Friday, December 31, 2010

குடி கும்மாளம் புத்தாண்டு

        பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று மாலை நீங்கள் வந்து பார்க்க வேண்டும். நாம் என்ன இந்தியாவில்தான் வசிக்கிறோமா அல்லது ஏதோ மேற்கத்திய நாடுகளில் இருக்கிறோமா என நீங்கள் வியப்பீர்கள். 
புத்தாண்டு கொண்டாட்டம் ஓர் இரவுக்குள் முடிந்துவிடும். ஆனால் அந்த இரவில் நடக்கும் நிகழ்வுகள் அப்படிப்பட்டது. செய்தித்தாட்களில் விளம்பரங்களைக் காணுங்கள். ஓர் இரவுக்கு ஐயாயிரம் ரூபாய். அதுவும் உங்கள் இணையுடன் தான் வரவேண்டும். டிஸ்க் ஜாக்கி என ஒருவன் வருவான். அவனுக்கு அந்த ஓட்டல்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும். சில ஓட்டல்களில் வெளிநாடுகளில் இருந்து கூட அவன் தருவிக்கப்படுவான். இந்த நள்ளிரவு விருந்துகளில் உணவும் சாராயமும் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் ஐயாயிரம் ரூபாய். 

ஆணும் பெண்ணும் குடித்து கும்மாளமடித்து வீடு சென்று சேரும்போது விடிந்திருக்கும். 
ஆஹா! இறைவனின் தரிசனத்தை ஏழையின் சிரிப்பில் அல்ல, பணக்காரர்களின் போதையில் நிச்சயம் கண்டு ரசிக்கலாம்!பேரின்பம்! பேரானந்தம்!  

மக்களே! இந்தியாவில் முன்னூறு மில்லியன் மக்கள் எப்போதும் பசியோடு இருக்கிறார்கள் (CHRONICALLY HUNGRY ). அறுநூறு மில்லியன் மக்கள் அவ்வப்போது பசியோடு இருக்கிறார்கள். (SEASONALLY HUNGRY ). மீதம் இருக்கிற நூறு மில்லியன் மக்களின் அட்டகாசம் தான் இவை. விவசாயம் பொய்த்து, கடன் கழுத்தை நெரிக்க, சென்ற வருடத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தை தாண்டுகிறது. இது மூன்று இந்தோ-பாகிஸ்தான் போர்களில் இழந்த உயிர்களைவிட அதிகம்.  

அந்த ஒருலட்சம் உயிர்களில் தொண்ணூற்று ஒன்பதாயிரம் உயிர்கள் மகாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தது. அந்த மாநிலங்களின் தலைநகரங்களுக்கு தினந்தோறும் வந்து சேரும்  இரயில்களில், தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தை சார்ந்த ஐம்பது இளம்பெண்களாவது
வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர்களில் பெரும்பாலானோர் செய்யத்துணியும் தொழில் என்னவென்று தெரியுமா? ஆந்திரத் தலைநகரிலும் சென்னையிலும் இந்த அவலம் மிக  அதிகம். 

சொந்த நாட்டுக்குள்ளேயே இவ்வளவு பேதங்கள். அமெரிக்கன் அதிகம் தின்கிறான் என குற்றம் சாட்ட உனக்கு என்ன தகுதி வந்துவிட்டது நண்பனே! உன் தேவைக்கு மீறிய பணம், மற்றோரிடமிருந்து பிடுங்கப்பட்டது எனப்புரிந்து கொள். நான் உழைத்தேன், நான் சம்பாதித்தேன், நான் செலவு செய்கிறேன் எனத் தற்குறி போல் எண்ணாதே. உன் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை நீ பெற்றிருந்தால் உன்னால் பணத்தை விசிற முடியாது நண்பா. விவசாயத்தை நம்பி, அரசை நம்பி, அரசின் கொள்கைகளை நம்பி, உரத்துறை  மந்திரியை நம்பி, அரசின் கடனை நம்பி, கந்து வட்டிக்காரனின் கருணையை நம்பி வாழும் ஒருவனின் அந்நிலைக்கு அவன் மட்டுமே காரணமில்லை.

யார் சொன்னார்கள் விவசாயம் செய்யச்சொல்லி? நீயும் software industry -க்கு வா என் அவனை நோக்கிக் கூறினால் , நீ அதற்கு மேல் மலத்தை மட்டுமே உண்ண முடியும் நண்பா. சோறு கிடைக்காது. Recycling தான். 

புதிய ஆண்டை கொண்டாடிக்கொள்ளுங்கள். வாழிய புத்தாண்டு. இந்த முறை சற்றே வேறு மாதிரி கொண்டாடுங்கள். இந்த ஒரு நாளாவது தானம் செய்யுங்கள். நீங்கள் செலவிடும் பணத்தை RURAL INFRASTRUCTURE DEVELOPMENT FUND -க்கு அனுப்பி வையுங்கள். FLOOD RELIEF -க்கு அனுப்புங்கள். பார்க்கலாம். என்னதான் ஆகிறது என்று. விடியும் வரை குடித்து, ஆடி விடிந்தபின் மூத்திரமாகப் போகும் சாராயத்திற்கு செலவிடாமல் வேறு விதமாகத்தான் செய்து பாருங்களேன்.  உதவுவதால் கிடைக்கும் போதை, சாராய போதையை விடப் பெரியது. இல்லையென்றால் அளவோடு குடித்து வளமோடு வாழ்ந்து, மீந்த பணத்தையாவது அனுப்புங்களேன். அதிக காசு கொடுத்து ஆங்கிலப்புத்தாண்டை அனுபவிக்க ஆங்கிலேயர்களுக்கு பிறந்தவர்கள் இருக்கிறார்கள். 

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment