Tuesday, November 15, 2011

ஈழ விடுதலை- புலிகளின் அணுகுமுறைக் குறைபாடுகள்



பாலஸ்தீனம், தனது சுய ஆட்சிக்காக, தன் இறையாண்மைக்காக ஐக்கிய சபையின் பொதுசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கும் இவ்வேளையில், தெற்கு சூடான் தனியாகப் பிரியும் இவ்வேளையில்,  நம் எல்லோருக்கும் தவிர்க்கவியலாத சிந்தனை ஒன்று எழுகிறது. இது ஏன் ஈழத்திற்கு நடக்கவில்லை- என்ற சிந்தனைதான் அது. இதனை நமக்கு நாமே வினவிக்கொண்டால் வெளிப்படும் உண்மை ரொம்பவும் கறுப்பாக, கசப்பாக உள்ளது.
நாடுகள் விடுதலை பெற, காலனி ஆதிக்கத்திடம் இருந்து மீண்டு கொள்ள, உலகில் நிகழும் விடுதலைப் போராட்டங்களை தீர்க்க ஐக்கிய சபையின் ஒரு அங்கமான TRUSTEESHIP COUNCIL அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில நாடுகள் அந்த கவுன்சிலின் உதவியால் விடுதலையும் பெற்றன. இப்போது அந்த கவுன்சிலின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எந்த விடுதலைப் போராட்டத்துக்கும் உலக அங்கீகாரம் கிடைப்பது சாத்தியமில்லை, நினைத்தாலும் அது நடக்காது.
விடுதலைப்புலிகள் அமைப்பு அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அன்ரன் பாலசிங்கமும் உயிரோடு இருந்தார். உலகெங்கும் உள்ள முன்னேறிய நாடுகளில் தமிழ்ஈழத்திற்கான ஆதரவுமிருந்தது. ஈழம் உருவாக எதிர்ப்பு தெரிவித்த ஒரே நாடாக இந்தியா மட்டுமிருந்தது. தன் கொல்லைப்புறத்தில் ஐக்கிய சபையின் மற்றும் அமெரிக்காவின் தலை தென்படுவதை விரும்பாததே அதற்கு காரணம். இந்தியாவின் இத்தகைய எதிர்ப்புகளை எளிமையாக கடந்து வந்திருக்க முடியும். உதாரணமாக நேபாளத்தில் ஐக்கிய சபையின் தலையீடு.

குறைந்தபட்சமாக, இந்தியா பரிந்துரைத்த பதிமூன்றாம் சட்டத்திருத்தத்தின்படியாவது புலிகள் இலங்கை அரசிடம் அதிகாரப் பகிர்வு செய்து கொண்டிருக்கலாம். அதனையும் புலிகள் மறுதலித்தனர். தனிநாடு என்ற கோரிக்கையில் மிக உறுதியாக இருந்தனர். இது ஒரு பாராட்டத்தக்க நிலை என்றாலும்கூட, தனி ஈழத்திற்கான உலகளாவிய முயற்சிகள் மிகக் குறைவாகவே எடுக்கப்பட்டன. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வெறுமனே, வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டுதலும், ஆயுதங்களை வாங்கிப்போட்டு தாக்குதலுக்கு தயாராவதும் தனிநாடு கோரிக்கைக்கு போதாது அல்லவே?! இதில் கொடுமை என்னவென்றால் அன்று அன்ரன் பாலசிங்கம் கூட சரியான ஆலோசனையைக் கூறவில்லை, சரியான முடிவை எடுக்கவில்லை.      

