Wednesday, January 5, 2011

கீழ்வெண்மணி


ஐம்பது  பேர் வந்தார்கள் 
எல்லோர் கைகளிலும் பாசக்கயிறு 
எம் தெருவில் உள்ளோர் எல்லோரையும்
அடித்து சவட்டி துவைத்து போட்டார்கள்  

அடித்தவர்களின்  சாதிப்பெயர்களை 
அறிந்திருந்தான் அந்த பெரிய மனிதன் 
பெயரை விடுத்து சாதி விளித்து 
எங்கள் கைகள் பிணைக்க சொன்னான் 

குடிலோன்றில் அடைக்கப்பட்டோம்
என்னுடன் இன்னும் நாற்பது பேர் 
உள்ளிட்டு இறுகப் பூட்டினார்கள் 
என்னுடன் என் குடும்பமும் இருந்தது

தீயின் நாவுகள் சுட்டபோதுதான் 
நரகச் சுவையை அறிந்துகொண்டேன் 
தங்கையின் கூந்தல் பற்றியபோது 
என் தாயின் கூந்தலும் தழலானது.

நாற்பது தேகங்கள் நாற்பது திரிகள் 
நாற்பது தீபங்கள் பொசுங்கும் வாடை
எந்த கடவுளும் வரவே இல்லை 
வெளியில் வெறிச்சிரிப்பு ஓசை கேட்டேன் 

மூன்றாம் தோலை தீ சுடும்போது 
இனம் புரியாத குளிர்ச்சியை உணர்ந்தேன் 
கடந்த காதல் கடந்த காமம் 
கிட்டாத திருமணம் பெறாத பிள்ளை 

எல்லாம் வந்தது என் எண்ணத்தில் 
செயற்கையாய் பிரியும் உயிர்கள் எல்லாம் 
உணரும் வலியை நானும் உணர்ந்தேன் 
மீண்டும் பிறக்க நான் என்ன கிறுக்கா? 
  

No comments:

Post a Comment