங்கள்.

ஒரு மனிதன் தனக்கு துன்பம் இழைக்கும் ஒருவரை, தன் எதிரியை மன்னிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் எதிரியின் வலிமையை தடுக்க எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றால் அதன் விளைவு என்ன? அந்த எதிரி அவனை தேய்த்து அழித்து விடுவான் அல்லவா? இதுதான் அஹிம்சையின் விளைவு.

ஆக உண்மையான அஹிம்சை என்பது அழிவதற்கான வழிகளில் ஒன்றே! ஏதோ ஒன்று, அது மனிதனோ விலங்கோ, உங்களை கொல்லும் நோக்கத்தோடு தாக்க வரும்போது உங்களின் செயல் என்னவாக இருக்கும்? தற்காத்தே ஆகவேண்டும். இல்லையேல் உயிர் போய் விடும்.


தென் அமெரிக்க பழங்குடியினரை கொன்று  குவித்தார்களே ஸ்பானியர்களும் போர்த்துகீசியர்களும். அப்போது அவர்கள் அஹிம்சை முறையை கையாண்டிருந்தால் அவர்களின் உயிர் இன்னும் எளிதாக போயிருக்கும். வெள்ளை வெறியர்கள் மிக எளிதாக வென்றிருப்பார்கள்.

எதிரி ஒரு வாய்ப்பு கொடுத்தாலன்றி, அஹிம்சையை பிரயோகிக்க அங்கு வாய்ப்பு இருப்பதில்லை. பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆகிய ஐரோப்பிய நாட்டினர் வன்முறையை மட்டுமே பயன்படுத்தி உலகை வென்றனர். நமது இந்தியாவிலேயே ராஜராஜ சோழன், அசோகன், அவ்ரங்கசீப், அக்பர், போன்ற நாம் இன்னும் போற்றக்கூடிய மன்னர்கள் அஹிம்சையை பயன்படுத்தி நாடு பிடிக்கவில்லை. காந்தியின் நாயகனான இராமனே வன்முறையை பயன்படுத்தித்தான் தன் மனைவியை மீட்க முடிந்தது.

அஹிம்சை என்பது மனித இயற்கைக்கு முரணானது. ஆனால் காந்தியின் அஹிம்சை வெற்றி பெற்றது என்ற அதீதப்படுத்தப்பட்ட கற்பனை தவறானது. ஒரு சாதாரண company ஒரு பெரிய நாட்டை 150  ௦ ஆண்டுகள் ஆண்டது. ஒரு சத்யம் நிறுவனமோ ஒரு இன்போசிஸ் நிறுவனமோ ஒரு நாட்டை பிடித்து ஆளுகிறது என்றால் நாம் நம்புவோமா?


அப்படிப்பட்ட நம்பவே முடியாத ஒன்று தான் இந்தியாவில் நடந்தது. அதற்கு மேலும் ஒரு நூறு வருடங்களுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டது. கங்கை முழுவதும் உறிஞ்சப்பட்டு தேம்ஸில் பிழியப்பட்டது. இந்த 250 ௦ ஆண்டுகளுக்குள் வந்த 20 -க்கும் மேற்பட்ட பஞ்சத்தில் 20  ௦ கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். எல்லாம் உறிஞ்சிய பிறகு மிச்சம் இருக்கும் எலும்புக்கூடுகளை  காப்பாற்ற வந்ததுதான் இந்த அஹிம்சை.

இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் இவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல. போனால் போகட்டும் என போடப்பட்ட பிச்சை. இவர்கள் சாதித்த எல்லா வெற்றிகளும்  வேறு கரங்களால் இவர்களுக்கு கிடைத்தவையே. உதாரணமாக
cripps Mission (1942 ), Cabinet Mission (1946 ) போன்றவை நேச நாடுகளின் தொடர் தொல்லையால் இந்தியாவுக்கு  கிடைத்தவையே. இவற்றை தங்களின் வெற்றியாக காங்கிரஸ் கொண்டாடியது. இன்னும் இந்த கலாச்சாரம் தொடர்கிறது.

காந்தி தன் முயற்சி எல்லாவற்றிலும் அஹிம்சையை கையாண்டார். நம் நாட்டு மக்கள் எல்லோரையும் வன்முறையை கைவிட முயற்சி செய்தார். உண்மையில் காந்தி கடைபிடித்தது அஹிம்சைதானா? இப்படி அவர் உண்மையாகவே செய்திருந்தால் வெள்ளையருக்கு என்னதான் பிரச்சினை? ஒரே ஒரு தடியடி. ஒரு துப்பாக்கி குண்டு. காந்தியின் உயிர் போயிருக்கும். ஏன் அதை செய்யவில்லை?  காரணம் உண்டு. காந்தி உண்ணாவிரதம் இருந்தால் அதைக்கண்டு, அவரைத் தொடர ஆட்கள் இருந்தனர். அவர்க்குப் பரிதாபப்பட ஆட்கள் இருந்தனர். அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் தன் உயிரையும் கொடுக்க ஆட்கள் இருந்தனர். அவர்மேல் லத்தி பட்டால் ஆயிரம் கைகள் உயரத் தயாராயிருந்தது. 

