Wednesday, March 16, 2011

பட்ட காலிலே படும்

ஜப்பானிய சுனாமி உண்டாக்கிய பேரழிவுகள் தொடர்கின்றன. இயற்கைக்கு ஏன் ஜப்பான் மேல் இப்படியொரு கோபம்? கால்கோள்களும் பிரளயங்களும் புராணங்களில் படித்ததோடு போய்விடக்கூடாதா? 2004 -ல் இந்துமாக்கடலில் ஊழித் தாண்டவம். இப்போது பசுபிக் பேராழியில்.  

சுனாமிகள், ஜப்பானுக்கு புதிதல்ல. சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானிய மொழியிலிருந்து தோன்றியதுதான். ஆனாலும் 8.9 ரிக்டர் பூகம்பம் சற்றே வழக்கத்துக்கு மாறானது. ரிக்டர் அளவை என்பது ஒரு Lograthmic Scale . அதாவது  9 ரிக்டர் என்பது 8 ரிக்டர் அதிர்வைப் போல 31 .5 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.  
0 .2 என்பது 0 .1 ரிக்டரை விட 3 .15 மடங்கு சக்திவாய்ந்தது. 


பொதுவாக கடலின் ஆழமும் பரப்பும் அதிகமாயிருப்பின், நிலநடுக்கங்களாலும், கடலினுள் ஏற்படும் நிலச் சரிவுகளாலும் தோற்றுவிக்கப்படும் ஆற்றல் அந்தக் கடலின் நீருக்குள்ளேயே கிரகிக்கப்படும். அதனை மீறிய ஆற்றலையே அது ஆக்ரோஷ அலைகளாக வெளிப்படுத்தும். பசுபிக் பேராழி உலகின் பெரிய பெருங்கடல். அதன் விரிந்த பரப்பையும் மீறி சுனாமியாக,  நிலநடுக்கத்தின் ஆற்றல் வெளிப்பட்டதென்றால், அந்த பூகம்பத்தின் வீரியம் எவ்வளவு இருந்திருக்கும்? 

ஜப்பானிய சுனாமி, வெறும் கடலலைகளோடு நிற்காமல்,  மிக மோசமான விளைவுகளையும் தந்துவிட்டுப் போயிருக்கிறது. 

ஜப்பானிய அணு உலைகளில் நான்கை அது போட்டுத் தள்ளிவிட்டு போய்விட்டது.  புகுஷிமாவில் மட்டும் 4 அணு உலைகள் வெடித்துவிட்டன. அணு உலைகள் கட்டுப்பாடற்று வெடிக்கிறது என்றால் அது அணு குண்டேதான்.  கட்டுப்படுத்தப்பட்ட அணுகுண்டே அணு உலை. அந்த வெப்ப ஆற்றலைக் கொண்டு நீராவியை உற்பத்தி செய்து Turbine -ஐ சுழலச் செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக, இப்போது ஜப்பானில் வெடித்துள்ளது நான்கு அணுகுண்டுகள்.  ஐயோ! அம்மா!


சாதாரணமாக மனிதனால் பொறுத்துக் கொள்ளக் கூடிய கதிரியக்கத்தைவிட 1000 மடங்கு அதிகக் கதிரியக்கம் இப்போது அந்த அணு உலைகளின் காம்பவுண்டுக்குள் நிலவுகிறது. அதுவே வெளியே 800 மடங்கு. 

சுனாமி வருவது ஜப்பானுக்கு புதிதல்ல என்பதால், அந்த அணு உலைகலெல்லாம் மிகுந்த பாதுகாப்புடனேயே வடிவமைக்கப்பட்டன என்றாலும் கூட இந்த விபத்தினைத் தவிர்க்க முடியவில்லை. இத்தனைக்கும்  உலக அணு ஆற்றல் கழகத்தின் (IAEA)பாதுகாப்பு விதிகளை முழுமையாகக் கொண்டது புகுஷிமா அணு உலைகள். 