மேலும் ராஜீவ் கொலையால், தனக்கான ஆதரவை தானே இழந்துகொண்டது புலிகள் அமைப்பு. இந்தியாவில் தமிழ்மக்கள் உட்பட வடக்கிந்தியாவிலும் தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இருந்து வந்தது. அமைதிப்படை செய்த கொடுமைகளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ராஜீவ் கொலைக்கு, அமைதிப்படையின் அட்டூழியங்கள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அதனை வேறு சாத்வீகமான முறையில் கையாண்டிருக்கவேண்டும். ‘என்னைக் கொன்றான்!, நான் அவனைக் கொல்வேன்!’ என்பது ஒரு முட்டாள்தனமான வாதம். ஒரு பெரிய இயக்கம், உலகிலேயே மிக Deadlyயான ஒரு கெரில்ல இயக்கம், தனிநாடு கோரும் ஒரு இயக்கம், தன் எல்லா அடிகளையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டாமா?! அதன் சாதக பாதகங்களை அலசிப் பார்த்திருக்கவேண்டாமா? ராஜீவ் கொலையால் புலிகள் பெற்றதைவிட இழந்ததே அதிகம். பல நாடுகளில் தடை, இந்தியா உட்பட- நிதிகள் பெறுவதில், ஆயுதங்கள் பெறுவதில் எனப் பலவகையில் தடை! இதில் ஒன்றே ஒன்றைத்தான் புலிகள் பெற்றார்கள். அது பிரபாகரனின் தணிக்கவியலா தன்முனைப்பு தணிந்ததேயாகும். இதனை தன்முனைப்பு என்று அழைப்பதைத்தவிர வேறந்த பெயரிட்டும் அழைக்கமுடியாது.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி பதிமூன்றாம் சட்டத்திருத்தத்தையாவது புலிகள் ஏற்றிருக்கலாம். தனிநாடு கோரிக்கை என்பது தற்கால உலக அரசியலில் ஒரு செல்லாக்காசு! A demand which has lost its currency! இது இறையாண்மை உள்ள நாடுகளெல்லாம், அதனை சரண்டர் செய்து ஒரு யூனியனாக வாழும் காலம். ஐரோப்பிய யூனியன் அதற்கு மிகச் சிறந்த உதாரணம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றுமோர் உதாரணம். புலிகள் அதிகாரப்பகிர்வு மூலம் தம் நாட்டிற்குள்ளாகவே அமைதியாக வாழ்ந்திருக்கமுடியும். அதனைப் புலிகள் மறுக்க சொல்லப்பட்ட காரணம், இலங்கை அரசாங்கம் தமது வாழ்வியலைக் குலைக்கும் வாய்ப்பு, அதிகாரப் பகிர்வு அமைப்பில் இருப்பதாகப் புலிகள் கருதியதே! இது ஓரளவிற்கு உண்மை என்றாலும் கூட, ஐக்கிய சபையின் மேற்பார்வையில், அல்லது ஏரியா தாதாவான இந்தியாவின் மேற்பார்வையிலோ அதிகாரப்பகிர்வை உண்மையானப் பகிர்வாக மாற்றியிருக்கலாம். மேலும், தற்கால உலக அரசியலில் அதிகாரப்பகிர்வு ஒரு சிறந்த மாற்றுமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. யாருக்கும் தீங்கு இல்லை. One State, Two governments (Almost)! சீனாவில், இந்தியாவில், கனடாவில் என பல நாடுகளில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒரு முயற்சி.  ஆனால் அந்தோ, நடந்தது என்ன?! இந்த வாய்ப்பு உடனடியாகப் புலிகளால் மறுக்கப்பட்டது.

புலிகள் மற்றுமொரு தவறைச் செய்தார்கள். அது மலையகத்தமிழர்களின் ஆதரவை பெறாதது. மலையகத்தமிழர்கள் தங்களை ஒதுக்கப்பட்டவர்களாகவே நினைத்து ஒதுங்கிவிட்டனர்- அல்லது ஒதுக்கப்பட்டுவிட்டனர். இங்கு சில உண்மைகளைக் கூறவேண்டும். தமிழ்நாட்டில் எப்படி சாதிவெறி தலையெடுத்து ஆடுகிறதோ அதற்கு சற்றும் குறையாத, சொல்லப் போனால் சற்று அதிகமாகவே சாதிப் பிரிவினைகள், மற்றும் அதன் கொடுமைகளைக் கொண்டது இலங்கைத்தமிழ் சமூகம். மலையகத்தமிழர்கள் ஒதுக்கப்பட்டதற்கு பூர்வகுடி/வந்தேறி என்ற பிரிவினைகள் காரணமென்றாலும் சாதியும் ஒரு காரணம். புலிகள் மலையகத்தமிழர்களையும் தம்முடன் இணைத்துப்போராடியிருக்கவேண்டும். அதனை செய்யத் தவறிவிட்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து புலிகள் மேற்கொண்ட முஸ்லிம் விரட்டியடிப்புக்கு இதுவரை யாரும் தகுந்த காரணங்களைக் கூற முடியவில்லை. ஒரு சுத்தமான இந்து அமைப்பாக புலிகள் அமைப்பு செயல்பட்டது ஜீரணிக்கவியலாதது.

புலிகளின் மற்றுமொரு சறுக்கல் கருணா Factor. இது இலங்கை கருணா மற்றும் தமிழ்நாட்டுக் கருணாநிதி ஆகிய இருவருக்கும் பொருந்தும். தன் சகோதர இயக்கங்களை எல்லாம் வீழ்த்தி ஈழ விடுதலைக்கு தன் இயக்கத்தை தனிப்பெரும் குரலாக மாற்றிக்கொண்ட பிரபாகரன், இயக்கத்துக்குள்ளாகவே எழுந்த துரோகங்களைக் களையெடுத்த பிரபாகரன், கருணா பிரிந்தபோது சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. தனது வழக்கமானக் களையெடுப்பை பிரபாகரன் கையாண்டிருக்கவேண்டும். மாக்கியவல்லியை மறந்துபோனார் பாலசிங்கம். கருணா மூலம் தகவல்களைப் பெற்ற இலங்கை அரசு அதனை மிக சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டது.
அதேபோல் தமிழகக்கருணா! கருணாநிதியைப் பற்றி மூன்றே வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால் அவர் ஒரு ‘Credit Hungry Man’.  கருணாநிதியை சரியான விதத்தில் பயன்படுத்தத் தவறிவிட்டனர் புலிகள்.