காந்தி காலத்திலும், பதில் வன்முறை உத்திரவாதமாக இருந்தது. ஆனால் அது அஹிம்சை என்ற பெயரில் இருந்தது.  அஹிம்சை என்பது indirect -ஆன வன்முறையே ஆகும். ஒகே. காந்தி ஒரு பிரச்சினையில் வெள்ளையர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்று கொள்வோம். அவரது  கொள்கையை அப்படியே பின்பற்றுபவர்கள் அஹிம்சையை கடைப்பிடித்து, போராட்டத்தில் ஈடுபடுவார்கள். துப்பாக்கி குண்டிற்கு நெஞ்சை காண்பிப்பார்கள்.  அவர்களின் மேலும் துப்பாக்கி குண்டுகள் பாயும்.அவர்கள் செத்துப்போவார்கள். அஹிமசைமுறையால். உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும். கண்டிக்கட்டும். அதனால் என்ன ஆகப்போகிறது? போல்பாட் இருக்கவில்லையா? ஹிட்லர் வாழவில்லையா? உலக நாடுகளின் opinion என்ன பெரிதாக செய்துவிடும்? வட கொரியா-வை என்ன செய்துவிட்டது? ஈரானை என்னசெய்துவிட்டது? ஆக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றால் சாவு உறுதி அல்லவா?
 
வரி கொடுக்காமல் மறுப்பார்கள். கல்லூரிக்கு போக மாட்டார்கள். வேலை செய்ய மாட்டார்கள். ஆனால் துப்பாக்கி குண்டுக்கும் பயப்படமாட்டார்கள். எவனுக்கும் குடும்பம் குட்டி இல்லையா என்ன?

சொந்த நாட்டையே அடிமைப்படுத்தி சர்வாதிகாரம் செய்யும் அதிபர்கள் இந்த உலகத்தில் உண்டு. ஏன் நாம் இந்திரா காந்தியின் ஆட்சியை பார்க்கவில்லையா என்ன ?

அவன் பிரிட்டிஷ் தானே? அவனை எது தடுத்தது? அஹிம்சை அல்ல. அவனது வெற்றி வேட்கை. பிரிட்டிஷ் இரண்டாம் உலகப்போரில் வெல்ல இந்தியர்களும் களத்தில் குதித்தாகவேண்டும். ஆகவே இந்தியர்களுக்கு அதிக உரிமை அளித்தார்கள் அவர்கள்.

காந்தி ஒரு இடத்தில் சொல்கிறார். எந்த நாட்டுக்கும் இராணுவம் தேவையில்லை என்று. அப்படியே இருந்தாலும் அவர்கள் போர்களின் போது, எல்லைப்புறம் நின்று தங்கள் மார்பை திறந்து காட்டவேண்டுமாம்.  சாவை புன்னகையுடன் வரவேற்க வேண்டுமாம். இது மாதிரி கிறுக்குத்தனமான ஒன்றுதான்  அவரது அஹிம்சை கொள்கையும்.  


என்னுடைய இந்த விமர்சனத்திற்கு கண்டனம் எழுப்புபுவர்களை  குறித்து நான் கவலை ஏதும் கொள்ளவில்லை. தூங்குவது போல நடிப்பவர்களை நாம் என்னதான் செய்துவிடமுடியும்?

நீங்கள் எல்லா அரசியல் அறிவியல் புத்தகங்களிலும் காந்தி, அவரது சர்வோதயா, அஹிம்சை மற்றும் சத்யாகிரஹா, ஆகியவற்றைப்பற்றி பார்க்கலாம். பல உலகளாவிய அரசியல் மேதைகள் அவற்றைப் பற்றி எழுதியிருப்பார்கள். ஆனால் அதை அவர்கள் எழுதும்போது புன்னகையுடன்தான் எழுதினார்கள் என்பது, அவற்றை நன்கு கூர்ந்து படித்தால் உங்களுக்கே  புரியும்.


