Sunday, January 30, 2011

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்-ஒன்று


கட்டளைக்கலித்துறையில் மாணிக்கவாசகர் அருளியது


பாடல்: 1  


கடையவனேனைக்(*)  கருணையினால் கலந்தாண்டுகொண்ட 
விடையவனே  விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோச  மங்கைக்கரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே   

விளக்கம்
கோப வெறி கொண்ட வேங்கையின் (அதாவது புலியின்) தோலை தரித்தவனே! உத்தரகோசமங்கையில் கோவில் கொண்டு வாழ்பவனே! (உத்தரகோசமங்கை  ஒரு சிறந்த சிவத்தலம்) சடை முடியோனே! நான் தளர்ந்துவிட்டேன்! என்னைத் தாங்கிக்கொள்வாயாக! 
எதற்கும் பயனில்லாத, கடையவன் ஆகிய என் மேல் கருணையை பொழிந்து, என்னைக் கலந்தாண்டு கொண்டவனே! எருதினை வாகனமாகக் கொண்டவனே ! 
என்னை விட்டிடுதி! அதாவது கைவிட்டுவிடாதே!  


விடை= எருது 

* கடையவன் என்ற பதப்பிரயோகம் பல அர்த்தங்களை கொடுக்கிறது. சாதிக்கட்டமைப்பின் கடைசி படியினை கடையோன், புலையன் என பல பதங்களின் மூலம் கூறுவர். மாணிக்கவாசகர் காலத்திலேயே  (AD .1200 ) சாதிக்கட்டமைப்பு இறுகி இருந்ததை இந்த பதப்பயன்பாடு காட்டுகிறது.     

பாடல்: 2

கொள்ளேர்  பிளவகலாத் தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் 
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய் விழுதொழும்பின் 
உள்ளேன் புறமல்லேன் உத்தரகோச மங்கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே  

       
விளக்கம்:

உத்தரகோச மங்கைக்கு அரசே! நான் உன் அடியார்கள்  கூட்டத்தில்தான் இன்னும் இருக்கிறேன். (தொழும்பர் என்றால் அடியார்  எனப்பொருள்படும்). அதற்கு புறம் சென்றுவிடவில்லை. ஆனாலும் நான் தீமையை இன்னும் புறந்தள்ளாதவன்  (கள்ளேன்). 

ஒரு மணி கொள்ளைக்கூட (கொள்- குதிரைக்கு இடும் தீவனம்) உட்புகவிடாத   இறுக்கமான மார்பகங்களைக்கொண்ட மங்கையரின் செவ்விதழ்களை நான் இன்னும் விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன். அதாவது நான் இன்னும் சிற்றின்பத்தை கைவிடவில்லை.

 என்னை விட்டிடுதி! 

 நான் உன்னை விட்டு நீங்குவதை அறிந்தும் என்னைக் கண்டுகொண்டு ஆட்கொண்டுவிட்டாயே! அதற்கு காரணம் என்னவோ?!     



இன்னாத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகினு? அத்தால ஒரு சேஞ்சுக்கு பக்தி இலக்கியம் எழுதலாம். 
ஒரு ரெண்டு நாளைக்கு திருவாசகம் பதவுரை பாப்போம். மாணிக்கவாசகரோட புலம்பல்கள் ரொம்ப பிரசித்தம்.  
அப்பறமா அரசியல் பத்தி பாப்போம். இன்னா? 


No comments:

Post a Comment