Sunday, January 16, 2011

அம்பேத்கர் என்ற பெயரின் பயன்பாடுகள்



 அம்பேத்கர்-ஐப் பற்றி நான் பெரிதாக ஏதும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நலிந்த மக்களின் ரட்சகராக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்ட வரைவுகளை முன்னிறுத்தி பெரும் ஆண்டைகளிடம் போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்தவர். அவையெல்லாம் சரிவர கிடைக்கின்றனவா என்பது மற்றொரு கேள்வி என்றாலும், அவை கிடைக்க வழிவகை செய்ததை நாம் மறக்க முடியாது. 

ஆனால் அது மட்டுமே அம்பேத்கர்-இன் முகம் கிடையாது. அம்பேத்கர் ஒரு intellectual. அவரது அறிவாற்றலால் வெள்ளையர்களின் மரியாதையை பெற்றவர். ஒரு பிரிட்டிஷ் பெண்மணி அவருக்கு எழுதிய காதல் கடிதங்கள் கொஞ்ச காலத்திற்கு முன் வெளியிடப்பட்டபோது நான் சற்று வியந்தேன். 

சாதி என்ற கட்டமைப்பு இந்தியாவில் இன்னும் இருப்பதனால்தான், இன்னும் அம்பேத்கர் ஒரு சாதி அடையாளமாகவே பார்க்கப்படுகிறார். அவரின் மற்ற அடையாளங்கள் மறைக்கப்பட்டு சாதியின் வண்ணம் மட்டுமே பூசப்படுவது ஒரு பெரிய சோகம். 

அவர்மேல் பல விமர்சனங்கள் அந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. அவருக்கு போட்டியாக பலரை அரசியலில் வளர்க்க முயற்சித்தது காங்கிரஸ். 

Constituent Assembly -இல் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் காந்தி. தலித்துகளுக்கு சமஉரிமை அளிக்கப்போவதாக  வெளிவரும் தகவல்களுக்கு உங்களின் கருத்து என்ன என பத்திரிக்கையாளர்கள் வினவியபோது 'எனக்கு தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது! என் கையில் ஏதும் இல்லை' எனப் புலம்பினார் காந்தி. 

அம்பேத்கர் என்ற பெயரின் பயன்பாடுகள் 

தலித் அரசியலில்  அம்பேத்கரின் பெயர் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதாக எனக்குப்படுகிறது. மாயாவதி, திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும் பலர் அவரது பெயரை கூறிக்கொண்டு அரசியல் புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவை எல்லாம் தேர்தலில் கிடைக்கும் சீட்டுக்கள், அதனால் கிடைக்கும் வோட்டுக்கள். இவைகளே. இதற்கு காரணம் என்னவென்றால், மற்றவர்களின் பார்வை போல இவர்களின் பார்வையும் மிக குறுகலானது. அம்பேத்கரை இவர்களும் சாதியின் அடையாளமாகத்தான் பார்க்கிறார்கள். கொடுமை!!! அவரை சாதியின் அடையாளமாகப் பார்ப்பதின் விளைவுகள் பல. 

1 .தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு செய்ய அவரின் சிலைக்கு அவமானம் செய்யப்படுகிறது. இவன் பதிலுக்கு மற்ற தலைவரின் சிலையை அவமானப்படுத்துகிறான். அல்லது இவன் முதலில் செய்கிறான். அவன் பதிலுக்கு அவமதிக்கிறான்.  

2 .பல கட்சிகளின் தோற்றம். இவை ஒரு குழுவுக்குள் வேற்றுமை வளர்க்கத்தான் செய்யுமோ தவிர ஒற்றுமையை வளர்க்காது. 

3 . அம்பேத்கர் சட்டக்கல்லூரி, சென்னை என்று சுவரொட்டியில் போடாமல் வெறும்  அரசினர் சட்டக்கல்லூரி என்று போட்டனர். ஒரே அடிதடி தகராறு. அம்பேத்கர்-ஐ வெறும் சாதி அடையாளமாகப்பார்த்து, அவரின் பெயரை சுவரொட்டியில் தவிர்த்தால் அது ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு  செய்யும் அவமானம் என்று கருதிய அறியாமையை என்ன செய்வது ?  அதனை வன்முறை கொண்டு பழிவாங்குவதால் தீர்க்கமுடியும் என்று கருதி ஆடிய கொலைவெறி தாண்டவத்தை எப்படி கண்டிப்பது? 
இப்படிப்பட்ட பிரச்சினைகளும் அவரின் பெயரை பயன்படுத்துவதால் கிளம்புகிறது. 

தலித் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவில் உள்ள சாதிகளை அழித்துவிட்டாலும் இந்திய  மக்களின் மனதில் உள்ள சாதியை அழித்துவிட  முடியாது. அம்பேத்கர்-ஐப் பற்றி எனக்கு தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு. அவர் சாதிகளை  அழிக்க முற்பட்டார். (Annihilation of Caste ). இது social justice அல்ல. தன் கடைசி காலத்தில் பௌத்தத்திற்கு மாறினார். அவர் உள்ளிருந்தே போராடியிருந்திருக்கவேண்டும். இந்த விமர்சனங்களையும் மீறி அவர்மேல் ஒரு மரியாதையும் உண்டு. அது அவர் கற்ற கல்வியால் எனக்கு ஏற்படுவது. யாவருக்கும் நியாயமாக தோன்ற வேண்டியது. 
   
வேறு எந்த சாதிக்கும் தலைவராகக் கருதப்படும் யாரும் intellectual கிடையாது. அவர்கள் ஒரு Philanthropist -ஆக வேண்டுமானால் இருக்கலாம். 

ஆகவே அம்பேத்கர்-ஐ வெறும் சாதித்தலைவராக சுருக்கிவிடாதீர்கள்! இது பற்றி இன்னும் நிறைய பேசுவோம். சமயம் வரும்!


No comments:

Post a Comment