இந்தக் கட்டுரையின் வாயிலாக நான் சொல்ல வருவது மூன்று.
1 .அஹிம்சையால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் அஹிம்சை எதிர்பார்ப்பது எதிரியின் மனசாட்சியை/ கருணையை. மனசாட்சி இல்லாதவர்களிடம் அது எடுபடாது. 
2 .காந்தியின் அஹிம்சை முறை அஹிம்சை முறையே அல்ல.
3 .இந்தியர்கள் பெற்ற விடுதலை அஹிம்சைக்கு கிடைத்த வெற்றியல்ல. 
    
மற்றபடி ஒரு தனிப்பட்ட மனிதனாக நான் காந்தியின் பெரும் ரசிகன்.அவரது கொள்கைகளை  விமர்சனம் செய்யவேண்டியிருக்கிறது. வேறொன்றுமல்ல!!!

Tuesday, January 11, 2011

குதிரை பேரம்


'நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்'

  
 முதல் முறையாக வழக்கமான கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்களிலிருந்து மாறுபட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை கெர்ரி பக்கர் என்ற ஆஸ்திரேலியர் அறிமுகப்படுத்தினார். அவர் கிரிக்கெட்-ஐ commercialise செய்தார் என்று சொல்லுவதே சாலச்சிறந்ததாகும். 
உலகம் சுற்றும் வேகத்தைவிட வேகமாக சுற்றும் மக்களின் ரசனைக்கு ஒருநாள் போட்டிகள் கூட சலிப்பைத்தருவதால் அதை மேலும் சுருக்கி, விதிமுறைகளை சற்று மாற்றியமைத்து 20 -20 என்ற புதிய வடிவத்தை தற்போது கொண்டு வந்துள்ளனர். 

மாங்கு மாங்கென்று அடித்து விளையாடும் இந்த முரட்டு விளையாட்டில் பொறுமைக்கு வேலையே இல்லை. வேகம். வேகம். வேகம். எல்லா பந்துகளும் எல்லைக்கோட்டை தாண்டவேண்டும். நான்குகளும் ஆறுகளும் மட்டுமே இங்கு மதிக்கப்படும். 


உலகிலேயே முட்டாள்கள் அதிகம் உள்ள இந்திய நாட்டில்தான் கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இங்கு  கிரிக்கெட் தொழில் நடத்திவரும் சில முதலாளித்துவ முதலைகளும், சாராய சாம்ராட்டுகளும் (உலக கேவலம்), பணம் கொழுத்தவர்களின் வைப்பாட்டிகளும், பத்திரிகை முதலாளிகளும், முகவெளுப்புக்காக களிம்பு விற்கும் நடிகர்களும் இதைக்கண்டனர். கிரிக்கெட்டை விற்றால் இருக்கும் பணத்தையெல்லாம் இரட்டிப்பாக்கலாமே! அதனால் புதிய வடிவத்திலும் புதுமைகளைப் புகுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக பணம் கொழித்து வருகிறார்கள். 

IPL -4 என்ற பெயரில் அது நடக்கவிருக்கிறது. இதற்கு முன் நடந்த போட்டிகளில் அவர்கள் சம்பாதித்த பணத்திற்கு சத்தியமாக அரசிடம் கணக்கு காட்டவே இல்லை. இனியும் காட்டப்படாது என்று கொள்வோம். இந்த ஒருமாத கால போட்டிகளில், முதலாளிகளின் முதலீடு பலமடங்காகிறது. பங்குகள், வங்கிகள், கந்துவட்டி, அல்லது தொழில், வர்த்தகம், சேவை ஆகிய எவற்றிலும் இல்லாத அதிக லாபம். இல்லையென்றால் ஏன் இந்த அவசரம்?  இதற்கெல்லாம் காரணம் இந்த முட்டாள் ரசிகர்கள்தான்.  

இதில் ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் ஏலத்தில் எடுக்கிறார்கள். கவுதம் கம்பீர் அதிகபட்சமாக 2 .4 மில்லியன் டாலர்களுக்கும் யூசுப் பதான் 2 .2 மில்லியன் டாலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள். இதில் விலைபோகாத விளையாட்டு வீரர்களுக்கு வருத்தம். அதுமல்லாமல் அவர்களை ஏலத்தில் எடுக்கக்கோரி போராட்டங்கள் வேறு. என்னதான் நடக்கிறது இங்கே? இதை மாதிரி ஏலத்தில் எடுப்பது கிட்டத்தட்ட bonded labour -க்கு சமம். அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 23 இதை தடுக்கிறது. ஏறக்குறைய இது மனித விற்பனைதான். பஞ்சாபை சேர்ந்தவன் சென்னைக்காக விளையாடுவான். சென்னையை சேர்ந்தவன் மும்பைக்காக விளையாடுவான். ஏலத்தில்  எடுக்கும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்.  அவ்வளவே! இதனை தேசிய ஒருமைப்பாடு என்று சொன்னால் எவனும் வாயால் சிரிக்கமாட்டான். பணம் பண்ணும் முதலாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட அப்பட்டமான      ஏற்பாடு  இது.  

நான் ஒன்றும் T -20 -க்கு எதிரி இல்லை. அதன் இந்திய வடிவம் தான் ரொம்பவே மனதை இரணமாக்குகிறது. 

இந்த சாராய வியாபாரியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு காலத்தில் பரதநாட்டியம் கூட 'தேவிடியாள் நடனம்' என அழைக்கப்பட்டது. அது இன்று ஒரு புனித கலை. சினிமாவில் நடித்தால் கிடைத்த  பட்டம் மோசமானது. ஆண் என்றால் கல்யாணம் பண்ண பெண் கிடைக்காது. அதுவே பெண் என்றால் 'அழகி' என்ற பெயர்  கிடைக்கும். இது உண்மையாகவே Hippocracy. இன்று அவர்கள் CELEBRITIES. இதுகூட பரவாயில்லை. சினிமா காலப்போக்கில் ஒரு நாகரீக தொழில் ஆகிவிட்டது. (இந்த சினிமாவின் அபிரிமிதமான பரிணாம வளர்ச்சியை நாம் இன்னொருநாள் பேசுவோம்).

சாராயம் விற்றவன் எல்லோரும் மொள்ளமாரி முடிச்சவிக்கி என்றே அழைக்கப்படுவார்கள். இன்று அவன்கள் எல்லாம் பெரும்புள்ளிகள். உருப்பட்டுவிடும்.  
காந்தியின் பொருள் ஒன்றை ஏலத்தில் வாங்கி இந்தியப்பெருமையை இந்த சாராயவியாபாரிதான்  காப்பாற்ற வேண்டி வந்தது. காந்தி ரொம்பவும் அகமகிழ்ந்து போயிருப்பார் போங்கள்.  

பட்டபகலில் கிரிக்கெட் பந்தயம் நடக்கும் மைதானத்தில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து பீர் குடிக்கிறான் அந்த சாராயம் காய்ச்சுபவன். யார் என்ன சொன்னார்கள்? யார் அவனை கைது செய்கிறார்கள்? பிரபல்யமாகும் ஆசையில் அவன் தயாரிக்கும் காலண்டருக்கு முற்றும் துறந்து போஸ் கொடுக்கிறார்கள் இளம்பெண்கள். இது சுரண்டல் இல்லையா? இளம்பெண்களின் அறியாமையை காசு பண்ணும் இந்தமாதிரி கிரிமினல்களை நடுரோட்டில் ஓடவிட்டு அடித்தாலும் தகும். ஆனால்  அவனை யார் என்ன செய்துவிட்டார்கள்? 

போங்கடா டே! கையில நாலு காசு இருந்தா இந்த நாட்டுல என்ன வேண்ணாலும்   போலிருக்குடா சாமி. நான் மட்டும் புலம்பவேண்டியதுதான். 
மக்களே! நான் எப்போதும் hippocratic -ஆக எழுதுகிறேன் என்ற விமர்சனம் வருகிறது. நல்லதை விடுத்து கெட்டதையே எழுதுகிறேன் என ஒரு கருத்து இருக்கிறது.  என்ன செய்வது? நாட்டில் நடப்பதை எண்ணி கொதிக்கும் என் இரத்தத்தின் துளிகளே இங்கும் தெறித்துச்சிதறி வீழ்கிறது. அதன் தீற்றல் தான் இவை.  








Monday, January 10, 2011

ஓரான்(*)......ஓராண்(**)............



 மடி சாய்ந்தபோது குளிர்ந்திருந்தது
வெடித்த உதடுகளில் இட்ட வறண்ட முத்தம்
பனித்துகள்கள் படர்ந்திருந்த தரையில்
இறந்துகிடந்த அந்த பிணத்தருகில் குறுகிப் படுத்தான்


ஆளப்படுவதற்கு ஏங்கும் அவன் உடல்
தன் துணையை இழந்தது குறித்து
கவலை எதுவும் கொள்ளவில்லை


நிர்வாண வானம் பிரதிபலித்த நதிகளின்
நீரோட்டத்தில் கரை ஒதுங்கிய சருகுகள் 


வறளக் காத்திருக்கும் அவனின் உடல் துளைகள்.


* ஓரான்- Homosexual 
**ஓராண்- A Single Man

Thursday, January 6, 2011

தெலுங்கானா

 தெலுங்கானா கோரிக்கையின் வயது ஐம்பதுக்கும் மேலே. தெலுங்கானா  பகுதி புவியியல் ரீதியாக சரியாக அமையவில்லை. அது மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றால் கிடைக்கும் மழை அதற்கு கிடைப்பதில்லை. வடகிழக்கு பருவக்காற்றால் கடற்கரையோரம் மட்டுமே மழை பெறுகிறது.

