Friday, March 11, 2011

பெங்களூரு-ன் வாகன நெரிசல்

பெங்களூரு  ஒரு மில்லியன் நகரம். அதாவது பத்து  லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும் ஒரு நகரம். இந்த மாதிரியாக இந்தியாவில் 35 நகரங்கள் உள்ளன (கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி). அதை விட முக்கியமான தகவல், இந்தியாவிலேயே அதிகமாக இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் உள்ள நகரம் பெங்களூரு. 


 பெங்களூரின் சாலைகளில் பெரும்பாலானவை மிகக் குறுகலானவை. அதற்குக் காரணம், பெங்களூர் திட்டமிடப்படாமல் வளர்ந்த ஒரு நகரம் என்பதே! ஒரு சாலை நான்காகப் பிரியும். அவை ஒவ்வொன்றும் மூன்று நான்காகப் பிரியும். கிட்டத்தட்ட ஒரு Maze போல. இவற்றில் One way பிரச்சினைகள் வேறு. ஒரு இடத்திற்கு நேர்வழியாகச் சென்றால் 2 கிலோமீட்டர் என்றால், வாகனத்தில் நீங்கள் பயணித்தீர்களென்றால் 3 கிலோ மீட்டராவது செல்ல வேண்டும்-சுற்றி சுற்றி. அத்தனை one way -க்கள். 


இத்தனை ஒருவழிச்சாலைகள் ஏன் ஏற்பட்டது? காரணம் அபிரிமிதமான வாகனப்பெருக்கம். 1990 -களின் துவக்கத்தில் பெங்களூர் ஒரு மென்பொருள் நகரமாக மாறத் துவங்கியது. தகுதிக்கேற்றவாரும், தகுதிக்கு மீறியும்  சம்பாதிப்போர், திடீர் மென் பொருளாளர்கள்,     ஆகியோர்கலெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வாங்கிக் குவித்தனர். மாட்டுக்கு லோன் தராத கொலைகார வங்கிகலெல்லாம் வாகனங்களுக்கு தாராளமாக கடன் கொடுத்தனர். இதனால் நடுத்தர, கீழ் நடுத்தர மக்களும் கூட கார் வாங்கவேண்டும் என்ற அவர்களின் பரம்பரை ஆசையை பூர்த்தி செய்துகொண்டனர்.          

திடீரென வாகனங்கள் பெருகியதைக் கண்ட கர்நாடக அரசு, சாலை வரியை (Road Tax ) தாறுமாறாக உயர்த்தியது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கர்நாடக பேருந்துகளிலெல்லாம் பயணக்கட்டணம் மிக அதிகம். அதற்கு காரணம் இதுதான்.  

அது ஒருபுறம் இருக்கட்டும். 


பெங்களூரின் வாகன நெரிசலுக்குக் காரணம், அந்நகர சாலைகள் குறுகலாக இருப்பதுதான். ஆனால் அந்த சாலைகளின் ஓரங்களில் வெள்ளைச் சுண்ணத்தில் ஒரு அம்பு குறியிட்டு 10m , 8m என எழுதப் பட்டிருப்பதைக் காணமுடியும். அவை என்னவென்றால், அந்த குறிப்பிட்ட சாலையில் எழுதப்பட்டிருக்கும் அகலத்திற்கு  உள்ள இடம் அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்பதே! அந்த அளவுக்கு நில ஆக்கிரமிப்பு பெங்களூரில் உள்ளது. அவர்களை காலி செய்யவோ, இடித்துத் தள்ளவோ கார்ப்பரேஷனால் முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் அரசியல் செல்வாக்கு உள்ளது. 

தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் முன் கோடி என்பது ஒரு பெரிய எண்ணாகத்தான் இந்தியா முழுவதும் கருதப்பட்டது. அதற்குப் பின் கோடியின் மதிப்பு ஏதோ கோடிச்சேலைக்குரிய   மரியாதையைப் பெற்றுவிட்டது. ஆனால் இன்னும் கோடி என்பது தமிழ் நடுத்தர மக்களுக்கு ஒரு எட்டாத எண்ணாகவேதான் உள்ளது. 
ஆனால் பெங்களூரின் கதை வேறு.  
பெங்களூரில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட ஒண்டுக் குடித்தனத்தின் விலை ஒரு கோடி. நல்ல வசதியான வீடு வேண்டுமென்றால் சில முதல் பல கோடிகளாவது வேண்டும். பெங்களூரில் உள்ள நடுத்தர வர்க்க மக்களே கோடியினை எளிமையாகத் தொட்டுவிடுகின்றனர். இவர்களில் ஒரு பெரிய கோடீஸ்வரன் தலைமை ஏற்க,  சிறிய கோடீஸ்வரர்கள் எல்லோரும்  அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி சாலை விரிவாக்கத்தினை எளிமையாகத் தடுக்கின்றனர். 

இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? 
  1. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்றவாறு சாலைகள் விரிவுபடுத்தப்படாததால், வாகன நெரிசல் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. மாலை நேரங்களில் ஆம்புலன்சுகள் கதறிக்கொண்டு வாகன நெரிசலில் நிற்பது பெங்களூரில் சகஜம் (அங்கு நீங்கிக்கொண்டிருக்கும் உயிரை நினைத்தால் நமக்கு மனம் பதறும். வாகன நெரிசலில், ஆம்புலன்சில் மரித்த உயிர்கள் அத்தனைக்கும் அரசு தானே பொறுப்பு? வேறு யார் பொறுப்பு? பெங்களூரில் மட்டும் ஆம்புலன்சில் ஏறிவிடாதீர்கள் - மரணம் நிச்சயம்)         
  2. வாகன நெரிசலைத் தவிர்க்க ஏற்படும் ஒருவழி சாலைகளால் வாகனங்களின் ஓட்டம் நகரத்தில் தேவைக்கு அதிகமாக நடக்கிறது. (2 KM க்கு பதில் 3 KM ) 
  3. தேவைக்கு அதிகமான  வாகன ஓட்டத்தால் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் தேவைக்கு அதிகமாக விரயமாகிறது. 
  4. இதன் தீவிளைவாக, வாகனங்களின் புகை சுற்றுச் சூழலை மிக மோசமாக, தேவைக்கும் அதிகமாக மாசுபடுத்துகிறது
ஆக, பெங்களூரின் உடனடித் தேவை சாலை விரிவாக்கமே! அரசோ கார்ப்பரேஷனோ செய்யவேண்டியவை என்ன? 
  1.  எந்த விதமான அரசியல் செல்வாக்குக்கும், பண பலத்திற்கும் அஞ்சாமல், அரசு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக கையகப்படுத்தவேண்டும்.  
  2. அவ்வாறு கையகப் படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் சாலைகளை விரிவுபடுத்தவேண்டும். இதனால் ஒருவழிச்சாலைகள் குறையும்- அதனால் எரிபொருள் பயன்பாடு, வாகனப் புகை குறையும்.
  3. சாலைகளை விரிவுபடுத்துதல் தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத்தில் பெருகவிருக்கும் வாகனங்களையும் கருத்தில் கொண்டிருக்கவேண்டும். 
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பெங்களூரு வாழத் தகுதியற்ற ஒரு நகரமாக, ஒரு Necropolis -ஆக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.   

இப்போது பெங்களூர் மெட்ரோ அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த அளவுக்கு வாகன நெரிசலைக் குறைக்கும் என்பது சந்தேகமே! சாலைகளை விரிவுபடுத்துதலே சிறந்த வழி.  

No comments:

Post a Comment