Tuesday, January 11, 2011

குதிரை பேரம்


'நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்'

  
 முதல் முறையாக வழக்கமான கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்களிலிருந்து மாறுபட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை கெர்ரி பக்கர் என்ற ஆஸ்திரேலியர் அறிமுகப்படுத்தினார். அவர் கிரிக்கெட்-ஐ commercialise செய்தார் என்று சொல்லுவதே சாலச்சிறந்ததாகும். 
உலகம் சுற்றும் வேகத்தைவிட வேகமாக சுற்றும் மக்களின் ரசனைக்கு ஒருநாள் போட்டிகள் கூட சலிப்பைத்தருவதால் அதை மேலும் சுருக்கி, விதிமுறைகளை சற்று மாற்றியமைத்து 20 -20 என்ற புதிய வடிவத்தை தற்போது கொண்டு வந்துள்ளனர். 

மாங்கு மாங்கென்று அடித்து விளையாடும் இந்த முரட்டு விளையாட்டில் பொறுமைக்கு வேலையே இல்லை. வேகம். வேகம். வேகம். எல்லா பந்துகளும் எல்லைக்கோட்டை தாண்டவேண்டும். நான்குகளும் ஆறுகளும் மட்டுமே இங்கு மதிக்கப்படும். 


உலகிலேயே முட்டாள்கள் அதிகம் உள்ள இந்திய நாட்டில்தான் கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இங்கு  கிரிக்கெட் தொழில் நடத்திவரும் சில முதலாளித்துவ முதலைகளும், சாராய சாம்ராட்டுகளும் (உலக கேவலம்), பணம் கொழுத்தவர்களின் வைப்பாட்டிகளும், பத்திரிகை முதலாளிகளும், முகவெளுப்புக்காக களிம்பு விற்கும் நடிகர்களும் இதைக்கண்டனர். கிரிக்கெட்டை விற்றால் இருக்கும் பணத்தையெல்லாம் இரட்டிப்பாக்கலாமே! அதனால் புதிய வடிவத்திலும் புதுமைகளைப் புகுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக பணம் கொழித்து வருகிறார்கள். 

IPL -4 என்ற பெயரில் அது நடக்கவிருக்கிறது. இதற்கு முன் நடந்த போட்டிகளில் அவர்கள் சம்பாதித்த பணத்திற்கு சத்தியமாக அரசிடம் கணக்கு காட்டவே இல்லை. இனியும் காட்டப்படாது என்று கொள்வோம். இந்த ஒருமாத கால போட்டிகளில், முதலாளிகளின் முதலீடு பலமடங்காகிறது. பங்குகள், வங்கிகள், கந்துவட்டி, அல்லது தொழில், வர்த்தகம், சேவை ஆகிய எவற்றிலும் இல்லாத அதிக லாபம். இல்லையென்றால் ஏன் இந்த அவசரம்?  இதற்கெல்லாம் காரணம் இந்த முட்டாள் ரசிகர்கள்தான்.  

இதில் ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் ஏலத்தில் எடுக்கிறார்கள். கவுதம் கம்பீர் அதிகபட்சமாக 2 .4 மில்லியன் டாலர்களுக்கும் யூசுப் பதான் 2 .2 மில்லியன் டாலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள். இதில் விலைபோகாத விளையாட்டு வீரர்களுக்கு வருத்தம். அதுமல்லாமல் அவர்களை ஏலத்தில் எடுக்கக்கோரி போராட்டங்கள் வேறு. என்னதான் நடக்கிறது இங்கே? இதை மாதிரி ஏலத்தில் எடுப்பது கிட்டத்தட்ட bonded labour -க்கு சமம். அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 23 இதை தடுக்கிறது. ஏறக்குறைய இது மனித விற்பனைதான். பஞ்சாபை சேர்ந்தவன் சென்னைக்காக விளையாடுவான். சென்னையை சேர்ந்தவன் மும்பைக்காக விளையாடுவான். ஏலத்தில்  எடுக்கும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்.  அவ்வளவே! இதனை தேசிய ஒருமைப்பாடு என்று சொன்னால் எவனும் வாயால் சிரிக்கமாட்டான். பணம் பண்ணும் முதலாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட அப்பட்டமான      ஏற்பாடு  இது.  

நான் ஒன்றும் T -20 -க்கு எதிரி இல்லை. அதன் இந்திய வடிவம் தான் ரொம்பவே மனதை இரணமாக்குகிறது. 

இந்த சாராய வியாபாரியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு காலத்தில் பரதநாட்டியம் கூட 'தேவிடியாள் நடனம்' என அழைக்கப்பட்டது. அது இன்று ஒரு புனித கலை. சினிமாவில் நடித்தால் கிடைத்த  பட்டம் மோசமானது. ஆண் என்றால் கல்யாணம் பண்ண பெண் கிடைக்காது. அதுவே பெண் என்றால் 'அழகி' என்ற பெயர்  கிடைக்கும். இது உண்மையாகவே Hippocracy. இன்று அவர்கள் CELEBRITIES. இதுகூட பரவாயில்லை. சினிமா காலப்போக்கில் ஒரு நாகரீக தொழில் ஆகிவிட்டது. (இந்த சினிமாவின் அபிரிமிதமான பரிணாம வளர்ச்சியை நாம் இன்னொருநாள் பேசுவோம்).

சாராயம் விற்றவன் எல்லோரும் மொள்ளமாரி முடிச்சவிக்கி என்றே அழைக்கப்படுவார்கள். இன்று அவன்கள் எல்லாம் பெரும்புள்ளிகள். உருப்பட்டுவிடும்.  
காந்தியின் பொருள் ஒன்றை ஏலத்தில் வாங்கி இந்தியப்பெருமையை இந்த சாராயவியாபாரிதான்  காப்பாற்ற வேண்டி வந்தது. காந்தி ரொம்பவும் அகமகிழ்ந்து போயிருப்பார் போங்கள்.  

பட்டபகலில் கிரிக்கெட் பந்தயம் நடக்கும் மைதானத்தில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து பீர் குடிக்கிறான் அந்த சாராயம் காய்ச்சுபவன். யார் என்ன சொன்னார்கள்? யார் அவனை கைது செய்கிறார்கள்? பிரபல்யமாகும் ஆசையில் அவன் தயாரிக்கும் காலண்டருக்கு முற்றும் துறந்து போஸ் கொடுக்கிறார்கள் இளம்பெண்கள். இது சுரண்டல் இல்லையா? இளம்பெண்களின் அறியாமையை காசு பண்ணும் இந்தமாதிரி கிரிமினல்களை நடுரோட்டில் ஓடவிட்டு அடித்தாலும் தகும். ஆனால்  அவனை யார் என்ன செய்துவிட்டார்கள்? 

போங்கடா டே! கையில நாலு காசு இருந்தா இந்த நாட்டுல என்ன வேண்ணாலும்   போலிருக்குடா சாமி. நான் மட்டும் புலம்பவேண்டியதுதான். 
மக்களே! நான் எப்போதும் hippocratic -ஆக எழுதுகிறேன் என்ற விமர்சனம் வருகிறது. நல்லதை விடுத்து கெட்டதையே எழுதுகிறேன் என ஒரு கருத்து இருக்கிறது.  என்ன செய்வது? நாட்டில் நடப்பதை எண்ணி கொதிக்கும் என் இரத்தத்தின் துளிகளே இங்கும் தெறித்துச்சிதறி வீழ்கிறது. அதன் தீற்றல் தான் இவை.  








No comments:

Post a Comment