மொழிவாரி மாநில சட்டம் இயற்றப்பட்டு மாநிலங்கள் பிரித்ததிலிருந்து தெலுங்கானா கோரிக்கை உள்ளது. தெலுங்கானா மக்கள் மற்ற ஆந்திர மக்களைக்காட்டிலும் வட்டார வழக்கு மொழியிலும் மக்கள் தொகையிலும் சற்று வேறுபட்டவர்கள். கோண்டு, குவி போன்ற பழங்குடி மக்கள் அங்கு நிறைந்து வாழ்கிறார்கள்.

தெலுங்கானா மக்கள் தாம் அரசால் ஒதுக்கப்பட்டதாகவே உணர்கிறார்கள். அரசின் நலத்திட்டங்களால் தெற்கு ஆந்திர மக்கள் அதிக பலன் அடைவதாகவும் தமக்கு சேரும் நலத்திட்டங்கள் சேராமல் போவதாகவும் அரசை குறை கூறுகிறார்கள். அவர்கள் அனுப்பும் MLA -க்கள் வெறும் சட்டசபையைத்தான் நிறைக்கிறார்கள். அதிகாரமும் அங்கீகாரமும் அவர்கள் பகுதி மக்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுவதாக அம்மக்கள் கருதுகிறார்கள்.

இதனால் அம்மக்கள் தமக்கென அதிகாரமும் அங்கீகாரமும் வேண்டும் எனக் கோருவதி இயற்கை  அல்லவா? .

மதராஸ் மாநிலத்திலிருந்து ஆந்திரத்தை பிரித்ததே ஒரு பெரும் கதை. பொட்டி ஸ்ரீராமுலு தனி மாநில கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்தே உயிர் நீத்தார்.

சென்ற வருடம் ராஷ்ட்ரிய தெலுங்கானா சமிதி-யை சேர்ந்த திரு. சந்திரசேகர் ராவ் தெலுங்கானா கோரிக்கைக்காக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்தார். பெரும் கலவரங்களுக்கு பிறகு அரசு நீதியரசர் பி என் ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் தெலுங்கானா ஆணையத்தை அமைத்தது. தெலுங்கானா மாநிலம் அமையக்கூடாது என எதிர் புரட்சிகளும் ஆரம்பித்தன.

கலந்த 31 டிசம்பர் 2010 -இல் தெலுங்கானா ஆணையம் தமது அறிக்கையை அரசுக்கு அளித்தது. கூடிய விரைவில் அவ்வறிக்கை மக்களுக்கு வெளியிடப்படும். ராணுவமும் துணை ராணுவமும் கலவரத்தை எதிர்பார்த்து ஆந்திரத்தில் குவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 3 -இன் படி, மாநிலங்களின் எல்லைகளை, பெயர்களை மாற்றவும் மாநிலங்களை பிரிக்கவும் சேர்க்கவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. சாதாரண majority -இல் இந்த எளிமையான காரியத்தை செய்துவிட முடியும். ஆனால் இவ்வாறான கோரிக்கைகளை தொடர்ந்து கண்டுகொண்டால் தனி மாநில கோரிக்கைகள் கணக்கின்றி பெருகும்.

ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட தனிமாநில கோரிக்கைகள் உள்ளது. தனி மாநிலங்கள் அமைப்பத்ல் தவறொன்றும் இல்லை. ஏனெனில், சிறு சிறு பகுதிகளில் நிர்வாகத்தை சிறப்புற நடத்த இயலும். 25 -கோடி மக்கள் கொண்ட அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் உள்ளன . ஆனால் நூறு கோடி மக்கள் உள்ள இந்தியாவில் வெறும் 28 மாநிலங்களே உள்ளன.

தனிமாநில கோரிக்கைகளை கூர்ந்து கவனிப்பது  அவசியமாகிறது. அதிகார வெறியும் பதவி  ஆசையும் கொண்ட அரசியல்வாதிகளின் கைகளுக்கு  எந்த ஒரு மாநிலமும் சென்றுவிடக்கூடாது.

என்னைப்பொறுத்தவரையில் தேச எல்லைகளே தேவை இல்லை என்றுதான்  கூறுவேன். உலகைத்துண்டாடுவதிலேயே எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நிர்வாக நன்மைக்காக மாநிலங்களைப் பிரிப்பதில் தவறொன்றுமில்லை.

Wednesday, January 5, 2011

கீழ்வெண்மணி


ஐம்பது  பேர் வந்தார்கள் 
எல்லோர் கைகளிலும் பாசக்கயிறு 
எம் தெருவில் உள்ளோர் எல்லோரையும்
அடித்து சவட்டி துவைத்து போட்டார்கள்  

அடித்தவர்களின்  சாதிப்பெயர்களை 
அறிந்திருந்தான் அந்த பெரிய மனிதன் 
பெயரை விடுத்து சாதி விளித்து 
எங்கள் கைகள் பிணைக்க சொன்னான் 

குடிலோன்றில் அடைக்கப்பட்டோம்
என்னுடன் இன்னும் நாற்பது பேர் 
உள்ளிட்டு இறுகப் பூட்டினார்கள் 
என்னுடன் என் குடும்பமும் இருந்தது

தீயின் நாவுகள் சுட்டபோதுதான் 
நரகச் சுவையை அறிந்துகொண்டேன் 
தங்கையின் கூந்தல் பற்றியபோது 
என் தாயின் கூந்தலும் தழலானது.

நாற்பது தேகங்கள் நாற்பது திரிகள் 
நாற்பது தீபங்கள் பொசுங்கும் வாடை
எந்த கடவுளும் வரவே இல்லை 
வெளியில் வெறிச்சிரிப்பு ஓசை கேட்டேன் 

மூன்றாம் தோலை தீ சுடும்போது 
இனம் புரியாத குளிர்ச்சியை உணர்ந்தேன் 
கடந்த காதல் கடந்த காமம் 
கிட்டாத திருமணம் பெறாத பிள்ளை 

எல்லாம் வந்தது என் எண்ணத்தில் 
செயற்கையாய் பிரியும் உயிர்கள் எல்லாம் 
உணரும் வலியை நானும் உணர்ந்தேன் 
மீண்டும் பிறக்க நான் என்ன கிறுக்கா? 
  

Tuesday, January 4, 2011

தீ! தீ! தீ!




சிறு சிறு பொறிகள் சென்றடைந்த செவிகள் 
செவிகள் கடந்து செப்பிய வாய்கள்
வடிவம் பெருத்து வல்லினம் கோர்த்து 
பெரிதாய்ப் போன சிறு சிறு பொறிகள். 


சில கற்பனைகள் சேர்த்த பொறிகள் 
கோர்த்த பெரும் அரூப நெருப்பு 
சினங்கள் கலந்து பயங்கள் கலந்து 
கொழுந்து விட்டெரியும் கோர நெருப்பு 


சேரும் இடம் சேர்ந்த பின்னர் 
சில மடங்காகும் சிவப்புத் தீ 
பொங்கும் ஆழி வீறிடும் புயல் 
கொட்ட இடம் தேடும்  கருங்கொண்டல்  


கொட்டிய இடம் வெற்றுப் பாலை 
வெள்ளம் இல்லை அக்கினிச் சாரல்
 செல்லும் வழியை தீய்த்து வைக்கும் 
குழம்பு ஆறு குருதிப்பெருக்கு


இரட்டிப்பான தகிக்கும் காந்தல்
கருகும் சிறகுகள் பொசுங்கும் வாடை 
வழியெங்கும் பிணங்கள் மலரும் சாலை  
வதந்தி வதந்தி வதந்தி வதந்தி 

Sunday, January 2, 2011

ஹிந்தி ஒரு தேசிய மொழியா?

ஒரு இலத்தீன் அமெரிக்க நாவலின் கதை. அந்த நாடு ஒரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கித் தவித்தது. அந்த சர்வாதிகாரியின் அமைச்சரவையின் மொழிவளத்துறை அமைச்சரிடம்  சர்வாதிகாரி ஒரு கட்டளை இடுகிறான். நமது ஆட்சியை எதிர்த்து இந்த நாட்டு மக்கள் எதுவுமே பேசக்கூடாது. அதற்க்கேற்றவாறு இந்த மொழியை மாற்றி வடிவமைக்க வேண்டும் என்று. அந்த அமைச்சர், அந்த நாட்டு மொழியில் உள்ள எதிர்ப்பு வார்த்தைகளை எல்லாம் நீக்கியும் அவைகளைப்  பேசினால் சட்டவிரோதம் என்றும் ஆணையிடுகிறார். மக்கள் சர்வாதிகாரத்திற்கு பயந்து தங்கள் பேச்சை குறைத்துவிடுகின்றனர். கடைசியில் அந்த மொழியில் வெறும் பத்து வார்த்தைகள் மட்டுமே மிஞ்சுகின்றன. 

எங்கெங்கு போயினும் ஹிந்தி. இந்தியா என  இந்துக்கள் வாழ்வதால்  அவ்வாறு பெயரிடப்பட்டதா?  ஹிந்தி மொழி அதிகம் பேசப்படுவதால் அவ்வாறு பெயரிடப்பட்டதா? ஹிந்தி சமஸ்கிருதத்திலிருந்து வழி வந்த ஒரு மொழி. சமஸ்கிருதம் பல குட்டிகளைப்  போட்டுள்ளது. பெங்காலி, மராத்தி, குஜராத்தி, போஜ்பூரி, காஷ்மீரி போன்ற பல மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை. ஆனால் சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கில் இல்லை. தடந்தெரியாமல்   அழிந்து ஒழிந்துவிட்டது. இன்றும் கோவில்களில் தேவபாஷை என்ற பேரில் அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் அதுவும் தேய்த்து அழிக்கப்பட்டது. கோயில்களில் தமிழ் ஒலிக்கக்கூடாது எனவும் அது 'நீச பாஷை'  என ஒருவன் கூறினான். அவன் இப்போது கொலை வழக்குக்காக கோர்ட் படி ஏறுகிறான்.  


 தமிழ், வந்தேறிகள் வந்து புகுவதற்கு முன்னாலேயே இலக்கியம் படைத்திருந்தது. இன்னும் சீரிளமையோடு பேசப்பட்டு வருகிறது. 

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் வரலாற்று ரீதியான பகைமை இருக்கிறது. சமஸ்கிருதம் பேசிய வந்தேறிகள் தமிழ் பேசிய குடியை கொன்றொழித்தார்கள். சாதி என்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்தி தமிழினத்தை அடிமைப்படுத்தினார்கள். கடவுள் பயத்தை ஏற்படுத்தி வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தினார்கள். இதெல்லாம் வரலாறு. இந்தியா முழுமைக்கும் வாழ்ந்த  மூத்த குடியை தென்புறத்தே  தள்ளிவிட்டு வடக்கு பிராந்தியம்  முழுமையையும் ஆண்டார்கள். மன்னர்களை அடிமைப்படுத்தி, அவர்களை கடவுள் பயத்தில் தள்ளி, புறக்கடை ஆட்சி நடத்தினார்கள். மனு தர்மம் என்று ஒன்றை எழுதி, அந்த தர்மம் அவர்களுக்கு சாதகமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். வருணாசிரமம் எக்காலத்திலும் உடைந்து விடாமல் பார்த்துக்கொண்டனர். சமஸ்கிருதம் பேசிய ஒவ்வொரு நாவும் தமிழுக்கும் தமிழ்க்குடிக்கும் எதிராக விஷம் தெளிப்பதையே கருத்தாகக் கொண்டிருந்தது.  அந்த மொழி ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குமட்டுமே சொந்தம் எனப்பட்டது. மற்றோர் அதைப் பேச தடை விதிக்கப்பட்டது. (குப்தர்கள் காலம்). நான்காயிரம்  ஆண்டுகளாக  இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், எல்லோரும் சமம் என் சட்டத்தில் எழுதி விட்டு எல்லா அதிகாரத்தையும் அந்த மொழி பேசிய கும்பலே பிடித்துக்கொண்டது. முக்கியமான துறைகளில் அவாளை தலைமையாக நியமித்துவிட்டு மற்ற அலுவலர்களை நியமிக்க அவாளுக்கே அதிகாரம் வழங்கப்பட்டது. (உம்-AG 's Office , Banks ). 

ஆகவே சமஸ்கிருதத்தில்  பேசப்பட்ட, எழுதப்பட்ட, பகிர்ந்துகொள்ளப்பட்ட எல்லா விஷயங்களுமே தமிழ்க்குடிக்கு எதிரானது என்பதால் அந்த மொழியே ஒரு விஷமாகத்தான்  தமிழ்க்குடியால் பார்க்கப்படும்.  இது இயற்கைதான். அந்த மொழி மட்டுமல்லாமல் அது வழி தோன்றிய அனைத்து மொழிகளையுமே விஷக்களையின் வித்துக்களாகத்தான் பார்க்கமுடியும். 

அரசின் முயற்சி. 

