Monday, July 7, 2014

அறம் பாடியே கொல்வேன்!

உங்கள் கொலைகள் முரட்டுத்தனமானவை!
நாளங்களறுத்து நிணமும் குருதியும்
கொப்பளிக்கும் கொலைகள்!

சத்தமும் இரத்தமும் தெறிக்கும்
உயிர் பிரிவின் வலி 
கொல்பவனுக்கும் உண்டு!
அதை நான் அறிவேன்!

என் கொலைகள் மிக நுட்பமானவை
மன மாற்றங்களே என் கொலைகள்!
முதலில் இரையின் தலைக்குள் 
பூச்சிகளை புகுத்திவிடுவேன்!

அவை என் இரையை 
அரித்து அரித்துக் கொல்லும்!

சிலசமயங்களில் 
அறமென்னும் அறத்தால்
என் இரைகளை அறுப்பதுண்டு! 
அவைகளுக்கு சமயங்களில் கண்ணீர் வழிவதுண்டு!
குருதிப்பெருக்குகள் அறவே கிடையாது!

என் கொலைகளுக்கு 
எந்த தண்டனையும் கிடையாது!
சிலர் பாராட்டுவார்கள்!
சிலர் காறி உமிழ்வார்கள்!

அப்போது 

பொங்கி வரும் எச்சில் வெள்ளத்தை 
ஆனந்தித்துப் பருகித் திளைப்பேன்!

சமயங்களில் கலம்பகம் பாடுவேன்!
பெரும்பாலும் அறம் பாடியே கொல்வேன்!

No comments:

Post a Comment