இந்தியாவில் இருக்கும் ஒரு அணு உலைகூட IAEA -வின் தரக்கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் கல்பாக்கம், தாராப்பூர், கோட்டா (ரவட்பட்டா), கைகா, காக்ரபூரா, நரோரா ஆகிய இடங்களில் அணு உலைகள் உள்ளன. கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் நான்கு Light water reactors கட்டப்படுகின்றன. இவற்றில் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படக்கூடியவை கல்பாக்கம், கூடங்குளம் மற்றும்  நரோரா ஆகிய இடங்களில் உள்ளல அணு உலைகள். கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் சுனாமியால் ஆபத்துகள் நேரலாம். ஏற்கனவே ஒரு பிரளயம் வந்து ஒரு காட்டு காட்டிவிட்டு சென்றுவிட்டது.      

கூடங்குளத்தில் ஏற்கனவே நான்கு உலைகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும் நான்கு வருவதற்கான ஒப்பந்தங்களும் Feasibility report -ம் தயாராகிவிட்டன.  

நரோரா, இமய மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு ஊர். இந்தியப் புவித்தட்டும், யூரேஷியத்தட்டும் மோதிக்கொள்ளும், எப்போதும் அதிர்ந்து கொண்டும் உள்ள ஒரு பகுதி நரோரா. அங்கே வெறும் வலுவான ஒரு பூகம்பம் போதும், அந்த அணு உலையைத் தகர்க்க. அப்படிப்பட்ட வலுவான பூகம்பம் இதுவரை இமயமலை   அடிவாரத்தில் இன்னும் வரவில்லை என்றாலும், அது வரும் வரை நாம் காத்திருக்கக்கூடாது.

இந்தக் கொடும போதாதுன்னு, நம்மாளுங்க Nuclear Liability  மசோதா வேற போட்ருக்காங்க. அதன்படி, ஒரு வேளை ஏதாவது அணு உலை வெடிச்சதுன்னா, அந்த அணு உலைக்கு சொந்தக்காரன், ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல (ரூ.5000 கோடி) நஷ்ட ஈடா குடுக்க வேண்டியதில்ல-ங்கற சட்ட வரைவு.  இந்த சட்ட வரைவு எதுக்குன்னா, அப்பத்தான் அமெரிக்காகாரன் இங்க வந்து அணு உலை கட்டுவானாம்.  இது எப்டி இருக்கு? 

செத்த நாய் மேல எத்தன லாரி ஏறுனா என்னப்பா? 

இந்திய- அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தத்தின்படி அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்குள் அணு உலைகளைக் கட்டிக்கொடுக்கும். அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பங்குகளும் அளிக்கப்படும்.  

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால், தானும் கேட்டுக் குட்டிச்சுவராய்ப் போன நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துவிடும் போலிருக்கிறது. ஏகாதிபத்தியம் என்பது ஒரு ஒட்டுவார் ஒட்டி. 
ரத்த வெறிபிடித்த அமெரிக்க ஓநாய்கள் வீசிய அணுகுண்டுகளைத் தாங்கிய ஜப்பான், இன்று தன் அணு உலைகளாலேயே ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது! அமெரிக்க அணுகுண்டுகளால் வெளிப்பட்டக் கதிரியக்கத்தால் இன்னும் உடல் ஊனமாக, வெறும் தசைப்பிண்டமாகப் பிறக்கும் சிசுக்கள் ஏராளம்.  இப்போது மீண்டும் அணுக கதிர்வீச்சின் உக்கிரம். சுனாமியின் தாக்குதல் ஒரு சில நிமிடங்கள்தான்! அணுக்கதிர் வீச்சு ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீடிக்குமே! நினைத்தாலே மனம் பதறுகிறது. 

ஜப்பான் மீண்டு வர, மரித்த உயிர்களெல்லாம் அமைதி பெற எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுவோம். இயற்கையின் சீற்றத்தை தடுக்க மறந்த, கடவுள்களுக்கெல்லாம் திவசம் செய்வோம்!

இன்று ஜப்பான்! நாளை இந்தியாவாக  இருக்கலாம்! அப்படி ஒன்று நேர்ந்தால், தமிழ்நாடே சுடுகாடுதான்  மக்கா! ஜாக்கிரதை! 

No comments:

Post a Comment