இந்தியா அரசின் அரசியலமைப்புச்சட்டம், எல்லா  மக்களையும் கலந்து எழுதப்பட்டது போன்ற ஒரு பிரமையில் நீங்கள் எல்லாம் இருப்பது தவறு. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சென்ற, அரசியல் அமைப்பு சட்ட சபையில் அங்கம் வகித்த பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் அந்தந்த சமஸ்தான ராஜாக்களின் அல்லக்கைகள் தான். மக்கள் அனுப்பிவைத்த பிரதிநிதிகளுக்கு அரசியல் சட்டம் என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பில்லை.  இப்படிப்பட்டோர் எல்லாம் ஒன்று கூடி சட்டம் எழுதி விட்டு அதை படிக்கும் போது 'We the people of India ' என்று படித்தார்கள். 
இந்த அரசியலமைப்புச்சட்டம் ஹிந்திக்கே வக்காலத்து வாங்கும். அப்படித்தான் வாங்கியது. வாங்குகிறது. இந்த சட்டத்தின் ஷரத்து 29 -இன்படி  ஒவ்வொரு மொழியும், அரசால் அங்கீகரிக்கப்படும். சிறுபான்மையினர் மட்டுமல்லாது எந்த பகுதியினரும், இனத்தவரும்  தங்கள் மொழியை, கலாச்சாரத்தை  பாதுகாத்துக்கொள்ள உரிமை பெறுகின்றனர்.   

இப்படிப்பட்ட ஷரத்துகள் இருந்தாலும், மத்திய அரசு ஹிந்தியை தமிழகத்தில் கட்டாயமாக்க முயற்சித்தது. இராஜாஜி முதல்வராக இருக்கும்போது இது நடந்தது.  பெரும் போராட்டத்துக்குப்பின் அது வாபஸ் பெறப்பட்டது. எத்தனையோ உயிர்கள் மாண்டன. தாளமுத்து, நடராசன் போன்றோர் தீக்குளித்தது இப்போதுதான். மொழிப்போரில் தீக்குளித்தவர்கள் எல்லோரும் தமிழரின் வரலாறு அறிந்தவர்கள் அல்லர். அவர்களுக்கு சமஸ்கிருதத்தின், ஹிந்தியின், வருணாசிரமத்தின் நுண்ணிய அரசியல் புரிந்திருக்கும் என நான் எதிபார்க்கவில்லை. சாராய போதையில் கூட சிலர் தீக்குளித்து மாண்டிருப்பார்கள். இது என்ன எங்கும் நடக்காததா என்ன? இந்த ஹிந்தி எதிர்ப்பை  சாதகமாக்கி பதவிக்கு வந்தவர்தான் அண்ணாதுரை. 


 ராஜகோபாலாச்சாரியார் ஒரு பிராமணர். குலக்கல்வித்திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். அதாவது அந்தந்த குலத்தைச் சார்ந்தவன் அந்தந்த குலத் தொழிலே செய்ய வேண்டும். அதையே படிக்க வேண்டும். புரோகிதம் செய்தவன் புரோகிதம் செய்யவேண்டும். நாவிதன் முடிவெட்டவேண்டும். பறையன் பிணம் புதைக்கவேண்டும் . அருந்ததியர்  மாடறுக்க வேண்டும். என்ன ஒரு திமிர்? 

இந்த விஷம் தான் இன்னும் தொடர்கிறது. இந்த விஷ வித்து, விஷ மொழியை தமிழ்நாட்டுக்குள் புகுத்தப்பார்த்தது.அது நடக்கவில்லை. 

எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் புலம்புவது இதுதான். வெளிமாநிலங்களுக்குப்போனால் நம்மால் ஹிந்தி பேச முடிவதில்லை. எல்லா மாநில மக்களும் பேசுகிறார்கள். நம்மால் முடிவதில்லை என தற்குறித்தனமாக பேசுவார்கள். அவர்கள் அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவார்கள். அவர்களால்தான் தமிழ் மக்களால் ஹிந்தி பேச முடியவில்லை என்று.  


 கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற பிற திராவிட மொழிகளில் உள்ள சம்ஸ்கிருத அசுத்தத்தின் நாற்றமே என்னால் சகிக்கமுடியவில்லை. ஹிந்தியை எப்படி உள்ளே அனுமதிப்பது?  அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். 

"அடங்கொக்காமக்கா! முதல்ல தமிழ்நாட்டு  வரலாற படிங்கடா.  
வருணாசிரம வரலாற படிங்கடா. ஒரு மொழி எப்படி விஷமா மாறும்னு தெரிஞ்சிக்கங்கடா. தமிழ்  மொழியோட அருமை பெருமைகளை முதல்ல தெரிஞ்சிக்கிங்கடா! அதை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு அப்பறமா வேணும்னா ஹிந்தி படிச்சிக்கிங்கடா. வேணும்னா அதுக்கு முன்னாடி கருணாநிதியையும் அண்ணாதுரையையும் கெட்ட வார்த்தையில திட்டிட்டுப் போங்கடா"  
என்பதுதான்.
இப்போது தமிழ்மொழி அழியும் நிலையில் இருந்து மெல்ல மீள ஆரம்பித்திருப்பதாகவே தோன்றுகிறது.