விடுதலைப் போராட்டம் என்பது கொள்கை ரீதியாகத்தான் நடக்கவேண்டும் என்பதில்லை. தான் கொண்ட கொள்கையிலிருந்து சில சமயங்களில் விலகிச் சென்றுதான் ஆகவேண்டும். ஏனென்றால் விடுதலைப் போராட்டம் தனிமனிதனைச் சார்ந்ததல்ல. அது மக்கள் சார்ந்தது. மக்களின் நன்மையையே முதல் கருத்தாகக் கொண்டு போராளிக்குழு செயல்பட்டாக வேண்டும். புலிகள் மிகப்பிடிவாதமாக இருந்துவிட்டனர்!!

மேற்சொன்ன காரணங்களோடு இன்னும் சிலபல காரணங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலின. பிரபாகரன் நினைத்திருந்தால், கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். போரை இல்லாமல் செய்திருக்கலாம்.
சிங்கள இனவெறி அரசாங்கம் தமிழர்களை அழித்தொழிக்க முயன்றதும், கொத்தெறி குண்டுகளை வீசி கொலைகள் செய்ததும், மகளிரின் கருவறுக்கும் ஈனச்செயலை செய்ததும், பணக்கார முதலைகளின் முதலீட்டுக்காக இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்தியங்கள் போரை நடாத்திக்கொடுத்ததும் நேரடிக்காரணங்கள் என்றால் புலிகளின் செயல்பாடுகள் மறைமுகமான காரணங்கள்!
இதோ! புலிகளின் தலைவர் வாழ்ந்த ஆடம்பர பதுங்குகுழிகளைப் பாரீர்! என இலங்கை அரசாங்கம் இன்று மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது.  இந்திய முதலாளிகள் பணத்தைக் குவித்து தொழில் செய்யத் துவங்கிவிட்டனர். தன்முனைப்புக்குப் பலியான இயக்கம் என புலிகள் இயக்கத்தைப் பற்றி உலக கெரில்லக்கள் கூறுகின்றன.
இவை அனைத்தையும் புலிகள் தவிர்த்திருக்கமுடியும்.
தமிழ் ஈழ விவகாரம், வெறும் உணர்ச்சித்தூண்டலுக்கு மட்டுமே இப்போது பயன்படுத்தப்படுகிறது. உணர்ச்சிவயப்பட்ட சீமான் உள்ளிட்ட சில தலைப்பிரட்டைகள் கிடந்து குதிக்கின்றன. அவர் இயக்கத்தவர் எல்லோரும் ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்’ சின்னத்தை பச்சை குத்த வேண்டும் என அதிகாரப்பூர்வமின்றி அறிவுறுத்தப்படுகிறார்கள் போலத்தெரியவருகிறது. எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டு பச்சை குத்திய ர.ர.க்கள் இன்று முழுக்கை சட்டை அணிந்தேயிருக்கிறார்களே!

அறிவுப்பூர்வமாக ஈழப்படுகொலையை அணுகினால், தவறு இருபுறங்களிலுமே இருப்பது தெரிய வரும்! 

4 comments:

  1. //தமிழ் ஈழ விவகாரம், வெறும் உணர்ச்சித்தூண்டலுக்கு மட்டுமே இப்போது பயன்படுத்தப்படுகிறது. உணர்ச்சிவயப்பட்ட சீமான் உள்ளிட்ட சில தலைப்பிரட்டைகள் கிடந்து குதிக்கின்றன. அவர் இயக்கத்தவர் எல்லோரும் ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்’ சின்னத்தை பச்சை குத்த வேண்டும் என அதிகாரப்பூர்வமின்றி அறிவுறுத்தப்படுகிறார்கள் போலத்தெரியவருகிறது// இந்தத் தகவல் உங்களுக்கு எங்கிருந்துக் கிடைத்தது? ஆதாரமின்றி இப்படி நீங்கள் எழுதுவீர்களேயானால், மிகுந்த கண்டத்துக்கு உள்ளாவீர்கள்!

    ReplyDelete
  2. Good to see a nice article after a long time!!!
    Cheeeeeeeeeeers!!!
    Gunasekar.AP

    ReplyDelete
  3. Why i need an approval to post the comment!!!
    This is not true openness for the comments!! hope i will not post any comments in future!! Thanks!!
    Gunasekar.AP

    ReplyDelete
  4. பெயரில்லாத நண்பருக்கு! என் மற்ற கருத்துக்களை நீங்கள் ஒப்புக்கொண்டதைக் குறித்து நான் மகிழ்கிறேன்! 'புலிகளின் சின்னத்தை பச்சை குத்தும்படி தம இயக்கத்தவருக்கு அறிவுறுத்துவதாக அறியப்படுகிறது' என்றுதான் எழுதியிருக்கிறேன். அந்த என் கருத்தை நான் வேண்டுமானால் திரும்பப்பெற்றுக் கொள்கிறேன்! நீங்களே உங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளுங்கள். அக்கருத்தை நிறுவுவதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.

    ReplyDelete