Thursday, February 3, 2011

திருவாசகம்- நீத்தல் விண்ணப்பம்- ஐந்து

 கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது 


பாடல்: 11


மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன்மணி மலர்த்தாள் 
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே 
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
நீறு பட்டே ஒளிகாட்டும் பொன்மேனி நெடுந்தகையே 


விளக்கம்:
 வினைகளை உடைய என் மனதில் ஊறும் தேனே! உத்தரகோசமங்கைக்கரசே! திருநீறு துலங்கும் ஒளியுடைய பொன்மேனியை உடையவனே! நெடுந்தகையே! 
என் மனவிருப்பத்திற்கு மாறுபட்டு என் ஐம்புலன்கள் என்னை வஞ்சிக்க, உன் மலர்த்தாள்களை வந்து சேராமல் வேறுபட்டு நிற்கும் என்னை விட்டிடுதி!   

பாடல்: 12 


நெடுந்தொகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு 
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ 
அடும்தகை வேல்வல்ல உத்தரகோசமங்கைக்கரசே
கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே 


விளக்கம்: 
உன்னை எதிர்ப்போர் அஞ்சி நடுங்கவைக்க வல்ல வேலை (திரிசூலம்) உடைய உத்தரகோசமங்கைக்கரசே! கெட்ட குணமுடைய நான் கூட அருந்தத்தக்க தெளிந்த  அமுதக்கடலாக இருப்பவனே! சீரிய குணத்தையுடைய நீ என்னை ஆட்கொள்ள வந்தபோதும் ஐம்புலன்களின்பால் மனத்தை செலுத்தி மாறுபடும் என்னை விட்டிடுதி!  


பாடல்: 13


கடலினுள் நாய் நக்கியாங்கு உன் கருணைக்கடலின்
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் 
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
மடலின் மட்டே மணியே அமுதே என் மதுவெள்ளமே 


விளக்கம்: 
உன் அடியார்களை என்றும் கைவிடாத அரூபமானவனே! (உடல் இலமே!) உத்தரகோசமங்கைக்கரசே! பூவின் மடலில் ஊறும் தேனே! என் மாணிக்கமே! அமுதமே! என் மது வெள்ளமே! உன் கருணைக் கடல் போன்றது! அதனை ஒரு நாயால்  எவ்வளவுதான் நக்கிக் குடிக்க முடியும்? அவ்வாறு எவ்வளவுதான் பெற்று உவந்தாலும் தீராத உன் கருணையை விடுவதை விரும்பாத என்னை விட்டிடுதி!   

 பாடல்: 14


வெள்ளத்துள் நாவற்றியாங்கு அருள் பெற்றுத்  துன்பத்து இன்றும் 
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் 
உள்ளத்தில் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
கல்லாதது உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே  


விளக்கம்: 


பெரும் வெள்ளத்தில் இருந்தாலும் நா வரள்வதைப் போல உன் அருள்  பெற்ற பிறகும் துன்பத்தோடு வாழும் என்னை விட்டிடுதி! 
உன்னை வணங்கும் அடியார்களின் மனத்தில் இருப்பவனே! உத்தரகோசமங்கைக்கரசே! ஒன்றும் அறியாதவனாகிய எனக்கு இதுவரை நான் கண்டிராத மகிழ்வைத் தருவாயாக!

நாவற்றி= என்பது நாவு வரள்வதையும் 'நாவற்றி' என்னும் பூச்சியையும் குறிப்பிடுவதாக இருவேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. 
நாவற்றிப் பூச்சிகள், நீரில் மேற்பரப்பில் வாழும். அவை தண்ணீரின் மேல் நடக்கவல்லது.  பெருவெள்ளமே ஆனாலும் அதில் மூழ்கி திளைக்காமல் அதன் மேல் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் நாவற்றி பூச்சியை தனக்கு உவமையாக மாணிக்கவாசகர் கருதினார் எனவும் கொள்ளலாம். 

No comments:

Post a Comment